26.1 C
Chennai
Thursday, Nov 14, 2024
ld4129
சரும பராமரிப்பு

வெயிலோ குளிரோ மழையோ

பனிக்காலத்தில் குளிரின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அதற்கேற்ற ஆடைகளை அணிகிறோம். சூடான உணவுகளை உண்கிறோம்.
மழைக்காலத்தில் மழைநீரின் பாதிப்புகளில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள குடையோ, ரெயின் கோட்டோ கொண்டு செல்கிறோம். கோடைக்காலத்தில் வெயிலின் கடுமையைத் தணிக்கிற மாதிரி உடை அணிகிறோம். குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்கிறோம்.

இப்படி மனிதர்களாகிய நாம் பருவநிலைகளுக்கு ஏற்ப எப்படி உணவு, உடை போன்றவற்றில் சில மாற்றங்களைப் பின்பற்றுகிறோமோ, அதே போல செடிகளுக்கும் பருவநிலைக்கேற்ற பராமரிப்பு அவசியமாகிறது.

செடிகளில் சிலது தன்னைத் தானே பருவநிலைகளுக்கேற்ப மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டவை. மொபிலிட்டி என்று சொல்லக்கூடிய நகரும் தன்மை குறைவு என்பதால் சிலவற்றுக்கு நம்முடைய உதவி தேவை. இப்போது இந்த விஷயத்தைப் பற்றிப் பேச என்ன அவசியம் என்கிற கேள்வி வரலாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதித்த வெள்ளப் பெருக்கில் நிறைய பேர் நிறைய இழந்தார்கள். அப்படி இழந்ததில் தோட்டங்களும் அடக்கம். இன்னொரு முறை இப்படியொரு இயற்கைப் பேரழிவு வரும் போது மற்ற எல்லாவற்றையும் எப்படிப் பாதுகாப்பது என்பது பற்றிப் பேசுவதைப்போல, செடி, கொடிகளைப் பாதுகாப்பது பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஏற்கனவே பாதிப்பை சந்தித்த செடி, கொடிகளை எப்படி மீட்பது என்பதையும் பார்ப்போம்.

முதலில் மழை…

மழை குறைவாகப் பெய்தாலும் செடிகளுக்குப் பிரச்னை. அதிகம் பெய்தாலும் பிரச்னை. மழையின் அளவு சராசரியாக இருந்தால் பிரச்னை இல்லை. இந்த முறை பெய்தது போல ஒரே நாளில் 50 செ.மீ. எல்லாம் பெய்தால் செடிகள் பாதிக்கப்படும். ஒவ்வொரு மழைக்குமான கால அளவு, பெய்கிற மழையின் அளவு இவற்றை வைத்துதான் அந்த மழையானது பயிர்களுக்குப் போதுமானதா, போதுமானதாக இல்லையா, தேவைக்கு அதிகமானதா என்பதைச் சொல்லமுடியும். மழை குறைவாக இருந்தால் செடிகளுக்கு நாம் தண்ணீர் ஊற்றி சமாளித்து விடலாம். மழை அதிகமாகிற பட்சத்தில் என்ன செய்வது?மழை அதிகமானால் செடிகளில் தண்ணீர் தேங்குவதுதான் முதல் பிரச்னை.

செடிகளைப் பொறுத்தவரை வாட்டர் லவ்விங் பிளான்ட்ஸ் என்று சொல்வோம். தோட்டத்தில் வளரக்கூடிய இது போன்ற செடிகளைத் தவிர மற்றவற்றுக்கு தண்ணீர் தேங்காமல் இருப்பதுதான் நல்லது. செடிகளுக்கு தண்ணீர் போதவில்லை என்றால்கூட, வாடிய இலைகளின் மூலமும் தொய்வடைந்த தோற்றத்தின் மூலமும் தனது தண்ணீர் தேவையை அவை நமக்கு உணர்த்தும். தேவையான தண்ணீரை ஊற்றியதும் செடிகள் மீண்டும் தழைத்துவிடும்.

