உங்கள் அழகையும் தோற்றத்தையும் இன்னும் நேர்த்தியாக வைக்க ஆசைப்பட்டால், கழுத்திற்கும் நீங்கள் பராமரிப்பு தர வேண்டும். முகத்தை பளபளப்பாக்கி, கழுத்தை மறந்துவிட்டால், எப்பேர்பட்ட அழகாய் இருந்தாலும் சற்று குறைவாகவே உங்கள் அழகினை காண்பிக்கும்.
முகத்திற்கு என்னென்ன செய்கிறீர்களோ, அதை கழுத்திற்கும் செய்ய வேண்டும். இல்லையெனில், முகம் ஒரு நிறமும், கழுத்து ஒரு நிறமும் வேறுபட்டு காண்பிக்கும்.
மேலும் கழுத்தில் சதை தொங்க ஆரம்பித்தால், அது உங்கள் கன்னப்பகுதிகளிலுள்ள சதையையும் இழுக்கும். இதனால் சீக்கிரம் வயதான தோற்றம் வந்துவிடும். ஆகவே உங்கள் கழுத்தினை தவறாமல் பராமரித்திடுங்கள். உங்கள் கழுத்தை எப்படி அழகாக காண்பிக்கலாம் என பார்க்கலாமா?
கழுத்திற்கு ஸ்க்ரப் செய்யுங்கள் : முகத்திற்கு ஸ்க்ரப் செய்யும்போது பெரும்பாலும் நீங்கள் கழுத்திற்கு போடமாட்டீர்கள்தானே. அது தவறு. கழுத்தில்தான் வியர்வை அதிகம் சுரக்கும். ஆகவே கருமைடைவதும் அங்கேதான். அதுவும் பின்னங்கழுத்தில் கண்டிப்பாக நீங்கள் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் இறந்த செல்கள் அழுக்குகள், வியர்வை ஆகியவை நீக்கப்படும். சுருக்கங்கள் வராது.
முட்டைப் பேக் : முட்டையின் வெள்ளைக் கருவில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து, கழுத்தில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து, கழுவவும். இதனால் இரட்டை நாடி, மற்றும் தொங்கும் சதை வராமல் இறுகி, உங்கள் முகத்தை சிக்கென்று காண்பிக்கும்.
ஓட்ஸ் முட்டை பேக் : ஓட்ஸ் வேக வைத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் முட்டைவெள்ளைக் கரு மற்றும் எலுமிச்சை சாறு சில துளி கலந்து, கழுத்தில் பேக் போடவும். காய்ந்தபின் கழுவவும். இப்படி செய்தால், கழுத்திலுள்ள சருமம் இறுகி, தளர்வடையாமல் பாதுகாக்கும். 15 நாட்களுக்கு ஒருமுறை செய்யலாம்.
பீச் , யோகார்ட் பேக் : பீச் பழத்தை மசித்து, அதன் சாறினை எடுத்து, அதில் தேன் மற்றும், யோகார்ட் சேர்த்து, நன்றாக கலக்கவும். இதனை கழுத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவினால், கழுத்திலுள்ள கருமை போய், சுருக்கங்கள் நீங்கி, அழகாக இருக்கும்.
விட்டமின் ஈ : விட்டமின் ஈ கேப்ஸ்யூலை அல்லது க்ரீமை எடுத்து தினமும் இரவு தூங்கும்போது கழுத்தில் தடவி கீழிருந்து மேல் நோக்கி மசாஜ் செய்யுங்கள். இதனால் கழுத்தில் சதை தொங்காமலும் சுருக்கங்கள் இல்லாமலும் அழகான கழுத்தை பெறுவீர்கள்.