குழந்தைகளுக்கு ப்ரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் சைனீஸ் ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சூப்பரான சைனீஸ் ப்ரைடு ரைஸ்
தேவையான பொருட்கள் :
வெங்காயம் – 2
எண்ணெய் – 2 1 /2 மேசைக்கரண்டி
முட்டை – 1 – 2 (முட்டையை லேசாக அடித்துக் கொள்ளவும்)
நல்லெண்ணெய் -1 /4 தேக்கரண்டி
சிக்கன் எலும்பில்லாதது – 1 கப்
கேரட் – 1 /2 கப்
பட்டாணி – 1 /2 கப்
வெங்காயத்தாள் (green onion ) – 4
சோயா சாஸ் – 2 மேசைக்கரண்டி
அரிசி – 4 கப்
செய்முறை :
* வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசியை உதிரியாக வேகவைத்து ஆறவைத்து கொள்ளவும்.
* வெங்காயத்தாள், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி வேக வைத்து கொள்ளவும். சாதம் நன்றாக ஆறினால்தான் ப்ரைடு ரைஸ் செய்வதற்கு நன்றாக இருக்கும்.
* கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பிரவுன் கலராகும் வரை வதக்கிக் கொள்ளவும். வதக்கிய வெங்காயத்தை தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* முட்டையுடன் நல்லெண்ணெய் கலந்து வைத்துக் கொள்ளவும்.
* அதே கடாயில் 1 /2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடாயைச் சுற்றிலும் எண்ணெய் படருமாறு செய்யவும் , கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி கடாயைச் சுற்றிலும் படருமாறு செய்யவும். முட்டை மேலே எழும்பி வரும்போது அதை திருப்பிப் போட்டு வேக விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
* கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வேக வைத்துள்ள சிக்கன், கேரட், பட்டாணி மற்றும் வதக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிக் கொள்ளவும்.
* இதனுடன் வேக வைத்து வைத்துள்ள சாதம், வெங்காயத்தாள், அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலந்து 3 நிமிடங்கள் வதக்கவும்.
* இதனுடன் 2 மேசைக்கரண்டி சோயா சாஸ் மற்றும் நறுக்கி வைத்துள்ள முட்டை சேர்த்துக் கலந்து 1 நிமிடம் வதக்கிப் பரிமாறவும்.
* சூப்பரான சைனீஸ் ப்ரைடு ரைஸ் ரெடி.
குறிப்பு :
விருப்பத்திற்கேற்ப காய்கறிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சிக்கனுக்குப் பதிலாக இறால் பயன்படுத்தலாம்.