என்னுடைய நகங்கள் எப்போதும் மஞ்சள் நிறத்திலேயே காணப்படுகின்றன. அதை மறைக்க நெயில்பாலிஷ் போட வேண்டியிருக்கிறது. நெயில் பாலிஷ் இல்லாதபோது மஞ்சள் தடவினது போலக் காட்சியளிக்கின்றன. சரி செய்ய முடியுமா?
அழகுக்கலை நிபுணர் லட்சுமி
பெரும்பாலும் நகங்களில் ஏற்படுகிற இன்ஃபெக்ஷனே மஞ்சள் நிறத்துக்குக் காரணம். ரொம்பவும் அதிகமான அடர் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் அது தைராய்டு, சோரியாசிஸ், நீரிழிவு, கல்லீரல் கோளாறு போன்றவற்றின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். டெஸ்ட் செய்து பாருங்கள். எப்போதும் பளீர் நிறங்களில் நெயில் பாலிஷ் போடும் பழக்கம் உள்ளவர்களுக்கு அந்த நெயில் பாலிஷ் சாயத்தின் விளைவாகவும் இப்படி நகங்கள் மஞ்சளாகலாம்.
நெயில் பாலிஷ் போடுவதற்கு முன் பேஸ் கோட் போட்டுவிட்டு பிறகு கலர் பாலிஷ் போடலாம். நெயில் பாலிஷை அகற்ற அசிட்டோன் கலந்த ரிமூவர்களை உபயோகிப்பதாலும் நகங்கள் மஞ்சளாகலாம். அசிட்டோன் இல்லாத ரிமூவரை உபயோகியுங்கள். வைட்டமின் ஈ ஆயிலில் டீ ட்ரீ ஆயில் கலந்து நகங்களுக்கு மென்மையாக மசாஜ் செய்தால் இன்ஃபெக்ஷனும் குறையும். நிறமும் மாறும். எலுமிச்சைச் சாற்றில் நகங்களை சிறிது நேரம் ஊறவைத்துக் கழுவினாலும் மஞ்சள் நிறம் மாறும்.