26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
15
ஃபேஷன்

பட்டுப்பெண்களின் பளபள புடவைகள்!

தங்கம் எத்தனையோ தடைகளை சந்தித்திருக்கிறது.தடை தங்கத்துக்கு மட்டும்தான். தங்க ஜரிகையிட்ட பட்டுப்புடவைகளுக்குத் தடை இல்லை. அப்போதைய நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாயால் ‘கோல்டு கன்ட்ரோல் ஆக்ட்’ 1968 ஆகஸ்ட் 24 முதல் அமல்படுத்தப்பட்டது. அப்போது தங்க நகை விற்பனையும் தனிநபர் இருப்பும் தடை செய்யப்பட்டன. 1962ல் இருந்தே கோல்டு கன்ட்ரோல் ஆக்ட் அமலில் இருந்தாலும், 1968ல்தான் தீவிரமடைந்தது.

1962ல் தங்க நகைக் கடன் மறுக்கப்பட்டது. 1963ல் 14 கேரட்டுக்கு மேலான தங்க விற்பனை தடை செய்யப்பட்டது. தனிநபரும் பார் மற்றும் நாணயங்கள் வைத்திருப்பது தடைசெய்யப்பட்டு, அவர்கள் வைத்திருக்கும் நகைகளை 14 கேரட்டாக மாற்றி அறிவிக்க வழி வகுக்கப்பட்டது. 1965ல் கோல்டு பாண்ட், அதுவரை கணக்கில் காட்டப்படாத சொத்துகளை தானாகவே வந்து அரசிடம் காட்டவும் அதற்கு அவர்கள் இம்யூனிட்டி கொடுக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதற்கு VDIS (Voluntary Disclosure of Income Scheme) என்று பெயர்.

1990 ஜூன் 6ல், இந்த கோல்டு கன்ட்ரோல் ஆக்ட் திரும்பப் பெறப்பட்டது. இத்தனை தடைகளும் தங்க நகைக்கடைக்காரர்
களுக்கு மட்டுமே. அசல் தங்கம் போட்டு சுத்தமான ஜரிகை வைத்த பட்டுப்புடவைகள் விற்பனைக்குத் தடை இல்லை. தடை செய்யப்படாத பட்டுப்புடவை விற்பனை சமீபத்தில் அமோகமாக இருக்கிறது. கி.மு. 2450ல் இருந்து 2000 காலகட்டத்திலேயே ஆசிய நாடுகளில் பட்டு உபயோகிக்கப்பட்டது. கி.மு. 2570ல் சீனாவில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.

பட்டுப்புழுக்கள் கொல்லப்படாமல் அவை கூட்டில் இருந்து வெளி வந்தபின், அந்தக் கூடுகளில் இருக்கும் பட்டை வைத்து தயாரிக்கப்படும் ‘அஹிம்சா பட்டு’ மகாத்மா காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்துப் பெண்களாலும் விரும்பப்படும் காஞ்சிபுரம் பட்டின் பளபளப்புக்கும் ஜரிகையின் மினுமினுப்புக்கும் முறையாக தயாரிக்கப்பட்டு 3 இழையில் முறுக்கப்பட்ட பட்டும் முறைப்படுத்திய தங்க, வெள்ளிக் கலவையுமே காரணம்.

மிக சமீபகாலமாக காஞ்சிப் பட்டு, 3 இழைகளைக் கொண்டு முறுக்கி (3 பிளை) தயாரிக்கப்படுகின்றன.ஒரிஜினல் ஜரிகைகள் பெரும்பாலும் தமிழ்நாடு ஜரி லிமிடெட்டில் வாங்கப்படுகின்றன. பற்றாக்குறைக்கு சூரத்தில் இருந்து தரமான ஜரிகைகள்
வாங்கப்படுகின்றன.வாங்கப்பட்ட ஜரிகைகள் நம் சென்னையில் தரமணியில் இருக்கும் நேஷனல் டெஸ்ட் ஹவுஸ் என்கிற இந்திய அரசின் டெஸ்ட்டிங் நிறுவனத்தில் கொடுக்கப்பட்டு தரச் சான்றிதழ் பெறுகின்றன (இது அரசாங்க பட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே டெஸ்ட் செய்து தர அனுமதிக்கப்படுவது).

