ஓயாமல் வேலை, அப்படா என உட்கார்ந்தாலும் உடல் அசதி பாடாய் படுத்தும். உடல் வலி, மூட்டு வலி, காய்ச்சல் வந்தவுடன் வரும் அசதி, என உடல் நம் மனம் விரும்பும்படி இல்லாமல், வீம்பு பண்ணுகிறதா?
புத்துணர்ச்சியுடன் வைக்கும் இந்த வெண் கடுகுக் குளியல் உங்களுக்கு மிகவும் உபயோகமாய் இருக்கும்.
இந்த வெண் கடுகுக் குளியல் யாருக்கெல்லாம் உபயோகமாய் இருக்கும் என்றால், புத்துணர்ச்சி கட்டாயம் தேவை என்பது போல் உடல் அசதி படுத்தினால், உடல் நலம் பாதிக்கப்பட்டு குணமானவர்களுக்கு, வயதானரவர்களுக்கு, நாள் முழுவதும் வேலையினால் சோர்வாக இருப்பவர்கள் என எல்லாருக்குமே உகந்தது.
ஒற்றைத் தலைவலியில் அவதிப்படுபவர்கள், மனஅழுத்தத்தில் உள்ளவர்களுக்கு இந்த குளியம் நல்ல மாற்றத்தை உண்டு பண்ணும். வெண் கடுகுக் குளியல், தசைகளுக்கு புத்துணர்ச்சி அளித்து, இறுக்கத்தை போக்கச் செய்கிறது. இதனால் வலி குறைந்து இதமளிக்கும்.
இது வியர்வை சுரப்பிகளை தூண்டும். இதனால் நச்சுக்கள் சரும துவாரங்கள் மூலமாக வெளியேற்றப்படுகிறது. நச்சுக்கள் வெளியேறியதும், ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. உடலில் பாதிப்புகள் மெல்ல குறைகிறது.
வெண் கடுகுக் குளியலுக்கு தேவையானவை : வெண் கடுகு பொடி-கால் கப் கடல் உப்பு (dead sea salt-அரோமா கடைகளில் விற்கும்)- கால் கப் எப்ஸம் உப்பு- கால் கப் சமையல் சோடா- கால் கப் அரோமா எண்ணெய்-10-12 துளிகள்
அரோமா எண்ணெயில் பாதாம், லாவெண்டர் என ஏதாவது உங்களுக்கு பிடித்த எண்ணையாக வாங்கிக் கொள்ளலாம்.
மேலே கூறிய அனைத்தையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதனை ஒரு ஜாரில் எடுத்து வைத்து தேவைப்படும்போது உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு பக்கெட் சுடு நீரில், இந்த பொடியை 2 ஸ்பூன் எடுத்து கலந்து அரை மணி நேரம் ஊற விடுங்கள். பின் அந்த நீரில் குளிக்கலாம்.
இந்த வெண் கடுகுக் குளியலில் அடங்கியுள்ள பொருட்கள் அனைத்தும் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இவை உடலுக்குள் உட்சென்று உள்ளிருந்து நிவாரணம் அளிப்பதால், தினமும் இந்த குளியலை மேற்கொண்டால் உடலிலுள்ள சிறு சிறு பிரச்சனைகளைக் குணப்படுத்தும்.
வெண் கடுகு உடலுக்கு லேசான வெப்பம் தந்து, அதிகப்படியான பித்தத்தை போக்குகிறது. சமையல் சோடா, நீரில் அமில காரத் தன்மையை சமன் படுத்துவதால் நீரினால் ஏற்படும் அலர்ஜியை வராமல் கட்டுப்படுத்துகிறது.
சமையல் சோடா உடலில் படிந்துள்ள இறந்த செல்களை அகற்றி, சருமத்தை தூய்மைப் படுத்துகிறது. எப்ஸம் உப்பும், கடல் உப்பும் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதால், உடலின் நாடி நரம்புகளில் ஏற்பட்ட இறுக்கத்தை தளர்த்தி புத்துணர்வை அளிக்கிறது.
இதனை எந்த வயதினரும் பயன்படுத்தலாம். இதனால் எந்த பக்கவிளைவுகள் இல்லை. சருமத்திற்கு பாதுகாப்பு அளித்து, அலர்ஜியை தடுக்கும் மூலிகைக் குளியல் இது. நீங்களும் வீட்டில் செய்து, அதன் பலன்களை பெறுங்கள்.