முகத்தின் அழகு கண்களில் தெரியும். கண்களை அழகுபடுத்துவதன் மூலம் மற்றவர்களை கவர முடியும். இன்று கண்களுக்கு மேக்கப்போடுவது எப்படி என்று பார்க்கலாம்.
கண்களுக்கு மேக்கப் போடுவது எப்படி?
கண்களை அழகாக காட்ட :
முதலில் உங்கள் சரும நிறத்துக்கேற்றபடியான ஒரு பேஸ் கலரை கண்களுக்கு மேல் தடவவும். அடுத்து பேஸ் கலரைவிட சற்றே டார்க் நிற ஷேடை அதற்கு மேல் தடவுங்கள். முதலில் தடவிய ஐ ஷேடோவின் கலர் பிரஷ்ஷில் ஒட்டியிருக்கும் என்பதால் அதை ஒரு டிஷ்யூ அல்லது துணியில் துடைத்துவிட்டு அடுத்த கலரை தடவவும். அல்லது வேறொரு பிரஷ் உபயோகிக்கவும். இல்லாவிட்டால் இரண்டு கலர்களும் ஒன்றாகி, நீங்கள் விரும்பும் ஷேடு வராமல் போய்விடும்.
ஐ லைனர் :
கண்களின் மேல் மற்றும் கீழ் பக்கங்களில் ஐ லைனர் தீட்டுவதன் மூலம் கண்களின் வடிவமும் அழகும் இன்னும் பல மடங்கு மேம்படும். ஐ லைனர்களில் இன்று நிறைய ஷேடுகளும் வகைகளும் கிடைக்கின்றன. வாட்டர் ப்ரூஃப் ஐ லைனர் என்பது கண்களின் வெளியே கொஞ்சம்கூட கசியாமல் நீண்ட நேரத்துக்கு அப்படியே இருக்கும்.
எப்படி உபயோகிப்பது? :
கீழே ஐ லைனர் போடும் போது, கண்களின் உள்ளே செல்லாதபடி, அதே நேரம் கண்களின் விளிம்பை ஒட்டியபடி தடவ வேண்டும். ஐ லைனரிலும் இன்று நிறைய கலர்கள் கிடைக்கின்றன. இதையும் உடைக்கு மேட்ச்சாகும்படி தேர்ந்தெடுக்கலாம். பார்ட்டிக்கு போகிற போது பச்சை, நீலம் போன்ற கலர்களை தேர்ந்தெடுக்கலாம்.
பாரம்பரிய உடை அணிந்து, பாரம்பரியமான ஒரு நிகழ்ச்சிக்குப் போகிற போது கருப்பு நிற ஐ லைனர்தான் சிறந்தது. ஐ லைனர் க்ரீம், கேக், பென்சில் வடிவங்களில் கிடைக்கிறது. தினசரி உபயோகத்துக்கு பாட்டிலில் கிடைக்கிற ஐ லைனர் அல்லது பென்சில் ஐ லைனர் சிறந்தது. கேக் ஐ லைனரானது அழகுக்கலை நிபுணர்கள் உபயோகத்துக்குத்தான் சரியாக வரும்.
எப்படி அகற்றுவது? :
எக்காரணம் கொண்டும் இரவு படுக்கும் போது ஐ லைனர் உள்ளிட்ட எந்த மேக்கப்பும் சருமத்தில் இருக்கவே கூடாது. சிறிதளவு பஞ்சை வெதுவெதுப்பான தண்ணீரில் நனைக்கவும். ஒரு சொட்டு தண்ணீர் அளவுக்கு பெட்ரோலியம் ஜெல்லியை அந்த பஞ்சில் எடுக்கவும்.(அளவு இதைத் தாண்டக்கூடாது). இந்தப் பஞ்சை வைத்து ஐ லைனரை மெதுவாகத் துடைத்து எடுக்கவும். பஞ்சானது முழுக்க கருப்பானதும் வேறொரு பஞ்சை இதே போல உபயோகித்து முழுவதையும் சுத்தம் செய்யவும். பிறகு மைல்டான கிளென்சர் வைத்து முகத்தை சுத்தப்படுத்தவும் அல்லது வாசனையற்ற பேபி ஆயிலை கொண்டும் ஐ லைனரை துடைத்து எடுக்கலாம்.
மஸ்காரா :
மஸ்காரா என்பது கண் இமைகளை நீளமாக, அடர்த்தியாக, அழகாகக் காட்டக்கூடியது. கருப்பு மட்டுமின்றி, பச்சை, நீலம், டிரான்ஸ்பரன்ட் ஷேடுகளில்கூட மஸ்காரா கிடைக்கிறது. பார்ட்டிக்கு போகிறவர்கள் கருப்பு தவிர்த்த மற்ற கலர் மஸ்காராவையும், வேலைக்குச் செல்பவர்கள் கருப்பு மஸ்காராவையும் உபயோகிக்கலாம். இமைகளை நீளமாகக் காட்ட, அடர்த்தியாகக் காட்ட, சுருளாகக் காட்ட, தனித்தனியாகக் காட்ட என ஒவ்வொன்றுக்கும் ஒருவித மஸ்காரா கூட வந்துவிட்டது. வாட்டர் ப்ரூஃப் மஸ்காரா மீடியா பெண்களுக்கும், நடிகைகளுக்கும், நீச்சல் அடிப்பவர்களுக்கும் ஏற்றது.
கடைசியாக காஜல் :
காலம் காலமாக கண்களை அழகுப்படுத்துவதில் தவிர்க்க முடியாதது காஜல் என்கிற கண் மை. எந்த மேக்கப்பும் இல்லாமல் வெறுமனே மை மட்டும் வைத்தாலே, அந்தப் பெண்ணின் முகம் பளீரென வசீகரிக்கும். முன்பெல்லாம் வீட்டிலேயே சுத்தமான முறையில் தயாரித்த மையை பெண்கள் உபயோகித்தனர். இன்று மையின் வடிவம் மட்டுமின்றி, நிறங்களும்கூட மாறிக் கொண்டிருக்கின்றன. ஆமாம். கருப்புக்கு அடையாளமாகக் காட்டப்பட்ட மை, இன்று பச்சை, நீலம், பிரவுன், கிரே மற்றும் வெள்ளை நிறங்களில்கூட வருகிறது.
மை வைத்துக் கொள்ள ஆசைதான். ஆனாலும், அது வழிந்து வெளியே வரும். கண்கள் கலங்கினால் கலைந்து போகுமே எனக் கவலைப்படுகிறவர்கள், சாதாரண மையை உபயோகிக்க வேண்டாம். இப்போது வாட்டர் ப்ரூஃப் காஜல்கள் கிடைக்கின்றன. அடர்கருப்பு நிறத்தில், வைத்துக் கொள்ள எளிதாக, அதே நேரம் 10 மணி நேரம் வரை கலையாமல் இருக்கக்கூடியவை. கண்ணீரோ, தண்ணீரோ பட்டாலும் கலையாது.
மை வைத்துக் கொள்ள விரும்புவோர் கட்டாயம் இரவு தூங்குவதற்கு முன் அதை நீக்க மறக்கக்கூடாது. சுத்தமான பஞ்சை மேக்கப் ரிமூவரில் தொட்டு, மை இட்ட இடத்தில் துடைத்து எடுக்கலாம். அதன் பிறகு வழக்கம் போல முகம் கழுவ வேண்டும். பஞ்சு அல்லது காதை சுத்தப்படுத்துகிற பட்ஸை ஆலிவ் ஆயிலில் தொட்டும் மையை அகற்றலாம்.