முதுமையடைவது இயற்கையானதுதான். 60 வயதிற்குபின் சுருக்கங்கள் அழகு. அதனை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் விரைவில் அல்லது தாமதமாக முதுமையடைவது அவரவர் வாழும் முறைகளில் உள்ளது.
நீங்கள் கவனித்திருப்பீர்களேயானால், சிலர் 70 வயதிலும் இளமையாகவே இருப்பார்கள். சுருக்கங்கள் இருக்காது. நரைமுடியும் குறைவாகவே இருக்கும்.
ஆனால் இன்னும் சிலரோ 40 வயதிலேயே 60 வயதிற்கான சுருக்கங்களை பெற்றுவிடுவார்கள். இதற்கு காரணம் என்ன? வாருங்கள் பார்ப்போம்
ஏன் கண்களைச் சுற்றி விரைவில் சுருக்கங்கள் வருகிறது என தெரியுமா? நமது சருமத்தில்,நீர் தேவையான அளவு இருந்தால்தான் ஒழுங்காக வளர்சிதை மாற்றம் நடைபெறும். அதாவது சரும செல்கள் புதுப்பித்துக் கொண்டேயிருக்கும். நீர் இல்லையென்றால், புது செல்கள் வளராமல், வளர்சிதை மாற்றம் குறைந்து இறந்த செல்கள் மட்டும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும். இதுதான் சுருக்கங்கள் வரக் காரணம். மிக மென்மையான பகுதியாக கண்களைச் சுற்றி இதனால்தான் சுருக்கங்கள் வரத் தொடங்குகின்றன.
இது தவிர்த்து, சரியான உறக்கம் இல்லாமல் இருந்தால், மது அருந்துவதால், அதிக சர்க்கரை உள்ள இனிப்புவகைகளை சாப்பிட்டால், சீக்கிரம் நீரிழப்பு உடலில் ஏற்படும். சுருக்கங்களையும் வரவேற்க தொடங்கிவிடுகிறோம்.
சர்க்கரை அளவைக் குறையுங்கள் : சர்க்கரை அதிகமாக உபயோகித்தால், கொலாஜன் உற்பத்தி குறைந்துவிடும். இளமையாக இருக்கவும், சுருக்கங்கள் வராமலிருக்கவும், கொலாஜன் அவசியம். ஆகவே சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.
அதிகமாக காய், பழங்களை சாப்பிடுங்கள் : நார்ச்சத்துக் கொண்ட, காய்கறிகள் மற்றும் பழங்கள் உங்களை இளமையாக வைத்திருக்கும். கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். கண்களைச் சுற்றிலும் சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கும்.
அடர் பிரவுன் சாக்லெட் சாப்பிடுங்கள் : அடர் பிரவுன் நிற சாக்லேட் எபிகேட்சின், கேட்சின்என்ற இரு தாவர கெமிக்கல்களைக் கொண்டுள்ளன. இந்த இரண்டுமே சூரிய புற ஊதாக்கதிர்களிடமிருந்து சருமத்தை பாதுகாக்கின்றன.
ஸ்க்ரப் உபயோகியுங்கள் : சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்ற இயற்கையான கடலை மாவு, அரிசி மாவு, பயிற்றம் மாவு ஆகியவற்றை உபயோகிக்கலாம். கெமிக்கல் கலந்த ஸ்க்ரப் உபயோகிக்கக் கூடாது.
ஈரப்பதம் அளித்திடுங்கள் : தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை முகத்திலும், கண்களைச் சுற்றிலும் தினமும் தடவி குளியுங்கள். இவை ஈரப்பதம் தரும். மேலும் பேராபின் தாலேட் போன்ற பிரசர்வேட்டிவ் இல்லாத மாய்ஸ்ரைஸர் க்ரீம்களை உபயோகிக்கலாம். தவறாமல் நிறைய நீர் அருந்துங்கள்.
விட்டமின் சி : விட்டமின் சி நிறைந்த உணவுகள் கொலாஜனை உருவாக்குகின்றன என நிறைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விட்டமின் சி நிறைந்த பழங்களைக் கொண்டு ஃபேஸ் பாஸ்க் போடலாம். அவ்வாறு சுருக்கங்களைப் போக்கும் சில குறிப்புகளை பார்க்கலாம்.
அவகாடோ ஃபேஸ் பேக் : அவகாடோவில் விட்டமின் சி, ஏ அதிகம் உள்ளது. அவகாடோவின் சதைப்பகுதியை மசித்து முகத்திலும், கண்களைச் சுற்றிலும் போட்டு 10 நிமிடம் கழித்து , குளிர்ந்த நீரில் கழுவினால், சுருக்கங்கள் மறையும்.
வெள்ளரி ஃபேஸ் பேக் : வெள்ளரிக்காயை மசித்து, அதனுடன் சிறிது பால் சேர்த்து, முகத்தில் போட்டால், சருமம் பளிச்சிடும். சுருக்கங்கள் மாயமாக மறைவது உறுதி.
தேன் மற்றும் யோகார்ட் : யோகார்ட்டில் சிறிது தேன் கலந்து கண்களைச் சுற்றி தடவி இதமாக மசாஜ் செய்யுங்கள். உங்கள் கண்கள் இளமையாகவே என்றும் இருக்கும்.