26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
beauty 2 jpg 16049
ஃபேஷன்

ஸ்லீவ்லெஸ் உடை… அடர் நிற லிப்ஸ்டிக் பெண்கள் – சமூக மதிப்பீடு என்ன?

அதிகாலைப் பூக்களின் இதழ்களில் அடர் வண்ணத்தில் மினுமினுப்பேற்றும் பனி ஈரம். அந்த பூவிதழை தூரத்து சூரியன் இதமாய் வருடும் பொன்னொளியில் மிளிரும் அழகோ, பார்க்கும் விழிகளில் மகரந்தம் பூசும். காலையில் குளித்த ஈரம் துவட்டி புதிதாய் உடுத்தி, கண்ணாடி முன் நின்றபடியே விழிகளை ஐகானிக்கால் ஷார்ப் செய்து, அடுத்து இதழ்களில் அடர் நிற லிப்ஸ்டிக் தீட்டும்போது என்னையும் அந்த பனிமலராய் உணர்ந்த தருணங்களே அதிகம். உடைகளுக்கு ஏற்ற வண்ணங்களில் லிப்ஸ்டிக்கும் அமைந்து விட்டால் அன்று நாள் முழுக்க உற்சாகம் ஒட்டிக் கொள்ளும். எனது மேக்கப் பாக்சில் சிவப்பு, பிங்க், வைன், பவழம் என்று அத்தனை வண்ண லிப்ஸ்டிக்குகளும் அடக்கம். இதெல்லாம் பெண்களின் பலமாக உணர்கிறேன்.

உடல் முழுக்கவும் மறைத்தபடி உடுத்துவதை விட என் தோற்றத்துக்கு மாடர்ன் உடைகள் நச்சென்று பொருந்தும். டிரண்டி டிரடிஷனல், மார்டன், வெஸ்டர்ன் என்று அத்தனை உடைகளும் எனது கலெக்சனில் உண்டு. அன்றைய கிளைமெட்டுக்கு ஏற்ப உடுத்திக் கொள்ளப் பிடிக்கும். விமர்சனங்களைப் பற்றி யோசிக்காமல் பிடித்ததை செய்வேன். என்றும் டிரெண்டில் இருக்க வேண்டும் என்பதில் நான் ஸ்ட்ரிக்ட். நான் இப்படி மட்டும் தான் இருப்பேன் என்ற ஒற்றை அடையாளத்தில் அல்லது ஒற்றைக் கருத்தில் ஒத்துப் போக மாட்டேன். நான் வேறு வேறாகவும், எனக்குப் பிடித்த மாதிரியும் இருக்கவே ஆசைப்படுகிறேன். எப்போதும் உற்சாகத்துடன் வளையவருவதே பிடிக்கும். அது என் உடையிலும் மேக்கப்பிலும் தெரிவது என் தன்னம்பிக்கையின் அடையாளம். ஒரு ஆண் எப்படி என்னைப் பார்க்கிறான் என்பதை மட்டுமே யோசித்தபடி என்னால் வாழ முடியாது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மேக்கப் அணியும் பெண்ணை சமூகம் பார்க்கும் பார்வைகள்தான் என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. ஸ்லீவ்லெஸ் அணிந்து, அடர் நிற லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு ஒரு மரத்தடியில் பஸ்ஸுக்காக அல்லது நண்பனுக்காக அல்லது சக தோழிக்காக நீங்கள் மாநகரங்களில் வெயிட் செய்பவர் என்றால் ‘வர்றியா’ என்கிற கேவலமான பேச்சைக் கேட்டு பதைபதைத்துக் கடந்து வந்தவராக இருப்பீர்கள். ஒருவருக்காக பொதுவெளியில் காத்திருக்கும் நேரமெல்லாம் நரகம் என்பதை ஒவ்வொரு பெண்ணும் தங்கள் வாழ்க்கையில் உணர்ந்திருப்பார்கள்.

ஒரு படி மேலே போய், பொதுவெளியில் பெண்களை உரசிக் கொண்டு போவது, பின்னால் தட்டுவது, மார்பில் கை வைப்பது என்று இந்த 2017 ஆண்டு கூட இந்த கொடுமைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய பாலிய சீண்டல்களின் உச்சகட்ட வடிவம் தான் வன்புணர்வு.

படிப்பு, வர்க்கம், தொழில், வயது… இவைகளைத் தாண்டி ‘இந்த’ விஷயத்தில் எல்லா ஆண்களும் பாரபட்சமில்லாமல் நடந்து கொள்கிறார்கள்.
நான் வேலைக்குச் செல்ல ஆரம்பித்த இந்த 13 வருடங்களில் அலுவலகங்களிலும், பொதுவெளியிலும் நான் சந்தித்த பாலியல் அவலங்கள் எண்ணிலடங்காது. ஆபீஸ் சேல்ஸ் மீட்டிங்குகளில் அதிகம் விவாதிக்கப்பட்டது என்னுடைய லிப்ஸ்டிக் பற்றிய விவாதங்களாகத்தான் இருந்தன. பெண் பார்க்க வந்த ஆண்களும் "நீங்க ஏன் இவ்ளோ டார்க் கலர்ல லிப்ஸ்டிக் யூஸ் பண்றீங்க" என்கிற கேள்வியைக் கேட்கத் தவறியதேயில்லை.

‘மேக்கப் போடுற, மாடர்ன் டிரஸ் போடுற பொண்ணுங்களுக்கு திமிர் அதிகம் இருக்கும்” என்று என் ஆண் நண்பர்கள் பெண்களைப் பற்றி பேசுவதை அதிகம் கேட்டிருக்கிறேன்.

