சிறுதானியங்களை தினமும் உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று குதிரைவாலி மாங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான சுவையான குதிரைவாலி மாங்காய் சாதம்
தேவையான பொருட்கள் :
குதிரைவாலி அரிசி – 1 குவளை (150 கிராம்)
தண்ணீர் – 2 1/4 குவளை
மாங்காய் – 1 (150 கிராம்)
கடுகு – 1/4 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு – 1 தேக்கரண்டி
நிலக்கடலை – 2 தேக்கரண்டி
பெருங்காயம் – 1 சிட்டிகை
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
காய்ந்த மிளகாய் – 1
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – 2 ஸ்பூன்
செய்முறை :
* மாங்காயை துருவிக்கொள்ளவும்.
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சமைப்பதற்கு முன்னர் குதிரைவாலி அரிசியை 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
* குக்கரில் ஊறிய அரிசியை போட்டு நீர் ஊற்றி, அதில் சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும். முதல் விசில் வந்த பிறகு, தீயை குறைத்து 8 நிமிடங்கள் கழித்து, அடுப்பை அணைக்கவும். சாதத்தை ஒரு அகலமான தட்டில் பரப்பி சில நிமிடங்கள் ஆற விடவும். சாதம் உதிரியாக இருக்க வேண்டும்.
* ஒரு வாணலியில், முதலில் நிலக்கடலையைப் போட்டு வறுத்து, தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* பிறகு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பை போட்டு, அது பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
* அடுத்து கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின் துருவிய மாங்காயைப் போட்டு, அதில் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவைப்பட்டால் சிறிது நேரம் வாணலியை மூடி வைத்து வேகவிடவும். மாங்காய் நன்றாக வதங்கி, துவையல் போல் வரும். மாங்காய் நன்றாக வெந்து விட்டால், அடுப்பை அணைக்கவும்.
* ஏற்கனவே வேகவைத்து, ஆறவைத்துள்ள சாதத்தை இந்தக் கலவையில் சேர்த்து நன்றாக கிளறி விடவும். மேலும் இக்கலவையுடன், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கியக் கொத்தமல்லி தழை, சுவைக்கேற்ப உப்பு, வறுத்த நிலக்கடலை ஆகியவற்றை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.
* இப்போது குதிரைவாலி மாங்காய் சாதம் சுவைப்பதற்குத் தயார்.