பெரியவர்கள் நாளொன்றுக்கு 75 முதல் 125 முடிகள் வரை இழக்கிறார்கள். அவற்றில் சில முடிகள் வளர்ச்சியின்றி, அப்படியே நின்று விடுவதுண்டு. சில முடிகள் புதிதாக முளைப்பதும் உண்டு. இந்தச் செயல் சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிற வரை கூந்தல் உதிர்வதும் திரும்ப முளைப்பதும் தொடரும். இந்த இயக்கத்தில் ஏதேனும் கோளாறுகள் வந்தால் முடி உதிர்வு நிரந்தரமாகும்.
கூந்தல் உதிர்வுக்கான மிக முக்கிய காரணங்களில் மன அழுத்தமும் சூழல் மாசும் தவிர்க்க முடியாதவை. நிரந்தரக் கூந்தல் உதிர்வுக்கான வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது Platelet Rich Plasma என்கிற நவீன சிகிச்சை.
இது சுருக்கமாக PRP Therapy என அழைக்கப்படுகிறது.அதென்ன பி.ஆர்.பி?ஒருவரது சொந்த ரத்தத்தைப் பயன்படுத்தி, அதிலுள்ள பிளேட்லெட் மிகுந்த பிளாஸ்மா கூறுகளை எடுத்து கூந்தல் உதிர்வுள்ள இடங்களில் செலுத்தி கூந்தலுக்கு மறுபடி உயிர் கொடுக்கச் செய்கிற சிகிச்சை. பிளேட்லெட்டுகளில் வளர்ச்சிக்குக் காரணமான காரணிகள் இருக்கும். அவை உடலின் செல்களைத் தூண்டி, அவற்றுக்குப் புத்துணர்வு ஊட்டும்.
சாதாரணமாக ஒருவரது ரத்தத்தில் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை 150,000/μl முதல் 350,000/μl வரையிலும் சராசரியாக 200,000/μlம் இருக்கும்.(μl என்ற குறியீடு மைக்ரோலிட்டர் என்ற அளவீட்டைக் குறிக்கும்.) பி.ஆர்.பி என்பது ஒருவரது ரத்தத்தில் இருந்தே உற்பத்தி செய்யப்படுவதால் அது தொற்றுநோய்களின் தாக்குதல்களுக்கு உட்படாதது.
பி.ஆர்.பி சிகிச்சை எப்படி வேலை செய்கிறது?
பி.ஆர்.பியில் உள்ள அடர்ந்த பிளேட்லெட்டுகளில் பயோ ஆக்டிவ் புரதச் சத்து மிகுதியாக இருக்கும். அதில் Platelet Derived Growth Factor(PDGF) மற்றும் Vascular Endothelial Growth Factor(VEGF) ஆகிய இரண்டும் இருக்கும்.
இவை பழுதடைந்த திசுக்களை சரிசெய்து கூந்தல் வளர்ச்சியைத் தூண்டும். வளர்ச்சிக்குக் காரணமான காரணிகள் விடுவிக்கப்படும்போது திசுப் பழுது சீராவதுடன் கொலாஜன் உற்பத்தி தூண்டப்பட்டு கூந்தலின் வேர்க்கால்களின் இயக்கம் சரி செய்யப்படுகிறது. வழுக்கை விழுந்த இடங்களில்கூட பக்க விளைவுகள் இன்றி மீண்டும்
முடி வளரச் செய்கிற அற்புத சிகிச்சை இது.
பி.ஆர்.பி சிகிச்சையானது அறுவை சிகிச்சைகளிலும் காயங்களை ஆற்றும் சிகிச்சைகளிலும் பல காலமாக செய்யப்பட்டு வருவதுதான். பல் மருத்துவம், எலும்பு மருத்துவம் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற துறைகளில் பி.ஆர்.பி. தொழில்நுட்பம் சமீப காலமாகத்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இது ஆண், பெண் இருவருக்கும் பொருத்தமானது. அலோபேஷயா அரியேட்டா எனப்படுகிற வழுக்கை பிரச்னையை சந்தித்தவர்கள் ஸ்டீராய்டு மருந்துகள்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு இந்த சிகிச்சை சரியான மாற்று. 4 முதல்6 சிகிச்சைகளிலேயே நல்ல மாற்றம் காணலாம். மொத்த தலையும் வழுக்கை விழுந்தவர்களுக்கு இந்த சிகிச்சை உதவாது. வழுக்கையின் நிலைகளைப் பொறுத்து மருத்துவர் அந்த நபருக்கு பி.ஆர்.பி சிகிச்சை உதவுமா என்பதை முடிவு செய்வார்.பக்க விளைவுகள் உண்டா ?
வலிகளோ, பயங்கரமான பின் விளைவுகளோ அற்ற சிகிச்சை இது. லேசான வீக்கம், சிவந்து போவது போன்ற சின்ன விளைவுகள் மட்டும் இருக்கும். அதுவும் சில நாட்களுக்கே. ஒவ்வாமையையோ, தொற்றையோ ஏற்படுத்துவதில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டும். சிகிச்சைக்குப் பிறகும் குறிப்பிட்ட நாட்களுக்கு பராமரிப்பு முக்கியம். மொத்தத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படாத முறை இது.
