என்னென்ன தேவை?
வாழைப்பூ – 1 (சிறியது)
உருளைக்கிழங்கு – 50 கிராம்
வெங்காயம் – 50 கிராம்
பச்சை மிளகாய் – 10 கிராம்
இஞ்சி – 10 கிராம்
பிரெட் தூள் – கையளவு
உப்பு – தேவையான அளவு
கரம் மசாலாப்பட்டை – சிறிதளவு
மிளகு – 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
கொத்தமல்லி – 1 கொத்து
எப்படி செய்வது?
வாழைப்பூவில் நரம்பெடுத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை வெட்டிக் கொள்ளுங்கள். பச்சைமிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம், கரம் மசாலாப் பட்டை, கறிவேப்பிலையைச் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்குங்கள்.
வெங்காயம் பொன்னிறமானதும், சிறிதளவு தண்ணீர் சேர்த்து வாழைப்பூவைப் போட்டு உப்பு, அரைத்து வைத்துள்ள மசாலாப் பொருட்களைச் சேர்த்து கிளறுங்கள். பிறகு உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்கு கிளறுங்கள். அனைத்தும் இரண்டறக் கலந்து வெந்ததும் இறக்கி ஆறவைத்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். பிறகு, ஒவ்வொரு உருண்டையாக பிரெட் தூளில் தோய்த்து, சதுரமாகத் தட்டி நான்-ஸ்டிக் தோசைக்கல்லில் வைத்து வேகவிடுங்கள். நன்கு வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறுங்கள்.