25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ld4420
சரும பராமரிப்பு

ஆன்ட்டி ஏஜிங் அழகு சாதனங்கள்

முதுமைத் தோற்றத்துக்கான காரணங்கள், அவற்றை ஆரம்பத்திலேயே தள்ளிப் போடுவதற்கான வழிகள் போன்றவற்றைப் பார்த்தோம். ஆன்ட்டி ஏஜிங் அழகு சாதனங்களை வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள், அவற்றில் உள்ள ஆபத்தான கெமிக்கல்கள், பார்லர் மற்றும் வீட்டு சிகிச்சைகள் பற்றிஎல்லாம் தொடர்ந்து பேசுகிறார் அரோமா தெரபிஸ்ட் கீதா அஷோக்.

முதுமையை தள்ளிப்போடக்கூடிய ஆன்ட்டி ஏஜிங் அழகு சாதனங்களை நாம் இரு விதமாக தயார்படுத்தலாம். ஒன்று அதற்குண்டான உள்ளே எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் மற்றும் வெளிப்புறமாக கொடுக்க வேண்டிய சிகிச்சைகள். உள்ளே என்பதில், நாம் சாப்பிடும் உணவு, பழங்கள் எவற்றில் எல்லாம் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் பலன்கள் இருக்கின்றன என்று தெரிந்து உட்கொள்ளுவது மிகச்சிறந்த பலனை அளிக்கும். முக்கியமாக வைட்டமின் சி உள்ள உணவு களை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் மற்றும் ஃபைட்டோ கெமிக்கல்ஸ் இயற்கையாகவே உள்ள சிவப்பு திராட்சை, உலர் திராட்சை, புரூன்ஸ் என்று சொல்லப்படும் உலர்ந்த கறுப்பு ப்ளம்ஸ், உலர்ந்த புளூபெரிஸ், ஸ்ட்ராபெரி, ஆரஞ்சு பழ வகைகள், சிவப்பு கொய்யா போன்றவை கட்டாயம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். ஆங்கிலத்தில் Eat the rainbow என்று சொல்வார்கள். வைட்டமின் ஏ, சி, ஈ மூன்றும் நம்முடைய அன்றாட உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி முழுவதும் உணவாக எடுத்துக் கொள்ளவோ அல்லது கிடைக்காதவர்கள் Supplements வடிவிலாவது எடுத்துக் கொள்ள வேண்டும்.

நம் உடலில் நீர்ச்சத்து குறையாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். பழங்கள், ஜூஸ் ஆகியவற்றோடு தேவையான அளவு தண்ணீரும் குடிக்க வேண்டும். பொதுவாக நம் உடலின் எடை 20 கிலோ என்று எடுத்துக் கொண்டால் அதற்கு 1 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். நம் சருமத்தில் வயோதிகத்தால் ஏற்படக்கூடிய சுருக்கங்களை தவிர்ப்பதற்கு தண்ணீரின் பங்கு இன்றியமையாதது.

வெளிப்புறப் பாதுகாப்பு என்பது குளியலில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டியது. முகத்துக்கு நாம் உபயோகப் படுத்தும் சோப்புகள் அல்கலைன் குறைவாக உள்ளதாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். சோப்பை விட ஃபேஸ்வாஷ் நம் சருமத்தை உலர விடாமல் பார்த்துக் கொள்ளும். குளிக்கப் போகும் முன் சிறிது அவகடோ கேரியர் ஆயில் அல்லது ஆல்மண்ட் கேரியர் ஆயிலுடன் இலாங் இலாங் 5 சொட்டுகள் கலந்து உடலில் பூசி ஊற விட்டு குளிப்பதால் சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்கலாம்.

