உடல்நலம், அழகு, வியாபாரம், கல்வி, உளவியல், இல்லறம் என நமது வாழ்வில் ஏற்படும் எந்த ஓர் பிரச்சனைக்கும் முழுக் காரணம் நாம் தான். ஏமாற்றுபவர்களை விட, ஏமாறுபவர்கள் மீது தான் அவர்களது பிரச்சனைகளுக்கு காரணமானவர்கள்.
பெரும்பாலும் நாம் எந்த ஒரு செயலையும் அதன் பயன் அறிந்து செய்வது கிடையாது. அது தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, உடல்நல ரீதியாக இருந்தாலும் சரி. நாம் குருட்டு தனமாக தினமும் செய்யும் சில பழக்கவழக்கங்களே நமக்கு பல எதிர்வினை விளைவுகளை விளைவிக்கின்றன.
அது போல, ஆண்கள் தினமும் விடாத கருப்பாய் பின்பற்றும் சில பழக்கவழக்கங்களே அவரகளது முடியை பலி வாங்கிவிடுகிறது. உதாரணமாக, தினமும் ஷாம்பூ பயன்படுத்துவது, சுடுநீரில் நீராடுவது, ஈரத்தலையோடு திரிவது, ஹீட்டர் பயன்படுத்துவது என பல பழக்கங்கள் உங்கள் முடி உதிர்வை அதிகரிக்கின்றது.
இனி, ஆண்களுக்கு முடி உதிரும் பிரச்சனை அதிகரிக்க காரணமாக இருக்கும் பழக்கவழக்கங்கள் பற்றிக் காணலாம்….
சுடுநீரில் குளிப்பது
சுடுநீரில் தலைக்குக் குளிப்பதனால், உங்கள் முடி சீக்கிரமாக உலர்ந்து / வறண்டுவிடும். இதனால் அதிகமான முடி உடைத்தல் மற்றும் உதிரும் பிரச்சனை உண்டாகிறது.
ஹீட்டர்
கூந்தலை பேணிக் காக்கிறேன் என்று சிலர் தினமும் தலைக்குக் குளிப்பார்கள். குளித்து முடித்ததும் ட்ரையர் அல்லது ஹீட்டர் பயன்படுத்துவதை பழக்கமாக வைத்திருப்பார்கள். மேற்கூறியவாறு, அதிகமான சூடு உங்கள் முடியின் வலிமையைக் குறைக்கிறது. அதனால் தான் முடி உடைதல் பிரச்சனை அதிகரிக்கிறது.
ஈரமான கூந்தல
் பெரும்பாலும் ஆண்கள், குளித்து முடித்ததும் தலை துவட்டமாட்டார்கள். ஈரம் காயாத தலையை ஸ்டைல் என்று கூறி, கண்ணாடி முன்பு விரல்களை பயன்படுத்தி ரஜினி ஸ்டைலில் இரண்டு முறை ஆட்டிவிட்டு சென்றுவிடுவார்கள். கூந்தல் அதிக நேரம் ஈரமாக இருந்தாலும் முடி உதிர்தல் பிரச்சனை உண்டாகும். எனவே, குளித்ததும், துண்டினைப் பயன்படுத்தி நன்கு ஈரம் காயும்வரை துவட்ட வேண்டியது அவசியம்.
ஹேர் கிரீம்கள்
ஸ்டைல் மற்றும் ஹேர் கேர் என்ற பெயரில் இன்று பல அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் விற்கப்படுகின்றன. அதுவும், ஆண்களுக்கு என்று சிறப்பு பொருள்கள் வேறு. உண்மையில் நீங்கள் பயன்படுத்தும், ஹேர் டை, மற்றும் லோஷன்கள் தான் உங்களுக்கு முடி உதிர்தலை அதிகப்படுத்துகிறது.
தலைக்குக் குளிக்கும் முறை
தலைக்குக் குளிக்கும் போது, தலை முடியை மென்மையாக கையாள வேண்டியது அவசியம். சிலர், ஏதோ நாய் மண்ணை பிராண்டுவதைப் போல அரித்து எடுப்பார்கள். இவ்வாறு தலைக்குக் குளிப்பது தவறான அணுகுமுறை ஆகும்.
தலைக்குக் குளிக்காமல் இருப்பது
சிலர் மாதக்கணக்கில் தலைக்குக் குளிக்காமல் இருப்பார்கள். தலைமுடி உதிர்வு அதிகரிக்க இதுவும் கூட ஒரு காரணமாகும். குறைந்தது வாரத்திற்கு இரு முறைகளாவது தலைக்குக் குளிக்க வேண்டியது கட்டாயம்.
மன அழுத்தம்
முக்கியமாக ஐ.டி. நண்பர்கள். வேலை காரணமாகவோ, பிற பிரச்சனைகள் காரணமாகவோ ஏற்படும் மன அழுத்தம் கூட ஆண்களுக்கு முடி உதிர்வை ஏற்படுத்துகிறது.