தற்போதைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு மெட்டியை போல, ஆண்களுக்கு சொட்டை ஓர் அடையாள சின்னமாகி வருகிறது. அதிலும் சிலருக்கு திருமண பரிசாகவே சொட்டை வந்துவிடுகிறது. உணவுப் பழக்கவழக்கம், குடும்ப மரபணு தொடர்ச்சி என எதை வைத்து பார்த்தாலும் ஏன் ஆண்களுக்கு மட்டும் அதிகமாக முடி உதிர்வும், சொட்டையும் விழுகிறது?
ஆண்களை பொறுத்த வரை பணம், நகை இழந்தால் கூட வருத்தப்பட மாட்டார்கள், ஏனெனில் அதை திரும்ப சம்பாதித்துவிடலாம். ஆனால், முடியை இழந்தால் மீண்டும் பெற முடியாது. உங்களுக்கு தெரியுமா, வேலை, துன்பத்தை விட அதிக அளவு ஆண்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்குவது இந்த முடி உதிர்வும், சொட்டை விழும் பிரச்சனை தான்.
இனி, ஏன் பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக முடி உதிர்கிறது என்பதுக் குறித்துக் காணலாம்…
ஆண்ட்ரோஜன் வாங்கிகள்
சுற்றுசூழல் தன்மை ஆண்களுக்கு முடி உதிர்வு ஏற்பட பெரிய காரணமாக இருக்கிறது. மாசுப்பட்ட புகை, மற்ற மாசுகளின் தாக்கம் அதிகம் ஆண்களுக்கு தான் ஏற்படுகிறது. இதுமட்டுமில்லாது, அவரவர் குடும்ப ஆண்ட்ரோஜன் வாங்கிகளின் திறன், மயிர்கால்களுக்கு வலுக்கொடுத்தல் போன்றவையும் முடி உதிர்வு ஏற்பட காரணங்களாக இருக்கின்றன.
டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (Dihydrotestosterone)
டெஸ்டோஸ்டிரோனின் துணைப் பொருளானது டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன். டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கும் போதும், இதன் பாதிப்புகளின் காரணமாய் பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக முடி உதிர காரணமாக இருக்கிறது.
முப்பத்தி ஐந்து வயது
பெரும்பாலும் மூன்றல் ஓர் ஆணுக்கு, அவரது முப்பத்தி ஐந்து வயதில் முடி உதிர ஆரம்பிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் இந்த தருணத்தில் அவர்களுக்கு 35 – 80% வரை முடி உதிர்வு ஏற்படுகிறது. இவ்வளவு அதிகமாக முடி உதிர்வு ஏற்பட காரணம், மரபணுவோடு சேர்ந்து மன அழுத்தம், சீர்கேடான உணவு முறைகளும் சேர்ந்திருப்பதே என்றுக் கூறப்படுகிறது.
மாதவிடாய் இறுதி
பெண்களுக்கு பெரும்பாலும் அவர்களது மாதவிடாயின் இறுதி அல்லது நிற்கும் காலத்தில் தான் முடி உதிர்வு ஏற்படுகிறது. எனவே தான் அவர்களுக்கு பெரும்பாலும் ஆண்களை போல அதிகமான முடி உதிர்வு ஏற்படுவதில்லை. இதற்கும் டெஸ்டோஸ்டிரோன் காரணம்.
சூட்டை குறைக்க வேண்டும்
இன்று நம்மவர்கள் பலர் விதவிதமான ஸ்டைலுக்காக தலை முடிக்கு ஹீட்டர் மற்றும் ட்ரையர் பயன்படுத்துகின்றனர், இது உங்களுக்கு அதிகமான முடி உதிர்வை ஏற்பட காரணமாக இருக்கிறது. எனவே, இதைக் குறைத்துக் கொள்வது நல்லது.
மருந்துகள்
உடல்நலத்திற்காக உட்கொள்ளும் மருந்துகள் கூட முடி உதிர்வு அதிகமாக ஓர் காரணமாக இருக்கிறது. எனவே, மருந்து உட்கொள்ளும் போது, அது உங்களுக்கு முடி உதிர்வை அதிகரிக்க கூடியதா என தெரிந்துக் கொள்வது அவசியம். இது குறித்து உங்களது மருத்துவரிடம் ஆலோசித்து மருந்துகள் சாப்பிடுவது நல்லது.
உணவு முறை மாற்றங்கள்
உங்கள் கூந்தலுக்கும் ஊட்டச்சத்து தேவை என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும், இரும்புச்சத்து, ஜிங்க், வைட்டமின் டி, புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் போன்ற சத்துகள் நிறைந்த உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டியது அவசியம். வறுத்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், மற்றும் அதிகமான ஐஸ்கிரீம் உணவுகளை தவிர்ப்பது நல்லது.