வாரம் இருமுறை விளக்கெண்ணெய், ஆலிவ் ஆயில் மற்றும் ஆல்மண்ட் ஆயில் கலந்து தலைக்குத் தேய்த்து ஊறவைத்துக் குளிப்பதால் நமது சருமம் பளபளக்கும். கண்களைச் சுற்றி உள்ள வயோதிகத்தைக் காட்டக்கூடிய சுருக்கங்களை தவிர்க்கவும், குறைக்கவும் லோட்டஸ் கேரியர் ஆயிலில் 5 சொட்டு ரோஸ் எசென்ஷியல் ஆயில் கலந்து மிருதுவாக மசாஜ் செய்யலாம்.

என்ன உபயோகிக்கலாம்?

டே கேர் மற்றும் நைட் கேர் என இரண்டு வகைகளில் ஆன்ட்டி ஏஜிங அழகு சாதனங்கள் கிடைக்கின்றன. வீட்டிலேயே இவற்றை வாங்கி உபயோகப்படுத்தும்போது அவற்றில் 5 வகையான பொருட்களின் கலவை இருக்கும். பிராண்ட் வித்தியாசப்பட்டாலும் இந்த 5 உட்பொருட்கள்தான் எல்லாவற்றிலும் முக்கியம். சில பெரிய பிராண்ட் தயாரிப்புகளில் இந்த ஐந்துமே இருக்கும். அதற்கடுத்த நிலையில் உள்ளவற்றில் இரண்டோ, மூன்றோ இருக்கும்.

அந்த 5ல் முதன்மையானது ரெட்டினால். இதில் வைட்டமின் ஏ அதிகமாக இருக்கும். இந்த ரெட்டினால் செல் வளர்ச்சியை வேகப்படுத்தும். சருமத்தின் இறந்த செல்களை அப்புறப்படுத்தும். நமது சருமத்துக்கு ஒருவித உறுதித் தன்மையைக் கொடுப்பவை கொலாஜன் மற்றும் எலாஸ்டின் என்பவை. அந்த இரண்டையும் தூண்டி விடவும் ரெட்டினால் உதவியாக இருக்கும். தவிர, ரத்த ஓட்டத்தை தூண்டிவிடும். எனவே உங்களுக்கான ஆன்ட்டி ஏஜிங் அழகு சாதனங்களைத் தேர்வு செய்யும் போது ரெட்டினால் இருக்கிறதா என்பதை அவசியம் கவனியுங்கள்.

அடுத்தது ஹைட்ரோகுவினான். இதை ஒரு பிளீச்சிங் ஏஜென்ட் என்றும் சொல்லலாம். சிவப்பழகுக்கு உத்தரவாதம் தருகிற எல்லா பொருட்களிலும் இது இருக்கும். அது சரி… இதற்கும் ஆன்ட்டி ஏஜிங்க்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்கலாம். பொதுவாக முதுமைக்கான அறிகுறிகள் ஆரம்பிக்கும்போது ஒருவரது சரும நிறமும் மங்கத் தொடங்கும். அப்படி மங்குகிற சரும நிறத்தை பழைய நிலைக்குக் கொண்டு வர ஹைட்ரோகுவினான் உதவும்.

இது ஒரு கெமிக்கல்தான். ஆனாலும், இதை சிவப்பழகு கிரீம்களிலும் முதுமையைத் தள்ளிப்போடச் செய்கிற கிரீம்களிலும் சேர்க்கிறார்கள்.ஹைப்பர் பிக்மென்ட்டேஷன் எனப்படுகிற அடர்மங்கு மெனோபாஸ் தாண்டிய பெண்களுக்கு சகஜமாக வருகிற பிரச்னை. சருமத்தில் ஆங்காங்கே கருந்திட்டுகள் தென்படும். மூக்கைச் சுற்றியும் கன்னங்களிலும் நெற்றியிலும் கருமைப் படலமும் கோடுகளும் தென்படும். அந்தக் கருமையைப் போக்கவும் ஹைட்ரோகுவினான் உதவுகிறது.

