நகத்தை வைத்தே உடலில் உள்ள பிரச்னைகளைக் கண்டறியலாம். நகங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி சுத்தமாக எப்போதும் அழகாகவும் வைத்துக் கொள்ள
வேண்டும். தற்போது இளம்பெண்கள் நெயில் பாலிஷ் மட்டும் அல்லாது நகத்தில் ஓவியம் வரைவது நகக்கிரீடங்களை வண்ணம் தீட்டி அழகுபடுத்துவதை
கலையாக கருதுகின்றனர். சங்கக் காலத்தில் மருதாணி இட்டு நகங்களை சிவப்பாக்கித்தான் அழகு பார்ப்பார்கள் தற்போது நகங்களை வைத்து கலைக்கூடமே
நடத்துகின்றனர். இதற்காக ஆயிரக்கணக்கில் செலவழிக்க வேண்டியது அவசியம் இல்லை நமக்கு நாமே நம் விரல்களை அழகுபடுத்திக் கொள்ளலாம்.
நெயில் ஆர்ட்…
நகங்களின் நுனிப்பகுதியில் பலவிதமான வண்ணங்களில் பல டிசைன்களில் நெயில் ஆர்ட் செய்யலாம். நெயில் பாலிஷ் போடுவதற்கு முன்பு நகங்களின் ஓரங்களை வெட்டி உராய்வு சாதனங்களைப்பயன்படுத்தி அழகுப்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் ”பேஸ்ட் கோட்” எனப்படும் நிறமில்லாத நெயில் பாலிஷை நகங்களில் பூசி அதன் மேல் கான்ட் ராஸ்ட் கலரில் நெயில் பாலிஷ் போடலாம். புள்ளிகள், கோடுகள் வைத்தே எளிமையான டிசைன்களை வரையலாம். பார்ப்பதற்கு அழகாகவும் எளிமையானதாகவும் இருக்கும். முதலில் பழகுவதற்கு எளிமையான டிசைன்களை கற்றுக்கொண்டு படிப்படியாக கடினமான டிசைன்களை போடலாம். நெயில் ஆர்ட்டுக்கென தனி டிசைன்களும் குறைந்த விலையில் கடைகளில் கிடைக்கின்றன. நெயில் ஆர்டுக்கான கிட் அழகு சாதன கடைகளில் வாங்கி அழகான டிசைன்ளை வடிவமைக்கலாம்.
ஜெல் நெயில்
நெயில் ஆர்ட் செய்வதற்கு விசேஷமான நெயில் பாலிஷ் பயன்படுத்துகின்றார்கள். ஏனெனில், சாதாரண நெயில் பாலிஷ் மீது ஓவியங்கள் வரைவதோ அலங்கார வேலைப்பாடுகள் செய்வதோ கடினமானது. தற்பொழுது அறிமுகமாகியிருக்கும் ஜெல் நெயில் பாலிஷ் நிரந்தரமானது. ஜெல் பூசிய நகங்களை ‘யு.வி” லைட் எனப்படும் ஊதாக் கதிர்களின் கீழ் வைக்கின்றார்கள். பளபளப்பான கண்களைக் கவரும் தோற்றத்தால் பார்ப்போரை கவரச் செய்யலாம்.
3D ஸ்டைல் நெயில் ஆர்ட்
ஃபிரெஞ்ச் மெனிக்குயர் அல்லது நெயில் ஆர்ட் செய்யப்பட்ட நகங்கள் மீது அக்ரிலிக் பசையைக் கொண்டு மலர்கள், கொடி போன்ற டிசைன்களில் அலங்காரம் செய்து கொள்வதுதான் 3டி ஸ்டைல் நெயில் ஆர்ட். கடைகளில் பல விதமான டிசைன்கள் கிடைக்கின்றன. குட்டிப் பூக்கள், இலைகள் போன்றவற்றை நகங்களின் மீது அழகாக ஒட்டிக் கொள்ளலாம். மிளிரும் கற்கள், பல வர்ணமணிகள், சில்வர் டஸ்ட் போன்றவற்றை பயன்படுத்தி நகங்களின் அழகு கூடி ஆடம்பரமான தோற்றம் கிடைக்கின்றது.
ஸ்டாம்ப் நெயில் ஆர்ட்
முதலில் சாதாரணமாக வழக்கமான நெயில் பாலிஷை போட்டுக் கொள்ளலாம். இந்த வகையான நெயில் ஆர்ட்டுக்கு பிரத்யேக அச்சுகள் உள்ளன. அவற்றின் மேல் நகப்பூச்சை தடவி நகத்தில் பதித்துக் கொள்ள வேண்டும். 3 முறைகளில் இந்த அச்சு பயன்படுத்தினால் எளிமையாகவும் அழகாகவும் இருக்கும்.
ஸ்டிக்கர் டிசைன்
ஸ்டிக்கர் டிசைன் நெயில் ஆர்ட்டுகள் அவசரத்துக்கு பயன்படுத்தப்படுவது. இரண்டே நிமிடங்களில் நகங்களை அழகாக்கிக் கொள்ளலாம். பல வடிவங்கள் கொண்ட நெயில் ஆர்ட் ஸ்டிக்கர்கள் எளிதாகக் கடையில் பெற்றுக் கொள்ளலாம். திடீரென விருந்து வைபவங்களுக்கு அழைப்பு வந்தால் உடனுக்குடன் உங்கள் கைவிரல்களின் அழகை மெருகுபடுத்துவதற்குக் கைக்கொடுக்கக் கூடியவை இந்த நெயில் ஸ்டிக்கர்ஸ். முன் கூட்டியே இவற்றை வாங்கி வைத்திருந்தால் இரண்டே நிமிடத்தில் ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு தயாராகி விடலாம்.
நகங்களும் ஒரு அட்ராக்டிவ் ஆன உறுப்பு தான். வெள்ளை நிறத்தில் இருப்பவர்கள் சிவப்பு, மெரூன், கருப்பு நிறங்களில் நகப்பூச்சுகள் பயன்படுத்தினால்
அவ்வளவு அழகாக இருக்கும். நாம் அணியும் உடைநிறத்துக்கு ஏற்ப நெயில் ஆர்ட்டுகள் இருந்தால் சொல்லவே வேண்டாம் உங்கள் முகத்தைக்காட்டிலும்
நகங்கள் அட்ராக்டிவ் ஆகத்தெரியும். கருப்பு அல்லது மாநிறத்தில் இருப்பவர்களும் நகங்களைப் பராமரித்து அழகைக் கூட்டிக் கொள்ளலாம்.