இன்று உருளைக்கிழங்கு பிரியர்களுக்கு ஓர் வித்தியாசமான சுவையைக் கொண்ட உருளைக்கிழங்கு ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அது என்னவெனில் உருளைக்கிழங்கை தேங்காய் பால் சேர்த்து வறுவல் செய்வது. இதன் ருசி நிச்சயம் அனைவருக்குமே பிடிக்கும்.
சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு தேங்காய் பால் வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 2 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது) கெட்டியான தேங்காய் பால் – 1 கப் கடுகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது வெங்காயம் – 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தக்காளி – 1 (நறுக்கியது) மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன் சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி – சிறிது
செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பிறகு அதில் உருளைக்கிழங்கை போட்டு தண்ணீர் சிறிது ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தட்டு கொண்டு மூடி வைத்து உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும். உருளைக்கிழங்கு வெந்ததும், அதில் தேங்காய் பால் ஊற்றி, தீயை அதிகரித்து, நீர் வற்றும் வரை நன்கு பிரட்டி விட்டு, கொத்தமல்லி தூவி இறக்கினால், உருளைக்கிழங்கு தேங்காய் பால் வறுவல் ரெடி!!!