ஆன்ட்டி ஏஜிங் தயாரிப்புகளில் அடுத்தது சன் ஸ்கிரீன். அதை முதுமைத் தடுப்புக்கான பொருள் என்றே சொல்லலாம். வருமுன் காப்போம் என்கிற அடிப்படையில் இதைப் பார்க்கலாம். சிவப்பழகு கிரீம்களில் கூட சன் ஸ்கிரீன் இருக்கும். முதுமைத் தோற்றத்துக்கான முக்கிய காரணங்களில் வெயிலுக்கு பெரிய இடமுண்டு. தொடர்ந்து வெயிலில் அலைகிறவர்களுக்கும் வேலை செய்கிறவர்களுக்கும் சூரிய ஒளியின் தாக்கத்தால் ஃப்ரீ ரேடிகல்ஸ் என்கிற பிரச்னை ஏற்படும். அது நமது சருமத்தில் உள்ள செல்களை சிதைக்கும். புதிய செல்களை உற்பத்தி செய்யாமல் தடுக்கும்.

ஏற்கனவே உள்ள செல்களை சிதைக்கும்போது முதுமைக்கான அறிகுறிகள் மெல்ல எட்டிப் பார்க்கும். இதைத் தவிர்க்க முறையான சன்ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டியது அவசியம். வெயிலில் செல்கிறவர்கள் செல்லாதவர்கள் என எல்லோருக்குமே சன் ஸ்கிரீன் அவசியம். இது ஒரு தடுப்பு நடவடிக்கையாக செயல்பட்டு முதுமையைத் தள்ளிப்போடும். சூரிய ஒளியில் இருந்து வெளிப்படுகிற யுவி ரேஸ் எனப்படுகிற புற ஊதாக் கதிர்களை நமது சருமத்துக்குள் இறங்காமல், வடிகட்டிப் பாதுகாப்பது சன் ஸ்கிரீனின் வேலை. இந்த புற ஊதாக் கதிர்கள் நமது சருமத்தில் படும்போதுதான் சருமம் கருத்துப் போகிறது. சுருக்கங்கள் ஏற்படுகிறது. யுவி ஃபில்டர்ஸ் எனப்படுகிற இந்த சன் ஸ்கிரீனும் ஆன்ட்டி ஏஜிங் கிரீம்களில் சேர்க்கப்படுகிறது.

சன் பிளாக்கில் டைட்டானியம் டை ஆக்சைடு மற்றும் ஸிங்க் ஆக்சைடு என இரண்டும் இருக்கும். இவைதான் யுவி ஃபில்டர்களாக செயல்பட்டு புறஊதாக் கதிர்களை வெளியே தள்ள உதவும். இதனால் இவற்றையும் ஆன்ட்டி ஏஜிங் கிரீம்களில் சேர்க்கிறார்கள்.

சன் ஸ்கிரீனுக்கு அடுத்தபடியாக அதில் உள்ளது ஆல்ஃபா ஹைட்ராக்சி ஆசிட் என சொல்லப்படுவது. நமது சருமத்தின் மேல்புறம் எபிடெர்மிஸ் எனப்படும். அந்த எபிடெர்மிஸில் உள்ள இறந்த செல்களை சுத்தமாக அகற்றும் வேலையை இந்த ஆல்ஃபா ஹைட்ராக்சி ஆசிட் செய்கிறது. அதன் மூலம் புதிய செல்கள் உற்பத்தியாகவும் உதவுகிறது. பொதுவாகவே சருமத்தில் செல்களின் உற்பத்தி நன்றாகவும் நிறையவும் நடந்தால் சருமம் பொலிவாக இருக்கும். வயதாக ஆக சருமத்தில் செல்களின் உற்பத்தி குறையும். அதனால்தான் சருமத்தில் தளர்ச்சியும் முதிர்ச்சியும் ஏற்படுகிறது. செல்களைப் பெருக்கும் தன்மை கொண்ட ஆல்ஃபா ஹைட்ராக்சி ஆசிட்டும் ஆன்ட்டி ஏஜிங் தயாரிப்புகளில் இருக்கும்.

