முகப்பருவால் அவஸ்தைப்படுபவரா? உங்களுக்கு திடீரென்று அடிக்கடி முகப்பரு வருமா? அதற்கு காரணம் என்னவென்றே தெரியவில்லையா? அப்படியெனில் நீங்கள் உங்கள் சருமத்திற்கு ஏதோ தவறு இழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
அதாவது நீங்கள் முகப்பரு வரும்படியான செயல்களை உங்களை அறியாமலேயே செய்து வருகிறீர்கள் என்று அர்த்தம். அந்த செயல்கள் என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். குறிப்பாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள செயல்கள் அனைத்தும் பலரும் அன்றாடம் செய்து வரும் ஒன்று தான்.
சரி, இப்போது முகப்பருவை வரவழைக்கும் அந்த செயல்கள் என்னவென்று பார்ப்போம்.
முகம் கழுவாமல்/மேக்கப்பை நீக்காமல் தூங்குது முகப்பரு அதிகம் வருவதற்கு முக்கிய காரணம், இரவில் படுக்கும் போது மேக்கப்பை நீக்காமல் இருந்தாலோ அல்லது நீரால் முகத்தைக் கழுவாமல் தூங்கினாலோ, சருமத்தில் அழுக்குகள் தேங்கி சருமத்துளைகளில் அடைப்புக்களை ஏற்படுத்தி, முகப்பருக்களை உண்டாக்கும்.
அளவுக்கு அதிகமாக முகத்தைக் கழுவுவது சிலர் முகத்தை அளவுக்கு அதிகமாக கழுவுவார்கள். இப்படி அதிகமாக முகத்தைக் கழுவினால், முகப்பரு வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கும். எனவே ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் முகத்தை கழுவாதீர்கள். இல்லாவிட்டால் சருமம் வறட்சியடைந்து, சருமத்தில் சுரக்கும் எண்ணெயின் அளவு அதிகரித்து, பிம்பிள் அதிகம் வர ஆரம்பிக்கும்.
ஆன்டி-ஏஜிங் பொருட்கள் சிலர் முதுமையைத் தடுக்கிறேன் என்று ஆன்டி-ஏஜிங் பொருட்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவார்கள். இப்படி அடிக்கடி ஆன்டி-ஏஜிங் பொருட்களைப் பயன்படுத்தினால், சருமத்தில் பருக்கள் அதிகம் வர ஆரம்பித்துவிடும்.
சரும பராமரிப்பு பொருட்கள் சிலர் தங்களது முகத்திற்கு தினமும் ஏதேனும் க்ரீம் அல்லது மாய்ஸ்சுரைசர்களைப் பயன்படுத்தி வருவார்கள். இப்படி ஒருவர் அதிகமான அளவில் கெமிக்கல் கலந்த சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தும் போது, அதில் உள்ள கெமிக்கல்கள் சருமத்துளைகளில் அடைப்புக்களை உண்டாக்கி, பருக்கள் அதிகம் வர வழிவகுத்துவிடும்.
முடி பராமரிப்பு பொருட்கள் தலைமுடி பராமரிப்பு பொருட்களுக்கும் முகப்பருவிற்கும் சம்பந்தம் இருக்காது என்று நினைக்காதீர்கள். நீங்கள் தலையில் கையை வைத்த பின், நேரடியாக முகத்தில் கையை வைக்கும் போது, அதில் உள்ள சிலிக்கான், சருமத்துளைகளை அடைத்து, பருக்களை உண்டாக்கும்.
அதிகப்படியான ஸ்கரப் சருமத்தை புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் வெளிக்காட்ட இறந்த செல்களை நீக்க ஸ்கரப் செய்ய வேண்டியது அவசியம். ஆனால் இந்த ஸ்கரப்பை ஒருவர் அதிகமாக செய்யும் போது, சருமத்தில் பாக்டீரியாக்கள் வேகமாக பரவி, பருக்கள் வர வழிவகுக்கும்.
பல நாட்களாக ஒரே தலையணை உறை தலையணை உறையை வாரக்கணக்கில் பயன்படுத்தி வந்தால், அதனால் முகப்பருக்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். எனவே தவறாமல் வாரத்திற்கு ஒருமுறையாவது தலையணை உறையை மாற்றுங்கள்.