இதில், தங்கம் 0.48ல் இருந்து 0.55 சதவிகிதம் வரையிலும், வெள்ளி 40 முதல் 42 சதவிகிதம் வரையிலும் இருக்க வேண்டும். முறையாக தறியில் சில்க் மார்க் இடப்பட்ட பட்டுடன் தரக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் பெற்ற ஜரிகையுடன் நெய்யப்பட்டு பாலீஷ் செய்யப்படுகின்றன. இவை அனைத்தையும் அரசாங்க கூட்டுறவு சொசைட்டிகளே கட்டாயமாகப் பின்பற்றி தரமான பட்டை நமக்கு அளிக்கின்றன.அரசாங்கம், பட்டுக் கூட்டுறவு சொசைட்டிகளுக்கு அரசின் தள்ளுபடியும் மெட்டீரியலுக்கான மானியமும் மற்றும் நெசவாளர்களுக்கு காப்பீட்டு உதவிகளையும் செய்கிறது.

விலை அட்டை, அத்துடன் சில்க் மார்க், என்டிஹெச் தரச்சான்றிதழ் (நேஷனல் டெஸ்ட் ஹவுசில் செய்யப்பட்ட தங்க வெள்ளி இருப்புக்கான தரச் சான்றிதழ்) என்பதையும் தர கூட்டுறவு சொசைட்டிகளால் மட்டுமே முடியும். இதைத் தவிர ஜனவரி முதல் மார்ச் வரையிலும் ஒரு வருடம் ஆன புடவைகளுக்கு 10+10+15 சதவிகிதம் அரசுத் தள்ளுபடி. ஒன்றரை வருடங்களான புடவைகளுக்கு 30 சதவிகிதம்+15 சதவிகிதம் அரசுத் தள்ளுபடி. 2 வருடங்களான புடவைகளுக்கு 45 சதவிகிதமும், இரண்டரை வருடங்களான புடவைகளுக்கு 55 சதவிகிதமும் 3 வருடங்களான புடவைகளுக்கு 65 வரையிலும் அசல் ஜரிகைப் புடவைகளுக்கும் தள்ளுபடி கிடைக்கிறது.

இந்தத் தள்ளுபடி என்கிற விஷயம் எத்தனை பேருக்குத் தெரியும்? நாம் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் நஷ்டம் நமக்குத்தான். அவர்களுக்கு அல்ல. ஏனென்றால், புதிய ஸ்டாக் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சில புடவைகளில் மட்டும் மடிப்பில் ஏதோ அழுக்கு இருந்தால், அதையும் சரி செய்தே இந்தத் தள்ளுபடி விற்பனைக்கு வைக்கிறார்கள். ஆனால், ஜரிகையில் எந்த மாற்றமும் இருக்காது. இப்படித் தரமான புடவைகள் அரசாங்கத்தின் நெசவாளர்களின் கூட்டுறவு சொசைட்டி மூலம் கிடைப்பதென்பது எத்தனை பெரிய அதிர்ஷ்டம் என யோசியுங்கள்!

நகைக் கடைகளில் ஒரு வருடமோ, 2, 3 வருடங்களோ ஆனாலும், அவற்றுக்கு ஒரு பைசா கூட தள்ளுபடி கிடையாது. அன்றைய விலையிலேயே வைத்து செய்யப்படும் தங்க, வெள்ளி ஜரிகை சேலைக்கு மட்டும் எப்படி விலையைக் குறைத்துக் கொடுக்கிறார்கள்? கூட்டுறவு நெசவாளர்கள் தங்கள் லாபத்தை முடிந்த வரை குறைத்துக் கொண்டே புடவைகளை விற்கிறார்கள். அவர்கள் எப்போதுமே பழைய ஸ்டாக்கை வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. தங்க நகைக் கடைக் காரர்கள் அப்படித் தருவதில்லை. அவர்கள் வருடக் கடைசியில் உள்ள விலைக்கு முழுவதுமான வரியைக் கட்டி விடுகிறார்கள்.