ஆனால், தண்ணீர் தேங்கினால் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். வேர் அழுகல் பிரச்னை வரும். அதிலிருந்து செடிகள் மீண்டு வர ரொம்பவே சிரமப்படும். எனவே எப்போது தோட்டம் அமைப்பதானாலும் முதல் வேலையாக வடிகால் வசதியை சரியாக வைத்திருக்க வேண்டும். தண்ணீரைத் தேக்கினால் நல்லது… அப்போதுதான் நிலத்தடி நீரின் அளவு கூடும் என்றெல்லாம் நினைப்போம்.

ஆனால், செடிகளின் பக்கத்தில் செடிகள் இருக்கும் இடத்தில் தண்ணீரைத் தேக்கி வைப்பது சரியில்லை. மழைநீர் வீணாவதை விரும்பவில்லை என்றால் அதை ஒரு குட்டையிலோ, தொட்டியிலோ தேக்கி வைத்து அந்தத் தண்ணீரை நீங்கள் செடிகளுக்குப் பயன்படுத்தலாம். ஆனால், செடிகள் இருக்கும் இடத்தில் தண்ணீர் தேங்க நாம் அனுமதிக்கக்கூடாது. செடிகள் வைக்கும் போதே அதிகப் படியான தண்ணீர் ஓடி வடிகிற மாதிரியான அமைப்பைச் செய்து விட வேண்டும்.

சரி… எதிர்பாராத விதமாக மழையில் தண்ணீர் தேங்கிவிட்டது. அதை எப்படி சரி செய்யலாம்?

இந்தமுறை மழையில் அதிகத் தண்ணீர் தேக்கம் காரணமாக செடிகளின் இலைகள் எல்லாம் உதிர்ந்து, செடிகளுக்கு அழுகல் தன்மை வந்துவிட்டது. செடிகளில் பச்சையம் இருந்தால் செடிகளுக்கு வடிகால் வசதி மூலம் தண்ணீரை வடித்துவிட்டு அப்படியே ஒரு வாரம் விட்டு விட வேண்டும். அழுகலை நீக்குவது போன்று எதையும் செய்ய வேண்டாம்.

ஒரு வாரம் கழித்து புதிய தளிர்கள் ஏதேனும் வருகிறதா எனப் பார்க்க வேண்டும். புதுத் தளிர்கள் வந்த பிறகு காய்ந்தது, அழுகியதை எல்லாம் நீக்கினால் செடி தழைத்து விடும். செடி ரொம்பவும் பலவீனமாக இருக்கும் போது அதில் கை வைக்காமல் தண்ணீரை மட்டும் எடுத்துவிட்டால் போதும். இந்தப் பெருமழையில் செடிகளில் தேங்கிய தண்ணீரை எடுத்துவிடுவது இயலாத காரியமாக இருந்திருக்கும். ஆனால், சிறிய மழைகளில் அவ்வப்போது தேங்கிய தண்ணீரை எடுத்துவிட்டாலே செடிகளைக் காப்பாற்றி விடலாம்.

அடுத்தது குளிர்…

குளிர்காலத்தில் செடிகள் உறக்க நிலைக்குப் போய்விடும். கடுங்குளிர் காலத்துக்கு முன் இலை உதிர் காலம் வரும். இலைகளை உதிர்த்து விட்டு உறக்க நிலைக்குப் போய்விடும். உறக்க நிலையில் உற்பத்தி எதுவும் இருக்காது. அந்தக் காலத்தில் நிறைய தண்ணீர் ஊற்றி அவற்றைத் தூண்டி விடவும் வேண்டாம். மிகக் குறைந்த அளவு தண்ணீர் விட்டு அதை அப்படியே விட்டு விடலாம். குளிர்காலத்தில் பனி விழுவதால் இலைகளில் கருகல் வரும். இதற்கும் ஒரு தீர்வு இருக்கிறது.

