இன்றைய நாளில் அனைவரும் சாதாரணமாய் வாங்க கூடியவாறு சிறியது முதல் பெரிய அளவிலான வைர நகைகள் கிடைக்கின்றன.
உள்ளம் கொள்ளை போகும் – வைர நகைகள்
வைர நகைகள் கண்ணை பறிக்கும் ஒளியுடன் மங்கையர் மனங்கவரும் வகையில் உருவாக்கப்படுகின்றன. வைரம் அரசர்களும், ஜமீன்களும் தங்கள் கஜானாவில் பொத்தி பாதுகாத்து வந்தனர். இன்றைய நாளில் அனைவரும் சாதாரணமாய் வாங்க கூடியவாறு சிறியது முதல் பெரிய அளவிலான வைர நகைகள் கிடைக்கின்றன. வைரத்தில் செய்யப்படும் நகைகள் என்பதில் அனைவருக்கும் பிடித்தமானவை வைர மோதிரம். அதற்கடுத்து வைர கம்மல், வைர நெக்லஸ் போன்றவாறு விரிந்த அளவில் உள்ளன.
வைர நகைகள் முன்பு போல் அதிக எடையுடன் உருவாக்கப்படுவதில்லை. தற்போது வைர நகைகளிலும் எடை குறைந்த தயாரிப்புகள் வரத் தொடங்கியுள்ளன. பார்க்க பரவசமூட்டும் எடை குறைவான வைர நகைகள் அணிவதற்கு ஏற்ற லகுவான நகையாகவும், பார்க்க பிரம்மாண்டமாயும் தோற்றமளிக்கின்றன. எடை குறைந்த லைட் வெயிட் வைர நகைகள் விலையும் வாங்கக்கூடியவாறு உள்ளது.
லைட் வெயிட் வைர நகைகள் :
லைட் வெயிட் வைர நகைகள் என்பவை பரந்த வடிவில் இல்லாமல் மெல்லிய அதே நேரம் சற்று பாந்தமான நகையாக தோற்றமளிக்கின்றன. லைட் வெயிட் நகைகள் என்பதில் வைர நெக்லஸ், காதணிகள், பிரேஸ்லெட் போன்றவை உள்ளன.
மெல்லிய வடிவில் இரட்டை வைரங்கள் வரிசையாய் பொறிக்கப்பட்டு நடுவில் பியர் வடிவ பெண்டன்ட் கொண்ட நெக்லஸ் அற்புதம்.
அதுபோல் வட்ட வடிவ சாலிடர் டைமண்ட் ஒற்றை வரிசையில் பதியப்பட்டு நடுப்பகுதியில் பூ அமைப்புடன் கீழே மாணிக்க நிற கல் தொங்க விடப்பட்டுள்ளது. ஏழு கல் வைர தோடு மிக பிரபலம். இந்த ஏழு கல் வைர தோடு கழுத்துபகுதி சுற்றி இணைந்தவாறு உள்ள நெக்லஸ் திருமண விசேஷங்களுக்கு ஏற்ற வைர நெக்லஸ் ஆக உள்ளது.
புதிய வடிவமைப்புடன் கூடிய வைர நெக்லஸ்கள் :
வைர நெக்லஸ்களின் புதிய வடிவில் ஒரு பகுதி தங்கமயமாய் மின்ன ஒரு பகுதி வைர கற்களாய் ஜொலிக்கிறது. அதாவது இலை வடிவம் மற்றும் பூக்கள் வடிவில் ஒரு பக்க தங்க பின்னணி கொண்டவாறு ஒரு பகுதியில் வைர கற்கள் பதித்தவாறும் உள்ளன. இந்த நெக்லஸ் கழுத்தில் அணிய ஏற்றது என்பதுடன் பார்ப்பவர் வியக்கும் அளவில் உள்ளது.
ஏராளமான வளைவுகள் மற்றும் பூக்கொடி அமைப்பில் வைர நெக்லஸ்கள் உள்ளன. இவை அனைத்தும் அதிக எடையின்றி மெல்லிய வடிவிலான எடை குறைந்த நெக்லஸ் என்பதால் வைரத்தின் அளவுகள் குறைகின்றன. விலையும் சற்று குறைவு.
வைரத்தில் ஜொலிக்கும் நீண்ட ஆரம் :
வைரத்தில் கழுத்தை இறுக்கி பிடிக்கும் சோக்கர் நெக்லஸ், சற்று தளர்வாய் நெக்லஸ் போன்று பெரிய நீளமான ஆரங்களும் உள்ளன. இலைகள் விரிந்தவாறு வரிசை கிரமமாய் ஓரப்பகுதியில் மொட்டுகள் உள்ளவாறு நீண்ட ஆரம். அதன் நடுவே பூ பென்டன்ட் அதன் நடுப்பகுதியில் மரகத பச்சை கல் பதியப்பட்டுள்ளது. அதன்கீழ் வைர மணிகள் தொங்கவிடப்பட்டுள்ளன. பதக்க அமைப்பு கொண்ட நீளமான ஆரமும் உள்ளன.
வைர காதணிகளில் வெள்ளை கற்கள் ஊடே பலநிற கற்கள் பதித்தவாறு ஜிமிக்கி மற்றும் தொங்கும் காதணிகள், அழகுற வருகின்றன. வைர கற்கள் அனைவரும் அணிய ஏற்றவாறு சிறு மற்றும் எடை குறைந்த நகைகளாக வந்துள்ளன.