அடுத்தது ஹை அலுரானிக் ஆசிட் (Hyaluronic acid). இது வைட்டமின் சியுடன் இணைந்து ஆன்ட்டி ஏஜிங் தயாரிப்புகளுக்கு முக்கியமான மூலப் பொருளாக அமைகிறது. நமது கன்னங்களின் சதைகள் மேலெழுந்த மாதிரி இருக்க அதாவது, ஆங்கிலத்தில் பிளம்ப் அப் (Plump up) என்று சொல்வோம்… அதற்கு இந்த ஹைஅலுரானிக் ஆசிட் உதவுகிறது. இதனால் முகத்தசைகள் தளர்ச்சியடையாமல் இளமையாக இருக்கும்படியான தோற்றம் கிடைக்கும்.பொதுவாக மேலே குறிப்பிட்ட கெமிக்கல் உட்பொருட்களைக் கொண்ட தரமான ஆன்ட்டி ஏஜிங் அழகு சாதனங்கள் முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போட உதவும். அரிதாக சிலருக்கு இவை பக்கவிளைவுகளைக் கொடுக்கலாம்.

35 வயதிலிருந்தே ஆன்ட்டி ஏஜிங் கிரீம்களை உபயோகிக்கிறபோது அதில் உள்ள மாயிச்சரைசர் காரணமாக சிலருக்கு வயதுக்குப் பொருந்தாத பருக்கள் வரலாம். சென்சிட்டிவ் சருமம் கொண்ட சிலருக்கு ஹைப்பர் பிக்மென்ட்டேஷன் எனப்படுகிற மங்கு வரலாம். ஒருசிலருக்கு சரும அலர்ஜியை ஏற்படுத்தலாம். ரொம்பவும் வீரியமுள்ள கெமிக்கல்கள் கொண்ட ஆன்ட்டி ஏஜிங் பொருட்கள் சில நேரங்களில் ஞாபகமறதி, கண்களில் எரிச்சல் மற்றும் சிவந்து போதல் மற்றும் நரம்புத்தளர்ச்சி போன்றவற்றைக் கூட ஏற்படுத்தும் அளவுக்கு அபாயம் கொண்டவை என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிகிச்சைகள் என்னென்ன?

பார்லர்கள் மற்றும் சரும மருத்துவர்கள் பலரும் முதுமையைத் தள்ளிப்போடச் செய்கிற சிகிச்சையாகப் பரிந்துரைக்கிற பிரபலமான ஒரு சிகிச்சை பீல்.. ஆல்ஃபா ஹைட்ராக்சி ஆசிட் என்பதை வைத்து சருமத்தை பீல் செய்கிறார்கள். இதை இயற்கை அல்லது செயற்கை முறைகளில் செய்யப்படுகிறது. அடுத்தது போடாக்ஸ் ஃபில்லர்ஸ் எனப்படுகிற ஊசிகள். இவை பெரும்பாலும் சரும மருத்துவர்களால் செய்யப்படுபவை. இது சருமம் தளர்ந்து போகாமல் இருக்கவும் உறுதியாக இருக்கவும் உதவுகிற சிகிச்சை.

இதன் மூலம் சருமம் லேசாக உப்பினதைப் போல மாறும். அதனால் சருமத்தின் சுருக்கங்கள் மறைந்து இளமையாகத் தெரியும். ஆனால், இது நிரந்தரமானதல்ல. குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இதன் பலன் நீடிக்கும். அதைத் தக்க வைத்துக் கொள்ள மீண்டும் மீண்டும் அந்த சிகிச்சையைத் தொடர்வார்கள். அடிக்கடி செய்து கொள்கிறவர்களுக்கு நரம்புத்தளர்ச்சி வர வாய்ப்புகள் அதிகம்.அடுத்தது நான் இன்வேசிவ் ட்ரீட்மென்ட் எனப்படுகிற சிகிச்சை. சிலவகை மெஷின்களை வைத்து தளர்ந்துபோன சருமத்தை உறுதியாகவும் இளமையாகவும் மாற்றும் சிகிச்சை இது.

