வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ… வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான சிக்கன் பெப்பர் ஃப்ரை அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி.
தேவையானவை:
மீடியம் சைஸ் சிக்கன் துண்டுகள் – அரை கிலோ
வெங்காயம் – 150 கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – 25 கிராம்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை நன்கு கழுவி சுத்தம்செய்து கொள்ளவும். மிளகையும், சீரகத்தையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் சிக்கனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து இறக்கவும்.
மற்றொரு வாணலியில் தேங்காய் எண்ணெய் சேர்த்துச் சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்நிறமாகும்வரை வதக்கவும். பின்னர் அதனுடன் தயார் செய்து வைத்திருக்கும் சிக்கன் கலவை, மிளகு – சீரகத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி, கொத்தமல்லித்தழையை தூவி சூடாகப் பரிமாறவும்.