அடுக்களையிலேயே அழகாகலாம்! – 2
‘கையிலேயே வெண் ணெயை வெச்சுக்கிட்டு நெய்க்கு அலைந்தமாதிரி’ என்பார்கள். அப்படி நம் அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்கள், அழகு சாதனப் பொருட்களும்கூட என்பதை அறியவைக்கும் நோக்கத்துடன் ராஜம் முரளி வழங்கும் ‘அடுக்களையிலேயே அழகாகலாம்’ தொடரின் இந்த அத்தியாயத்தில் நாம் பார்க்கப்போவது… அரிசி செய்யவல்ல அழகு வைத்தியங்களை!
இயற்கை பிளீச்!
ஒரு டீஸ்பூன் பச்சரிசி மற்றும் ஒரு டீஸ்பூன் கசகசாவை, கால் கப் பாலில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அதனை நன்கு அரைத்து, வெயிலினால் கறுத்துள்ள முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி, 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். `பிளீச்’ செய்ததுபோல் சருமம் பளீரிடும் பாருங்கள்!
எண்ணெய் வழியும் முகத்துக்கு!
அரை டீஸ்பூன் பச்சரிசி, ஒரு டீஸ்பூன் பயத்தம்பருப்பு, தோல் நீக்கிய 3 பாதாம்பருப்பு, ஒரு கஸ்தூரி மஞ்சள் கிழங்கு (உடைத்தது)… இவை அனைத்தையும் பொடி செய்துகொள்ளவும். தேவையான அளவு பொடியுடன் சிறிது பன்னீர் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். முகத்தில் எண்ணெய் வழிவது குறைவதுடன், முகப்பரு வராமலும் பாதுகாக்கும்; க்ளியர் சருமம் தரும்!
பூனைமுடி அகற்ற…
பெண் குழந்தைகளுக்கு கை, கால், முதுகில் காணப்படும் பூனைமுடிகளை அகற்ற, ஓர் இயற்கை பீல்ஆஃப் பேக் பார்ப்போமா..?
பச்சரிசி ஒரு பங்கு, கோதுமை இரண்டு பங்கு எடுத்து இரண்டையும் சன்னமாக அரைக்கவும். தேவையான அளவு பொடியை எடுத்து, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் குழைக்கவும். பூனைமுடி இருக்கும் இடங்களில் இதை நன்கு அடர்த்தியாகத் தடவி, அரை மணி நேரம் உலரவிட்டு, பிறகு கீழிருந்து மேல் நோக்கி உரித்தெடுக்கவும்.
இதே பொடியை, பருவ வயதுப் பெண்கள் முகத்துக்கான `பீல் ஆஃப் மாஸ்க்’ ஆகவும் பயன்படுத்தலாம். இது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகத்தைப் பொலிவாக்கும். முகத்தில் இக்கலவையை தடவும் முன், தேங்காய் எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவி, அப்ளை செய்து, 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும்.
பளபள கூந்தல்!
வாரம் இருமுறை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து நன்கு ஊறவிட்டு, 3 டீஸ்பூன் பயத்தம் மாவு, ஒரு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் சிகைக்காய்த்தூள் இவை அனைத்தையும் ஒரு கப் அரிசி வடித்தகஞ்சி தண்ணீரில் கலந்து, ஷாம்புக்குப் பதிலாக தலைக்கு தேய்த்துக் குளிக்கவும்.தலையில் உள்ள அழுக்கு நீங்குவ துடன், கேசம் பளபளக்கும்.
இனி இல்லை… பொடுகுத் தொல்லை!
பச்சரிசி – அரை டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், கொட்டை நீக்கிய பூந்திக்காய் – 3… இவை அனைத்தையும் நீர்சேர்த்து அரைத்து, ஷாம்புவுக்குப் பதில் தலையில் தேய்த்துக்குளித்து வர, பொடுகுத் தொல்லை நீங்கும். அரிசி, இனி அழகுக்கும் தானே?!