சருமத்துளைகளில் ஆழமாக தேங்கியுள்ள அழுக்குகள் நாளடைவில் அடைப்பை ஏற்படுத்தி, பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். சருமத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்ற வேண்டுமானால், இக்கட்டுரை அதற்கு சில வழிகளைக் காண்பிக்கும்.
என்ன தான் பாதுகாப்பாக இருந்தாலும், சருமத்தில் அன்றாடம் அழுக்குகள் சேரும். இப்படி சேரும் அழுக்குகளை அவ்வப்போது வெளியேற்றிவிட்டால், அதன் விளைவால் ஏற்படும் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இங்கு ஒருவரது சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற பின்பற்ற வேண்டிய சில செயல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
கிளன்சிங்
கிளன்சிங் என்றதும் என்னவென்று யோசிக்க வேண்டாம். சருமத்துளைகளை ஆழமாக சுத்தம் செய்ய மேற்கொள்ளும் ஒரு செயல் தான் கிளன்சிங். இந்த செயலில் தினமும் கிளன்சரை இருமுறை பயன்படுத்த வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, அதிகப்படியான எண்ணெய் பசையும் வெளியேற்றப்படும்.
சிறந்த நேச்சுரல் கிளன்சர் என்றால் அது பால். பாலை பஞ்சுருண்டையில் நனைத்து முகத்தை துடைத்து, 10 நிமிடம் கழித்து நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும்.
ஸ்கரப்
ஸ்கரப் செய்வதால், சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் எளிதில் வெளியேற்றப்படும். ஆகவே உப்பு அல்லது சர்க்கரையை நீரில் கலந்து, ஈரப்பதமான சருமத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக்
ஃபேஸ் பேக்கும் சருமத்துளைகளை ஆழமாக சுத்தம் செய்யும் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசையை வெளியேற்றும். எனவே வாரத்திற்கு ஒருமுறை தவறாமல் ஃபேஸ் பேக் போடுங்கள். அதுவும் கடலை மாவு, பால், மஞ்சள் தூள் கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, கழுவ நல்ல பலன் கிடைக்கும்.
டோனர்
டோனர் சருமத்தின் pH அளவைப் பராமரிக்க உதவும். அதற்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த டோனரைப் பயன்படுத்தாமல், ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை அடிக்கடி துடைத்து எடுங்கள்.
மாய்ஸ்சுரைசர்
சருமத்திற்கு ஜெல் வடிவ மாஸ்சுரைசர்களைப் பயன்படுத்துங்கள். இதனால் சருமத்தின் ஈரப்பசை தக்க வைக்கப்பட்டு, சருமத்துளைகளுள் அழுக்குகள் படிவது தடுக்கப்படும்.
ஆயில் மசாஜ்
தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு சருமத்தை நன்கு மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து ஸ்கரப் பயன்படுத்தி, சுடுநீரில் குளித்தால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, சருமம் பொலிவோடு இருக்கும்.