பெண்கள்

அணியும் உடைகளைத் தாண்டி, தோற்றங்களைத் தாண்டி பொதுவெளிக்கு வரும் எல்லாப் பெண்களுக்குமே பாலியல் ரீதியான ஆபத்துக்கள் நேர்கிற போதிலும், சற்றே நவநாகரிகமான பெண்களுக்கு ஆபத்துக்கள் வேறு வேறு வடிவில் வருகின்றன என்பதே நிதர்சனம். இதற்கெல்லாம் தூண்டுகோலாய் பொது விளம்பரங்களும் அமைந்துவிடுகின்றன. பால் பொருட்கள் விளம்பரத்தில் வரும் அம்மாக்கள் பாந்தமாகவும், சற்று கிளர்ச்சி கூட்டப்பட்ட விளம்பரங்களில் பெண்கள் அதிக ஒப்பனையோடு வலம் வருவார்கள். காலம் காலமாக ஆண்கள் மனதில் பெண்களைப் பற்றிய பார்வை இப்படியே விதைக்கப்படுகின்றது.

சினிமாவிலும் ஹீரோக்களை மயக்கும் பெண்கள் நவீன உடைகளிலும், வில்லிகள் அதிக ஒப்பனைகளிலும் வருவது போலவே சித்தரிக்கப்படுகிறது . தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திரம் நடித்த ஒரு முக்கிய படத்தில் பாவாடை தாவணி அணிந்த பெண் ‘மங்களா’ என்றும், மாடர்ன் உடையணிந்த பெண் ‘ஐட்டம்’ என்றும் காமெடியனுடன் வசனம் பேசுவார். பெண்களின் தோற்றத்தை வைத்து ‘கலாசார அறிவுரை’ என்கிற பெயரில், அவர்களை இழிவுபடுத்தும் ஹீரோக்களை தெய்வமாக கருதும் இளைஞர்கள், இதே மனநிலையிலேயே பெண்களைப் பார்க்கின்றார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை .

இதே மனநிலை மீம்ஸ்களிலும் வெளிப்பட ஆர்மபித்துவிட்டது. லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்களை பாலோயர்களாக கொண்ட ஆண்களுக்கான வலைப்பக்கம் ஒன்றில் ‘துப்பட்டா போட்ட பெண்களை மட்டும் கையெடுத்து கும்பிட தோன்றுகிறது’ என்கிற கருத்தை பதிவு செய்ய, அதற்கு ஆண்களிடையே பாராட்டு குவிந்து ஷேர் எகிறுகிறது.

முன்னேற்றத்தின் பாதையில் பெண்கள் விரைந்து கொண்டிருக்கும் வேலையில் நொடிக்கு நொடி அவர்களைப் பாலியல் ரீதியாக அணுகுவது பெண்களை அடிமைப்படுத்தும் செயலன்றி வேறேதும் இல்லை. ‘ நீ வெளியே வந்தால், நான் உன்னோடு போட்டி போட்டு ஜெயிப்பதை விட, உன்னை பாலியல் ரீதியாக சீண்டினாலே நீ முடங்கிப் போவாய்’ என்பதுதானே இந்த பிரச்னைகளின் நோக்கமாகப்படுகிறது.

சில ஆண்களின் இந்த நோக்கத்தை இப்போதைய பெண்கள் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். நான் முன்னேறுவேன், பொதுவெளியில் தைரியமாக இயங்குவேன்… யார் என்னை எந்த பெயர் வைத்து கிண்டலடித்தாலும், நான் அதுவாக ஆகமாட்டேன். என் உடல், இயற்கை எனக்கு அளித்த வரம். அதன் வடிவம் அழகானது. அதை அழகுபடுத்துவது என்னுடைய தனி மனித சுதந்திரம். சில ஆண்களின் வக்கிரபுத்திக்கு என் உடையோ, நான் அணிந்துகொள்ளும் ஒப்பனையோ எந்த விதத்திலும் காரணம் இல்லை என்பதை பெண்கள் உணர்ந்தாலே பொதுவெளியில் நடக்கும் சம்பவங்களினால் மனம் உடைந்துபோகாமல் கம்பீரமாக நடக்கலாம். பதுங்கப் பதுங்கத்தானே தொல்லைகள் தொடரும்? சீண்டினால் முடங்காமல் கேள்வியெழுப்பினாலே பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

beauty 2 jpg 16049

Related posts

ஆடைகளின் அரசி சேலை

nathan

உங்கள் செல்ல குழந்தையை தேவதையாக காட்டும் நகை, உடை

nathan

இன்றைய இளம் பெண்கள் உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை அணிவது உடலுக்கு நல்லதா ?

nathan

மெஹந்தி என்ற பெயரில் வடமொழி சொல்லில் அழைக்கப்படும் மருதாணி

nathan

இதை ஆரோக்கியத்துக்குரியதாகவும் தேர்வு செய்வது அவசியம்…….

sangika

மோதிர விரலில் உள்ள சுவாரசியம் என்ன? இதோ தெரிந்துக் கொள்ளுங்கள்…!

nathan

கோடைகாலத்திற்கு ஏற்ற குளிர்ச்சியான ஆடைகள்

nathan

உலகின் விலையுயர்ந்த அழகிய காலணிகள்

nathan

நிறம் என்பது வெறும் நிறமே!

nathan