சமீபமாக முடி உதிர்தல் அதிகமாக இருக்கிறதா? கூந்தல் முடி வெட்டியும் இன்னும் ஒரு இன்ச் கூட வளர வில்லையே என நினைக்கிறீர்களா? மேல் நெற்றியில் சொட்டை விழுவது போல் ஆரம்பிக்கிறதா? எலி வால் போல் நாளுக்கு நாள் அடர்த்தி குறைந்து கொண்டே போகிறதா? அப்போ இந்த எளிய வழியை நீங்கள் ஏன் பின்பற்றக் கூடாது.
அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. ஆலிவ் எண்ணெய் மற்றும் ஒரு முட்டை இருந்தால் போதும். ஆலிவ் எண்ணெய் வேர்கால்களைத் தூண்டி, முடியினை வளர்ச் செய்யும். கூந்தலுக்கு மிருதுத் தன்மையையும், பளபளப்பையும் கொடுக்கும்.
முட்டையில் புரோட்டின் அதிகம் உள்ளது. அவை முடிகளுக்கும் ஸ்கால்ப்பிலும் போஷாக்கு அளித்து, நன்றாக வளரச் செய்கிறது. வேர்கால்களில் உள்ள செல்களுக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது. கூந்தலை பலப்படுத்துகிறது.
இந்த பேக்கை வாரம் தவறாமல் தலைமுடியில் தடவ வேண்டும். தொடர்ந்து உபயோகப்படுத்தினால், உங்கள் கூந்தலில் ஏற்படும் மாற்றங்களை காண்பீர்கள். நீங்களே வியக்கும் வண்ணம் கூந்தல் வளர்ச்சி இருக்கும்.
தேவையானவை : முட்டை – 1 ஆலிவ் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
முட்டை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஆலிவ் எண்ணெயை கலந்து பேக்கை ரெடி செய்து கொள்ளுங்கள். இப்போது இந்த கலவையினை ஸ்கால்ப்பிலிருந்து நுனி வரை தடவ வேண்டும்.
அரைமணி நேரம் கழித்து அடர்த்தி குறைந்த ஷாம்புவை பயன்படுத்தி கூந்தலை அலசுங்கள்.
முதல் தடவையிலேயே நீங்கள் மாற்றத்தினை காண்பீர்கள். கூந்தல் மிருதுவாய் பளபளப்புடன் காணப்படும். நாளடைவில் உங்கள் முடி உதிர்தல் பிரச்சனை நின்று, அடர்த்தியாய் முடி வளர ஆரம்பிக்கும்.