பக்க விளைவுகள் இல்லாதது. பாதுகாப்பானது. சீக்கிரமே இயல்பு நிலைக்குத் திரும்பலாம். அழகான, இயற்கையான கூந்தலுக்கு உத்தரவாதம் தரக்கூடிய சிகிச்சையும்கூட.இதேபோல் Mesotherapy, Gene therapy என்ற இன்னும் முக்கியமான இரண்டு சிகிச்சைகள் இருக்கின்றன. பி.ஆர்.பிக்கு இணையாக சமீப காலங்களில் அதிகம் செய்யப்படுகிற சிகிச்சைகள் இவை. இவைகளைப் பற்றியும் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.
பி.ஆர்.பியைப் போலவே மீசோதெரபியிலும் அறுவை முறை கிடையாது. ஊசியின் மூலமே கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டங்கள் இதில் செலுத்தப்பட்டு விடும். மயக்க மருந்தோ, கட்டுகளோ தேவையிருக்காது. சிகிச்சை முடிந்ததுமே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடலாம்.
ஜீன் தெரபி என்பது சமீபகாலங்களில் வெற்றிகரமான சிகிச்சையாக அறியப்படுகிறது. உலகெங்கும் பிரபலமாகியும் வருகிறது. இது கொஞ்சம் காஸ்ட்லி சிகிச்சை என்பதால் எல்லா தரப்பு மக்களுக்கும் சாத்தியமாவதில்லை.
பார்லரில் என்ன லேட்டஸ்ட்?
கூந்தல் என்பது கெரட்டின் என்கிற புரதத்தால் ஆனது. இன்று டீன் ஏஜிலேயே கூந்தலுக்கு கெமிக்கல் சிகிச்சைகள் செய்து கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள் பெண்கள். கலரிங் செய்வது, ஸ்ட்ரெயிட்டனிங் செய்வது, அயர்னிங் செய்வது என ஏதோ ஒரு கெமிக்கல் சிகிச்சை தொடர்ந்து கூந்தலுக்குச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படி செய்வதால் கூந்தலில் இயற்கையாக உள்ள கெரட்டின் நீங்கிவிடும். அதன் விளைவாக கூந்தல் மிகவும் வறண்டு, கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு முரட்டுத் தன்மையுடன் மாறும். இதை நீக்கி, கூந்தலுக்கு வெளிப்புறத்தில் இருந்து கெரட்டின் ஊட்டம் அளிப்பதால் கூந்தல் வறட்சி நீங்கி, மென்மையாக மாறும். இந்த கெரட்டின் சிகிச்சையை அதற்கென நிபுணத்துவம் பெற்ற பார்லர்களில் மட்டுமே செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் கெரட்டின் ஊடுருவி, கூந்தலுக்கு அதன் பழைய தோற்றத்தைக் கொடுக்கும்.
பொதுவாக கூந்தலுக்கு கலரிங் செய்கிறபோதும் கூந்தல் பாதிக்கப்படும். தொடர்ச்சியாக கலரிங் செய்து கொள்கிறவர்களுக்கு நரையை மறைக்க கலரிங் செய்வதா அல்லது கலரிங் செய்வதால் உண்டாகிற வறட்சியைத் தீர்ப்பதா என்கிற கவலை இருக்கும். அவர்களுக்கு கெரட்டின் சிகிச்சை பெரிய வரப்பிரசாதம். கலருடன் கெரட்டினையும் சேர்த்துக் கலந்து உபயோகிக்கும் போது, வறட்சி நீங்குகிறது. கலரிங் மாதிரியான கெமிக்கல் சிகிச்சையினால் கூந்தலில் இருந்து காணாமல் போகிற இயற்கையான எண்ணெய் பசையும் நீங்குவதில்லை.
கெரட்டின் சிகிச்சையின் பலன் 6 வாரங்கள் முதல் 3 மாதங்கள் வரை நீடிக்கும். அது அவரவர் தலைக்குக் குளிக்கிற இடைவெளி மற்றும் பராமரிப்பைப் பொறுத்து வேறுபடும். சோடியம் குளோரைடு கலக்காததும், புறஊதாக் கதிர்கள் பாதுகாப்பு உள்ளதுமான ஷாம்பு உபயோகித்து தலைக்குக் குளித்தால் கெரட்டின் சிகிச்சையின் பலனை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கச் செய்யலாம். அதே போல அதிகம் வெயிலில் அலைவது, உப்புத் தண்ணீரில் குளிப்பது போன்றவையும் தவிர்க்கப்பட வேண்டும்.
அடிக்கடி கெமிக்கல் சிகிச்சை செய்யாமலும் சிலருக்கு கூந்தல் தேங்காய் நார் மாதிரி இருக்கும். அவர்கள் கெரட்டின் சிகிச்சையை மட்டுமே தனியே கேட்டுச் செய்து கொள்கிறார்கள். வெறும் 20 நிமிடங்கள் போதுமானது. பார்லரில் கெரட்டின் சிகிச்சை செய்து கொண்டு, வீட்டுக்குப் போய் விடலாம். அடுத்த நாள் தலைக்குக் குளித்தால் போதுமானது. அப்போதுதான் அந்தப் புரதமானது முடிகளுக்கு இடையில் நன்கு ஊடுருவும்.