குழந்தைகளுக்கு சோளம் என்றால் பிடிக்கும். அத்தகைய சோளத்தை வெறுமனே வேக வைத்து சாப்பிடக் கொடுக்காமல், வடை போன்று செய்து கொடுக்கலாம். இதனால் அவர்களின் பசி போவதோடு, சந்தோஷமாகவும் இருப்பார்கள். மேலும் இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.
இங்கு ஆந்திரா ஸ்டைல் கார்ன் வடையை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்: கார்ன்/சோளம் – 1 கப் + 1/4 கப் (வேக வைத்தது) கடலைப் பருப்பு – 1/2 கப் வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் – 2 இஞ்சி – 1/2 இன்ச் சீரகம் – 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிது உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு (பொரிப்பதற்கு)
செய்முறை: முதலில் கடலைப்பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் சோளம், கடலைப் பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து 1-2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்ததை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் வேக வைத்த சோளம், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, சீரகம், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெயானது சூடானதும், அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை வடைகளாக தட்டி போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ஆந்திரா ஸ்டைல் கார்ன் வடை ரெடி!!!