தலைமுடி உதிர்வது, பொடுகுத் தொல்லை போன்றவை நாம் தலைக்கு குளிக்கும் போது செய்யும் சில தவறான பழக்கவழக்கங்களாலும் வரலாம். எனவே ஒருவர் தலைக்கு குளிக்கும் போது ஒருசில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். அப்படி அந்த விதிமுகளைப் பின்பற்றினால், தலைமுடி பிரச்சனைகளில் இருந்து பாதி விடுபடலாம்.
தற்போதைய அவசர உலகில், நிம்மதியாக தலைக்கு குளிக்க கூட நேரம் இல்லாமல் பலர் உள்ளனர். ஆனால் தலைமுடி கொட்டுகிறது என்று வருத்தம் மட்டும் அடைவார்கள். முதலில் உங்கள் முடிக்கு நீங்கள் கொடுக்கும் பராமரிப்புக்களைப் பொறுத்து தான் உங்கள் முடியின் ஆரோக்கியம் உள்ளது.
தலைக்கு குளிக்கும் போது நாம் மேற்கொள்ளும் தவறான பழக்கவழக்கங்களை கீழே குறிப்பிட்டுள்ளது. அதைப் படித்து உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள்.
பழக்கம் #1 நேரம் ஆகி விட்டது என்று தலைமுடியை நீரில் நன்கு முழுமையாக அலசுவதற்கு முன்பே ஷாம்பு போடுவதைத் தவிர்க்க வேண்டும். முதலில் தலைமுடியை நீரில் நன்கு அலசி, பின் ஷாம்பு போட்டால் தான், ஸ்கால்ப்பில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறி, தலைமுடியும், ஸ்கால்ப்பும் சுத்தமாக இருக்கும்.
பழக்கம் #2 எப்போதும் ஷாம்புவை அப்படியே தலைக்கு பயன்படுத்தும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். மாறாக அதனை நீரில் கலந்து, பின் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் ஷாம்புவில் உள்ள கெமிக்கல்கள் நேரடியாக தலைமுடியின் படுமாயின், முடி கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகும். அதுவே நீரில் கலந்து பயன்படுத்தினால், கெமிக்கலினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
பழக்கம் #3 கண்ட ஷாம்பு மற்றும் கண்டிஷனரை வாங்கிப் பயன்படுத்துவதை முதலில் நிறுத்துங்கள். நறுமணத்திற்காக ஷாம்பை வாங்காமல், தலைமுடிக்கு ஏற்றவாறான ஷாம்புவை வாங்கிப் பயன்படுத்துங்கள். உதாரணமாக, உங்களுக்கு வறட்சியான முடி என்றால், அதற்கு ஏற்ற ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள்.
பழக்கம் #4 கண்டிஷனர் பயன்படுத்தும் போது ஸ்கால்ப்பில் மறந்தும் தடவி விடாதீர்கள். கண்டிஷனர் என்பது முடிக்கு மட்டும் தான். அதனை ஸ்கால்ப்பில் பயன்படுத்தினால் பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படக்கூடும்.
பழக்கம் #5 முக்கியமாக தினமும் தலைக்கு குளிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள். இப்படி தினமும் தலைக்கு குளித்தால், மயிர்கால்கள் பாதிப்பிற்குள்ளாக தலைமுடி உதிர்விற்கு வழிவகுக்கும். எனவே வாரத்திற்கு 2-3 முறை மட்டும் தலைக்கு குளிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். Ads by Revcontent
பழக்கம் #6 ஷாம்பு மற்றும் கண்டிஷனரை அதிகமாக பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் அதில் கெமிக்கல் அதிகம் உள்ளது. இந்த கெமிக்கல் தலைமுடியில் அதிகம் பட்டால், முடி கடுமையாக பாதிக்கப்படும். எனவே சரியான அளவில் மட்டும் பயன்படுத்துங்கள்.
பழக்கம் #7 தலைக்கு எப்போதும் மிகவும் சூடாக இருக்கும் நீரைப் பயன்படுத்தாதீர்கள். இதனால் தலைமுடி உடைய மற்றும் மிகுந்த வறட்சி அடையக்கூடும். மேலும் சுடுநீர் ஆரோக்கியமான முடி செல்களை அழித்துவிடும். ஆகவே வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீரால் மட்டும் தலைமுடியை அலசுங்கள்.
பழக்கம் #8 நேரமாகிவிட்டது என்று வெறும் ஷாம்பு நுரை போகும் வரை மட்டும் தலைமுடியை அலசாமல், நன்கு நீரில் அலசும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், பொடுகு, முடி உதிர்தல் பிரச்சனையை சந்திக்க வேண்டி வரும்.
பழக்கம் #9 தலைக்கு குளித்து முடித்த பின், முடி வேகமாக உலர வேண்டும் என்று பலர் டவலைக் கொண்டு நன்கு தேய்ப்பார்கள். இப்படி கடுமையாக தேய்த்தால், முடி கையோடு வந்துவிடும். எனவே ஈரமான முடியை எப்போதும் தேய்க்கும் பழக்கத்தை கைவிடுங்கள்.
பழக்கம் #10 முக்கியமாக ஈரமான முடியில் சீப்பைப் பயன்படுத்தாதீர்கள். இல்லாவிட்டால், முடி மேலும் பாதிப்பிற்குள்ளாகும்.