அதிகாலையில் பனி பொழிந்து முடித்து, சூரிய வெளிச்சம் படர ஆரம்பிக்கிற நேரத்தில் செடிகளுக்கு லேசாக தண்ணீரை ஸ்பிரே செய்து விடலாம். இதனால் ஃபிராஸ்ட் இன்ஜுரியில் (Frost Injury) இருந்து செடிகளைக் காப்பாற்றிவிடலாம். அதே போல நிறைய செடிகள் நடுவதை இந்த சீசனில் செய்ய வேண்டாம்.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான சீசனில் மலைகளில் விளையக்கூடிய முள்ளங்கி போன்றவற்றை நடலாம். இந்தப் பருவத்தில் சாதாரண சீசனில் நடுகிற மாதிரி எல்லாவற்றையும் விதைக்க வேண்டாம். தை பிறக்கும் நேரம், அதாவது, ஜனவரி 15க்கு பிறகு புதிய செடிகள் நடுவதைப் பற்றி யோசிக்கலாம். குளிர் காலத்தில் இருக்கும் செடிகளை அப்படியே பராமரிப்பது போதுமானது.

மூன்றாவதாக கோடைக்காலம்…

வெயில் காலம் வரும் போது தக்காளிச் செடிகளில் காய்ப்பிடிப்பு குறையும். வெயில் காலத்தில் சூரிய வெளிச்சம் எவ்வளவு இருந்தாலும், செடிகளைச் சுற்றியுள்ள வெப்பநிலை என்பதுதான் மிகவும் முக்கியம். மண்ணும் அதிக சூடாகத் தொடங்கும். இந்த இரண்டு நிலைமைகளையும் சரி செய்தாலே கோடைக்காலப் பிரச்னைகளில் இருந்து செடிகளை காப்பாற்றி விடலாம்.

தண்ணீர் இல்லாமல் வாட ஆரம்பிக்கும் போது தண்ணீர் ஊற்றி விடலாம். மண் சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்ற நாட்களில் ஒரு வேளை தண்ணீர் ஊற்றுவோம். கோடையில் இருவேளைகள் தண்ணீர் ஊற்றலாம். எக்காரணம் கொண்டும் மதிய நேரம் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றக்கூடாது. அதிகாலை முதல் 9 மணி வரை அல்லது மாலை 4 முதல் 6 மணி வரை… இந்த இரண்டும் தான் தண்ணீர் விட உகந்தது.

கோடைக்காலத்தில் பழச் செடிகளிலும் பாதிப்பு வரும். சன் ஸ்கார்ட்ச் (Sun Scorch) வரும். இதற்கு நாம் ஏற்கனவே பார்த்தது போல கிரீன் ஷேடு நெட் எனப்படுகிற பசுமைக்குடில் அமைப்பு தீர்வாக அமையும். இந்தப் பசுமைக் குடில் அமைப்பானது மழைக்கும் பயன்படும். குளிர்காலத்தில் ஏற்படுகிற ஃபிராஸ்ட் இன்ஜுரியின் பாதிப்பிலிருந்தும் ஓரளவு செடிகளை காக்கும். கோடைக்காலத்திலும் வெயிலின் தாக்கத்தைக் குறைக்கவும் பயன்படும்.

பசுமைக்குடில் அமைப்பை ஒரு சின்ன இடத்தில் அமைத்திருந்தால்கூட, இது போன்று பாதிப்பு ஏற்படும் நேரங்களில் செடிகளை அந்த இடத்தில் மாற்றி வைத்துப் பாதுகாக்கலாம். பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் போது பசுமைக்குடிலின் கீழ் வைத்துவிட்டு, வெயில் வந்ததும் வெளியே எடுத்து வைக்கலாம். இதைத் தவிர்த்து கோடைக்காலம் முடிகிற போது ஆடிமாதக் காற்று வீசும். காற்று அதிகம் வீசும் போதும் அதன் பாதிப்பிலிருந்து செடிகளைக் காப்பாற்ற வேண்டும். காற்று பலமாக வீசும் போது செடிகள் வேரோடு சாய்ந்து விழக்கூடும்.