பேப்பர் பிராஃபிட் (Paper profit), புக் பிராஃபிட் (Book profit) என்று சொல்வார்கள். அதாவது, கணக்கில் எப்போதும் இருப்பை அதிகமாகக் காட்டும் போது, தங்க விலையும் அந்த மாதத்தில் கூடுதலாக இருக்கும் போது அதை வைத்தே கணக்கிடப்படுவதால், அந்த விலையை வைத்து முழுவதுமான வரியைக் கட்டி விடுவதால் அவர்களால் குறைக்க முடியவில்லையோ என்னவோ…ஆரணி, திருபுவனம், சேலம் ஆகிய இடங்களிலும் கூட்டுறவு சொசைட்டிகளில் தயாராகும் பட்டுப்புடவைகள் 100 சதவிகிதம் தரமானவை. தரக்கட்டுப்பாட்டுக்கு உள்ளானவை.

ஜரிகையின் தரத்தில் வித்தியாசம் இருக்காது. ஆனால், இவை ஈரிழை பட்டுகளே. அதிலும் ஆரணிப் பட்டு எடை குறைவானது. திருபுவனம் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப ஒரு பக்க பார்டர் ஜரிகை மட்டுமே நெய்கிறார்கள். சேலத்தில் மட்டுமே தரமான வெள்ளி, தங்க ஜரிகைகளைக் கொண்டு வெண்பட்டு வேட்டிகள் தயாராகின்றன. இதற்கென வெண்பட்டை ஆரம்பத்திலேயே ஸ்பெஷலாக (half white texture) ஒதுக்கிக் கொள்கிறார்கள். வேட்டியில் மட்டுமே வெள்ளை. மற்றபடி சொசைட்டி தறிகளில் சாதாரணமாக சுத்த வெள்ளை அல்லது கருப்பு நெய்வதே இல்லை. ஆர்டரின் பெயரில் மட்டுமே நெய்து கொடுப்பார்கள். சென்டிமென்ட்டலான விஷயங்களே காரணம்.

இப்போது பட்டு உலகில் சீனா ஜரிகையும் சீனா பட்டும் கலப்படமாக அதிகளவில் நுழைந்து விட்டன. நுகர்வோரின் அறியாமையும் விழிப்புணர்வின்மையுமே இந்தத் துறையிலும் நாம் ஏமாற்றங்களை சந்திக்கக் காரணங்கள். காஞ்சிபுரத்தில் தரகர்களின் ஆதிக்கம் அதிகம். அதனால் நுகர்வோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

வட இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டு, பருத்திச் சேலைகளில் பெரும்பாலும் தங்க, வெள்ளி, செம்பினால் ஆன ஜரிகைகளைக் கொண்டு விதம் விதமாக எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்படுவது அதிகம். அவற்றில் ஒன்றுதான் ஸர்தோசி. ஸர் என்றால் தங்கம் என்று அர்த்தம். தோசி என்றால் எம்பிராய்டரி என்று அர்த்தம். இது ஒரு பாரசீக வார்த்தை. பாரசீகத்தில் இருந்து மன்னர் அக்பரால் கொண்டுவரப்பட்ட வேலைப்பாடு.

காம்தானி என்பது ஸ்கார்ஃபிலும் தொப்பியிலும் செய்யப்படுகிற வேலைப்பாடு. மீனா என்பது தங்கத்தினால் தங்க ஜரிகையைக் கொண்டு எனாமல் வேலைகளை கலந்து செய்கிற ஒருவித வேலைப்பாடு. குட்டோகிபெல் என்பது பார்டர்களில் செய்யப்படுகிற வேலைப்பாடு. மக்கைஷ் என்பது வெள்ளி நூல் வைத்துச் செய்யப்படுவது. மரோரி என்பது நேரடியாக துணியின் மேல் தங்க ஜரிகையைக் கொண்டு தைக்கிற வேலைப்பாடு. கோட்டா என்பது ஏற்கனவே பின்னப்பட்டிருக்கும் தங்க இழைகளை மேலும் டிசைன் செய்து வித்தியாசமான தோற்றத்தைக் கொடுப்பதற்கான பார்டர் ஓரங்களை வெட்டி பறவை, மிருகம், மனித உருவங்களைக் கொண்டு வருகிற வேலைப்பாடு.