அரோமாதெரபியில் சருமத்தின் மூன்றாவது அடுக்கில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகிய இரண்டையும் உறுதியாக்கி, இளமைத் தோற்றத்தை நீண்ட நாள் தக்க வைக்கச் செய்கிற அருமையான சிகிச்சைகள் உள்ளன. நான் சர்ஜகல் ஃபேஸ் லிஃப்டிங் என்கிற பெயரில் அரோமாதெரபியில் இது செய்யப்படுகிறது. தளர்ந்து போன தசைகளை உறுதியாக்க பிரத்யேக அரோமா ஆயில்கள் உள்ளன. இதில் கெமிக்கல்கள் கிடையாது என்பதால் பக்க விளைவு கள் பற்றிப் பயப்படத் தேவையில்லை.

வீட்டிலேயே செய்யக்கூடிய சிகிச்சைகள்…

1. ஆல்கஹால் இல்லாத ரெட் கிரேப் ஒயினில் சிறிது கரும்புச்சாறும் பனைசர்க்கரையும் கலந்து அவ்வப்போது பஞ்சில் தொட்டு முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சுருக்கங்கள் மறையும்.

2. கார்ன்ஃப்ளார் மாவுடன் தேனும், 5 சொட்டுகள் இலாங் இலாங் ஆயிலும் கலந்து தடவி, குளிர்ந்த நீரில் கழுவி வர தொய்வடைந்த சருமம் இறுகும்.

3. ஜவ்வரிசி மாவுடன், முட்டையின் வெள்ளைக்கருவும் கிளிசரின் சிறிது கலந்து தடவினால் தளர்வடைந்த முகம் இறுகும்.

4. சும்மா உட்கார்ந்திருக்கும் நேரங்களில் வாய் நிறைய தண்ணீர் வைத்திருந்து தலையை சிறிது பின்னுக்கு சாய்த்து வைத்திருந்து பிறகு தண்ணீரை துப்பிவிடவும். இது சுருங்கும் சருமப் பகுதியை விரிவடையச் செய்யும்.

5. நாம் படுத்திருக்கும் நேரங்களில் நமது கைகளைக் கொண்டு கன்னங்களைத் தாங்கி மேல் நோக்கி தள்ளும் விதமாக சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். இது நமக்கு நாமே செய்து கொள்ளும் ஃபேஸ் லிஃப்டிங் ஆகும்.
ld4420

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற ‘பேஷியல்’

nathan

உங்களுக்கு தெரியுமா வாஸ்லின் இருந்தா போதும்… ஒரே கல்லுல 17 மாங்கா அடிக்கலாம்…

nathan

முதிர்ந்த வயதிலும் உங்கள் சருமத்தை இளமையுடன் தோன்ற வைக்கலாம்’ என்கிறார் சரும நிபுணர்

nathan

உங்க உடல் மற்றும் அக்குள் பகுதியில் துர்நாற்றம் வராமல் தடுக்க

nathan

உங்களுக்கு தெரியுமா சரும அழகிற்கு நெய்யை எப்படி பயன்படுத்தலாம்

nathan

முகம் மற்றும் கை,கால்களில் ஏற்படும் கருமை அப்படியே திட்டுகளாக படிந்துவிடும்.

nathan

சரும வறட்சியை போக்கும் பால்

nathan

குளிப்பதற்கு முன் இந்த 3 விஷயங்கள் செய்தால் என்ன நன்மை என தெரியுமா

nathan

பெண்களே கோடையில் அழகைப் பாதுகாக்க மாம்பழத்தை யூஸ் பண்ணுங்க…

nathan