சிறுவயதில் நாம் அதிகம் விரும்பி வாங்கி சாப்பிட்ட தேங்காய் பர்ஃபியை, இப்போது கடைகளுக்குச் சென்று கேட்டால் அவ்வளவு எளிதில் கிடைக்காது. அந்த அளவில் அது மிகவும் அரிதாகவே கிடைக்கும். ஆனால் அந்த தேங்காய் பர்ஃபியை கடைக்கு எல்லாம் செல்லாமல் வீட்டிலேயே எளிமையாக செய்து சாப்பிடலாம்.
அதிலும் மாலை வேளையில் இதனை செய்தால், வீட்டில் உள்ள குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் அல்லவா! சரி, இப்போது அந்த தேங்காய் பர்ஃபியை எப்படி வீட்டிலேயே ஈஸியாக செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய் – 1 கப் சர்க்கரை – 3/4 கப் தண்ணீர் – 1/4 கப் நறுக்கிய முந்திரி – 1 டேபிள் ஸ்பூன் நெய் – 4 டீஸ்பூன் ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
செய்முறை: ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கித் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு தட்டில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி தடவி தனியாக வைத்துக் கொள்ளவும் பின்னர் ஒரு நான்-ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை கொதிக்க விடவும். சர்க்கரை நன்கு கரைந்து, ஓரளவு கெட்டியாக வரும் போது, அதில் துருவிய தேங்காயை சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். அப்படி கிளறிவிடும் போது, நுரைக்க ஆரம்பிக்கும் தருணத்தில் முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து 3-5 நிமிடம் கிளறி, ஓரளவு கெட்டியாகும் போது அடுப்பை அணைத்து, தட்டில் அக்கலவையைக் கொட்டி பரப்பி, கத்தியால் துண்டுகளாக்கினால், தேங்காய் பர்ஃபி ரெடி!!!