அந்த மாதிரி நாட்களில் பலமான காற்றைத் தாங்க முடியாத செடிகளுக்கு முட்டுக்கட்ட வேண்டும். சாதாரண காற்றை செடிகள் தாங்கிக் கொள்ளும். காற்றின் வேகம் அதிகமிருந்தால்தான் பிரச்னை. அதிலும் பெரும்பாலும் அவை வளைந்து கொடுக்கும். அதையும் மீறி வேகமாக காற்று வீசும் போது காய் பிடிக்கிற நேரம், பூக்களை உதிரச் செய்து விடும். அப்படி காற்றின் வேகத்தைத் தாங்காது என நினைக்கிற செடிகளுக்கு மூங்கில் குச்சிகளையோ அல்லது சவுக்கு குச்சிகளையோ செடிகளுடன் வைத்துக் கட்டிவிட்டால் காற்றின் வேகத்தில் பாதிக்கப்படாமல் காப்பாற்றும். வாழைத் தோட்டங்களுக்கெல்லாம் முட்டு கொடுப்பார்கள். இதுவும் அது போன்றதொரு சப்போர்ட்தான்.

செடிகளுக்கு சத்துக்குறைவு இருக்கிறதா, பூஞ்சான் தாக்குதலோ, நோய் தாக்குதலோ இருக்கிறதா என்றெல்லாம் கவனிப்பது போக பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்பவும் செடிகளை எப்படிப் பத்திரமாகப் பராமரிப்பது எனத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். செடிகள் பலமாகவும் வளமாகவும் இருந்தால் நோய் தாக்குதல்களில் இருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும். அதே போல பருவநிலை மாற்றங்களையும் சமாளிக்கும் திறன் அவற்றுக்கு இருக்கும். அதற்கு நம் தரப்பிலிருந்து முடிந்தளவு உதவிகளைச் செய்ய வேண்டும்.

செடிகளை நடுவதோ, தோட்டம் போடுவதோ பெரிய வேலையே இல்லை. பராமரிப்பு என்பதுதான் ரொம்பவும் முக்கியம். வருமுன் காக்கும் வழிகளைத் தெரிந்து கொண்டு செடிகளைப் பராமரிக்கும் போதுதான் தோட்டக்கலை என்பது ரசனையானதாக இருக்கும். இல்லாவிட்டால் என்ன செய்தாலும் செடிகள் சரியாக வளரவில்லை என்கிற விரக்தியே மிஞ்சும். அந்த விரக்தி வராமல் செடி வளர்ப்பை ஒரு கலையாக எடுத்துச் செய்யவேண்டுமானால் கொஞ்சம் அறிவியல் பூர்வமான அணுகுமுறையும் அக்கறையும் அவசியம். செடிகளைப் புரிந்து கொண்டு தோட்டக் கலையில் ஈடுபட்டீர்கள் என்றால் அதன் பலனை உங்களால் முழுமையாக அனுபவிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.ld4129

Related posts

முகத்தில் உள்ள அதிக எண்ணெயைப் போக்கி, அடைப்பட்ட துளைகளைத் திறந்து சருமத்தை பளிச்சிட உருளைக்கிழங்கு பேஸ்பேக்…!!

nathan

அரிசி கழுவிய நீர் எப்படி உங்களை அழகாக்கும்னு தெரியுமா?

nathan

ஒரு வாசலின் டப்பா உங்க எல்லா சரும பிரச்சனைகளை போக்கிவிடும் தெரியுமா?

nathan

பெண்களுக்கு ஏற்படும் சரும நோய்களை குறைக்கும் தாழம்பூ தைலம்

nathan

உள்ளங்கால் ரொம்ப அரிக்குதா? அப்ப இத படிங்க!

nathan

மகத்துவமான மருதாணி:

nathan

சரும அழகை அதிகரிக்க கடைகளில் விற்கப்படும் பொருட்களையெல்லாம். வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. அனைவரது வீட்டிலும் வளர்க்கப்படும் கற்றாழையைக் கொண்டே சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், சரும பிரச்சனைகளைப் போக்கி, சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ளலாம்.

nathan

இந்த பொருட்களை அடிக்கடி யூஸ் பண்ணுங்க… முகப்பரு அதிகமா வருமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கால்களை ஷேவிங் செய்யும் போது பெண்கள் செய்யும் தவறுகள் !!!

nathan