கினோரி என்பது முந்தானை முடிச்சில் செய்யப்படுகிற ஒரு வேலைப்பாடு.இத்தனை வேலைப்பாடுகளும் வட இந்தியாவில் மட்டுமே உருவானவை. இப்போது ஆந்திராவிலும் ஸர்தோசி வேலைப்பாடுகள் பிரபலமாக ஆரம்பித்திருக்கிறது. இதில் 10 முதல் 15 சதவிகிதம் வேலை செய்பவர்கள் பெண்களே.

கி.பி.1603ல் குஜராத்தில் கடும் உணவுப்பஞ்சம் ஏற்பட்டு அங்கே உள்ள பட்டு நெசவாளர்கள் காசிக்கு புலம் பெயர்ந்தார்கள். அது அக்பரின் ஆட்சிக் காலம். அவர் பாரசீகத்தில் இருந்து கொண்டு வந்த கலைகளில் ஒன்று பாரசீகம், இஸ்லாம், இந்து மதங்கள் இணைந்த ஒரு எம்பிராய்டரி. இதில் கற்றுத் தேர்ந்த கலைஞர்கள் புலம் பெயர்ந்த நெசவாளர்களின் உருவாக்கத்தில் விளைந்த பட்டில் தங்கள் புரோக்கேட் எனப்படுகிற ஜரிகை வேலைப்பாடுகளைச் செய்தார்கள்.

அதிக தங்க வேலைப்பாடுள்ள, அனைவராலும் விரும்பப்படும் காசிப்பட்டு என்கிற பனாரசி சில்க் புடவைகள்தான் அவை. சுத்தமான தங்க, வெள்ளி இழைகளைக் கொண்டு புரோக்கேட் வேலைப்பாட்டினை, சில நேரங்களில் புடவையின் வண்ணமே தெரியாத அளவுக்கு அடர்த்தியான வேலைப்பாடும், உலோகங்களின் அதிக பட்ச பளபளப்பும், கவர்ச்சியான முந்தியும், வலைப்பின்னல் போன்ற எம்பிராய்டரியும் சேர்ந்து காசிப்பட்டின் அழகை அதிகமாக்குவதுண்டு.

பராமரிப்பது எப்படி?

தங்க நகைகளைப் போலவே பட்டுப் புடவைகளுக்கும் பராமரிப்பு உண்டு. காகித கவர், பிளாஸ்டிக் கவர், பிரின்டட் துணிப்பை, அட்டைப் பெட்டி போன்றவற்றில் நீண்ட நாட்கள் வைக்கக்கூடாது. வெள்ளை காட்டன் துணி அல்லது சுத்தமான காட்டன் வேட்டியில் மட்டுமே சுற்றி வைக்க வேண்டும். ஹேங்கரில் மாட்டி வைக்கலாம். அந்தக் காலங்களில் பூந்திக் கொட்டை ஊற வைத்த நுரைத்த தண்ணீரிலேயே பட்டை துவைப்பார்கள். இப்போது தரமான சோப்பு தூளில் அலசி எடுக்கலாம். தரமான பட்டு என்றால் ஒன்றும் ஆகாது. பளபளப்பும் மங்காது. கசக்கி, அடித்துத் துவைக்கக் கூடாது. நிழலில் உலர வைத்து பேப்பர் அல்லது காட்டன் துணியை மேலே போட்டே இஸ்திரி செய்ய வேண்டும்.எப்படி மெட்டல் நகைகள் அலர்ஜியை ஏற்படுத்துமோ அது போல டெஸ்ட்டட் ஜரிகை பல பேருக்கு அரிப்பையும் அலர்ஜியையும் ஏற்படுத்தும்.15

Related posts

henna pregnancy belly

nathan

கியூபன் ட்விஸ்ட் ஹேர்: Cuban Twist Hair

nathan

நவீனத்திற்கு ஏற்ப மாறிவிடும் புத்தம் புதிய சேலைகள்

nathan

raw mango saree

nathan

இன்றைய இளம் பெண்கள் உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை அணிவது உடலுக்கு நல்லதா ?

nathan

பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்ட கைப்பையும் பெண்களின் ஆரோக்கியமும்….

sangika

கலைநயம் பொருந்திய நவீன நெக்லஸ் வகைகள்

nathan

இந்த தீபாவளிக்கு இந்த டிரஸ் தான் பெஷன்…..

sangika

சிறுவர்களுக்கான கிறிஸ்மஸ் ஆடைகள்: baby boy christmas outfit

nathan