ஒரு காலத்தில் முகப்பரு என்பது பருவ வயதின் அடையாளம். `உன் முகத்துல பரு எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா?’ என சிலாகித்துச் சொன்னவர்கள்கூட உண்டு. ஆனால், சில நேரங்களில் பருக்கள் முக அழகைக் கெடுப்பதாக, அவற்றை அகற்றுவதேகூட பெரும்பாடாக மாறிவிடும் `அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள் அல்லவா? அதுபோல உள்ளுறுப்புகளின் இயக்கம் எப்படி இருக்கிறது என்பதை நம் முகத்தில் வரும் பருக்களே தெரிவித்துவிடும். மருந்துகளை எடுத்துக்கொள்வதாலோ, வெறும் க்ரீம்களைப் பூசிக்கொள்வதாலோ மட்டும் பருக்களை நிரந்தரமாகப் போக்கிவிட முடியாது. அதற்கான காரணத்தை அறிந்து, தகுந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் முகப்பரு வருவதைத் தவிர்க்கலாம்.
முகப்பரு
முகத்தின் ஒவ்வோர் இடத்திலும் வரும் பருக்கள் நம் உடலின் ஆரோக்கியம் தொடர்பாக என்ன சொல்கின்றன… அதற்கு நாம் என்ன வழிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்? பார்க்கலாமா?
மேல் நெற்றியில்…
உண்ணும் உணவு சரியாக உடையாமல்போனால், உடலிலுள்ள நச்சுக்களின் அளவு அதிகரிக்கும். அப்போது மேல் நெற்றியில் பருக்கள் உருவாவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதில் கவனம் செலுத்த வேண்டும். அதிக அளவு தண்ணீரைக் குடிப்பது, ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கும் கிரீன் டீ, காய்கறிகள், மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, கருநீலக் காய்கறிகள் மற்றும் பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். காபி மற்றும் குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது.
கீழ் நெற்றியில்…
புருவங்களுக்கு மேலே பருக்கள் வந்தால், போதுமான அளவு தூக்கமில்லை என்று அர்த்தம். மனஅழுத்தம், மனச்சோர்வு, அத்துடன் சீரான ரத்த ஓட்டம் இல்லாவிட்டாலும் பருக்கள் ஏற்படும். இந்தப் பருக்கள் வந்தவர்கள், மூளையையும் மனதையும் ரிலாக்ஸாக வைத்திருக்கவும். வாரத்துக்கு நான்கு நாட்களுக்காவது உடற்பயிற்சி செய்யவும். தினமும் ஏழு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை ஆழ்ந்து உறங்கவும்.
இரண்டு புருவங்களுக்கு மத்தியில்…
இரண்டு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம் நம் உடலில் உள்ள கல்லீரலுடன் தொடர்புடையது. மது அருந்துபவர்களுக்கும், கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிக அளவில் சாப்பிடுபவர்களுக்கும் இந்த இடத்தில் அடிக்கடி பருக்கள் வருவதைக் காணலாம். சிலருக்கு உணவுகள் ஏற்படுத்தும் ஒவ்வாமையினாலும் இங்கே பருக்கள் உண்டாகும். இதனைத் தவிர்க்க, பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மூக்கில்…
மூக்கின் மீது பருக்கள் வந்தால், யாரையோ காதலிக்கிறோம் என்று நண்பர்கள் விளையாட்டாகக் கூறுவது உண்டு. அதில் பாதி உண்மையும் உள்ளது. இதயம் அல்லது ரத்த அழுத்தத்தில் பிரச்னை வரும்போது மூக்கில் பருக்கள் வரும். இதைப் போக்க, மனஅழுத்தத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டியது அவசியம். தியானம் அல்லது பிடித்த விஷயங்களில் நேரத்தைச் செலவிடுங்கள். 15 நாட்களுக்கு ஒரு முறை ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
கன்னங்களில்…
கன்னங்களுக்கும் குடல்களுக்கும் தொடர்பு உண்டு. அதிகமாக புகைப்பிடிப்பதாலும், மாசு நிறைந்த காற்றைச் சுவாசிப்பதாலும் கன்னத்தில் பருக்கள் வரலாம். உங்கள் தலையணை உறைகளில் உள்ள கிருமிகளாலும் கன்னங்களில் பருக்கள் பரவும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை தலையணை உறையைத் துவைப்பது சுகாதாரமானது. வெளியில் செல்லும்போது கூடுமான வரை துணியால் முகத்தை மறைத்துக்கொண்டு செல்லலாம். வீட்டுக்கு வந்ததும் சோப்பால் முகத்தை கழுவ வேண்டும்.
தாடையில்…
ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவதால் தாடைப் பகுதியில் பருக்கள் வரும். இந்தப் பருக்கள் உள்ளவர்கள், நார்ச்சத்து நிறைந்த பழங்கள், பீன்ஸ், கீரை போன்ற உணவுகளைச் சாப்பிடவும். செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாகப் பார்த்துக்கொள்ளவும்.
கன்னங்களின் ஓரத்தில்…
இந்தப் பகுதி இனப்பெருக்க உறுப்புகளோடு தொடர்புடையது. உடலில் ஹார்மோன் குறைபாடுகள் ஏற்படும்போது கன்னங்களின் ஓரத்தில் சிறியதாக பருக்கள் தோன்றும். பெண்களின் மாதவிடாய் காலங்களின்போது மட்டும் இந்த இடத்தில் பருக்கள் அதிகமாக வருவதைக் காணலாம். சிலருக்கு மாதவிடாய் காலத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே அதன் அறிகுறியாகப் பருக்கள் தோன்றும்.
காதுகளில்…
கஃபைன் மற்றும் உப்பின் அளவு அதிகமாக இருக்கும் உணவுகளைச் சாப்பிடுவதால், காதுகளில் பருக்கள் தோன்றும். தவிர உடலில் நீர்த்தன்மை குறையும்போதும் தோன்றும். உணவில் உப்பை அளவாகச் சேர்த்துக்கொள்வதன் மூலமும், அதிக அளவு தண்ணீர், பழச்சாறு, மோர் போன்ற உணவுகளைச் சாப்பிடுவதன் மூலமும் இதைத் தடுக்கலாம்.
பருக்கள், நம் ஆரோக்கியம் தொடர்பான அறிகுறிகள். உரிய வழிமுறையைப் பின்பற்றுவோம்… முகப்பருக்களைப் போக்குவோம்!