ருசியான சமையல் சமைக்க, கூந்தலுக்கு, சருமத்திற்கு ,சோப்புகள் தயாரிக்க, அழகு சாதனங்கள் தயாரிக்க என ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தாத துறைகளே இல்லை. உங்களின் அழகுக்கு அழகு சேர்க்க ஆலிவ் எண்ணெய் செய்யும் மாயஜாலங்களை தெரிந்து கொள்ளுங்கள்…
பாதம் :
உங்கள் பாதங்களை கொஞ்சம் பாருங்கள். அது சொர சொரவென, வறண்டு,தோல் சுருங்கி உள்ளதா? அப்படியென்றால் ஆலிவ் எண்ணெயை நீங்கள் உபயோகிக்க வேண்டும்.
இரவில் தூங்கும் முன் ஆலிவ் எண்ணெயை பாதம் முழுக்க பூசி இரவு முழிவதும் ஊற விடுங்கள். தினமும் இவ்வாறு செய்தால் ஒரே வாரத்தில் உங்கள் பாதம் பூ போன்று மென்மையாகிவிடுவது உண்மை.
நகங்கள்:
உங்களின் நகத்தோல் உரிந்து, நகங்கள் வளராமல் உடைந்து போகிறதா? ஒரு சிறிய கிண்ணத்தில் ஆலிவ் எண்ணெயை ஊற்றி அதில் கைகளை நனையுங்கள். 10 நிமிடங்கள் கழித்து பாருங்கள். நகங்கள் மினுமினிக்கும். நன்றாக வளரும்.
உதடு:
உதடு வறண்டு, கருமையாக இருந்தால், ஆலிவ் எண்ணெய் தினமும் பூசி வர, உதடுகள் பிரகாசமாகும்.
கூந்தல்:
கூந்தலுக்கு மிகவும் ஏற்ற எண்ணெய் ஆலிவ் எண்ணெயாகும். பொடுகினை தடுக்கிறது. முடி கொட்டுவதை நிறுத்துகிறது. முடியை பட்டுப் போல் ஆக்குகிறது. ஆலிவ் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடு செய்து அதனை முடியின் வேர்க்கால்களில் நன்கு படும்படி தேய்த்து, மசாஜ் செய்ய வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து ஷாம்புவினால் அலச வேண்டும்.
சருமம்:
சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்ரைஸராகும். தோலின் மிருதுத்தன்மையை கூட்டி, நிறத்தினை அதிகரிக்கச் செய்யும். தினமும் குளிக்கும் முன் ஆலிவ் எண்ணெயை பூசி 20 நிமிடங்கள் கழித்து குளிக்கலாம். வித்யாசத்தை நீங்களே உணர்வீர்கள்.
மேக்கப் ரிமூவர் :
மேக்கப்பை அகற்ற ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம். சில துளிகளை எடுத்துக்கொண்டு முகத்திலும், கண்களை சுற்றியும் மெதுவாய் மசாஜ் செய்ய வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். மேக்கப்பை எளிதில் அகற்றலாம். ஆலிவ் ஆயில் சருமத்தின் உள்ளே வரை சென்று அழுக்குகளை நீக்குகிறது.
மேலும் ஆலிவ் எண்ணெயை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், உடலில் தேஜஸ் வருவதை யாராலும் தடுக்க இயலாது. உபயோகிப்படுத்திப் பாருங்கள். இளவரசியாய் வலம் வாருங்கள்