மாலையில் மொறுமொறுவென்று ஏதேனும் சாப்பிட விருப்பமாக உள்ளதா? அப்படியெனில் கார தட்டையை வீட்டிலேயே செய்து மாலை வேளையில் டீ, காபி குடிக்கும் போது சாப்பிடுங்கள். அந்த கார தட்டையை எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.
ஏனெனில் இங்கு கார தட்டையின் எளிய செய்முறை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்: அரிசி மாவு – 1 கப் உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு – 1/3 கப் கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது) உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் + தேவையான அளவு தண்ணீர் – 1/4 அல்லது1/2 கப்
செய்முறை: முதலில் அரிசி மாவை வாணலியில் போட்டு சிறிது நேரம் வறுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். பின் அதே வாணலியில் உளுத்தம் பருப்பை சேர்த்து வறுத்து, அதே பாத்திரத்தில் போட்டுக் கலந்து கொள்ளவும். பின்னர் அத்துடன் எண்ணெய் மற்றும் தண்ணீரைத் தவிர, அனைத்தையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மென்மையான மாவு போல் பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும், அதிலிருந்து 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் எடுத்து மாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை 10 உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பிளாஸ்டிக் கவரை எடுத்து, அதில் எண்ணெய் சிறிது தடவி ஒவ்வொரு உருண்டையை எடுத்து தட்டையாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், கார தட்டை ரெடி!!!