இன்றைய காலத்தில் ஆண்களுக்கு 25 வயதை அடைவதற்குள்ளேயே வழுக்கை ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு ஆரோக்கியத்தை அழிக்கும் ஜங்க் உணவுகள் மட்டுமின்றி, பழக்கவழக்கங்களும் தான். அதுமட்டுமின்றி, ட்ரெண்டிங் என்று கண்ட ஹேர் ஸ்டைலிங் பொருட்களைப் பயன்படுத்தி, தலைமுடியின் ஆரோக்கியத்தைக் கெடுத்து விடுகின்றனர்.
கண்டதை தலைமுடிக்கு பயன்படுத்துவதால், தலைமுடி மெதுவாக உதிர ஆரம்பித்து, மெலிய ஆரம்பிக்கும். இப்படி முடி மெலிய ஆரம்பிக்கும் போது, ஆண்கள் பின்பற்றும் ஒருசில தவறான பழக்கவழக்கங்களால் வழுக்கை வேகமாக விழும்.
இங்கு அந்த தவறான பழக்கவழக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, அவற்றைத் தவிர்த்து வழுக்கை விழுவதைத் தடுத்திடுங்கள்.
தலைமுடியை கஷ்டப்படுத்தாதீர்கள்
தலைக்கு குளித்த பின் தலையில் உள்ள ஈரம் உலர்வதற்கு, துணியால் பலர் தேய்ப்பார்கள். இப்படி ஈரமாக இருக்கும் போது தேய்த்தால், தலைமுடி கையோடு வந்துவிடும். மேலும் ஈரமான தலையில் சீப்பைப் பயன்படுத்தினாலும், தலைமுடி உதிரும்.
எனவே இச்செயல்களைத் தவிர்த்து, கைவிரலைக் கொண்டு மட்டும் தலைமுடியை சீவுங்கள். அதுமட்டுமின்றி அடிக்கடி சீப்பைக் கொண்டு சீவுவதையும் தவிர்க்க வேண்டும்.
தினமும் தலைமுடியை அலசாதீர்கள்
பெரும்பாலான ஆண்கள் வெளியே அதிகம் சுற்றுவதால், தினமும் தலைக்கு குளிப்பார்கள். ஆனால் ஷாம்புவில் கெமிக்கல் அதிகம் உள்ளது. எனவே ஷாம்பு பயன்படுத்தி தினமும் தலைக்கு குளித்தால், அதனால் தலைமுடி அதன் ஆரோக்கியத்தை இழந்துவிடும். வேண்டுமானால் ஷாம்பு பயன்படுத்தாமல் தலைக்கு தினமும் குளிக்கலாம்.
ஹேர் ஸ்டைலிங் பொருட்கள்
ஜெல், ஹேர் ஸ்ப்ரே போன்றவை தலைமுடியை அழகாக வெளிக்காட்ட உதவலாம். ஆனால் இவை நேரடியாக தலைமுடியை பாதிக்கக்கூடியவை. எனவே தலைமுடி சற்று அதிகம் உதிர்வது போன்று இருந்தால், இந்த பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.
தொப்பியை அணிய வேண்டாம்
முக்கியமாக தலைமுடி உதிரும் போது, தொப்பி அணியும் பழக்கத்தைக் கைவிடுங்கள். இதனால் தலையில் அதிகம் வியர்த்து, மயிர்கால்கள் தளர்ந்து, எளிதில் உதிர்வதோடு, ஸ்கால்ப்பில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, தலைமுடியின் ஆரோக்கியம் மேலும் பாதிக்கப்பட்டு உதிரும்.
சாதாரணமாக விடாதீர்கள்
தலைமுடி உதிர்வது சாதாரணம் என்று நினைத்து விட்டுவிடாதீர்கள். ஒரு நாளைக்கு 100 முடி உதிர்வது சாதாரணம் தான். ஆனால் அளவுக்கு அதிகமாக முடி உதிர்ந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி காரணத்தை தெரிந்து, ஆரம்பத்திலேயே சரியான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.