23.7 C
Chennai
Monday, Dec 23, 2024
ld3901
ஃபேஷன்

தக தக தங்கம்!

தங்கம் அவசியமானது. ஆடம்பரமானது. அது மிகச்சிறந்த சேமிப்பு. அதே நேரம் செலவும் கூட. அவசியத்துக்கு வாங்கியே தீர வேண்டும். அவசரத்துக்கும் கை கொடுக்கும் என்ற பல்வேறு கருத்து மாற்றங்களுடன், நம் வாழ்க்கையில் ஒன்றிப் போய்விட்ட தங்கத்தின் பின்னணியில்தான் எத்தனை எத்தனை பழக்க வழக்கங்கள்… நம்பிக்கைகள்… நிஜங்கள்… அப்படி சில வினோதங்களைப் பற்றிப் பார்ப்போம்!

உலகம் முழுக்க தங்கத்தின் பயன்பாடு விதம் விதமாக இருக்கிறது. 1541ல் பெரும்பாலான ஐரோப்பியர் பல்குத்தும் குச்சிகளை தங்கத்தில் மட்டுமே செய்து கொள்வார்கள். புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் எப்போதும் தங்கத்திலான பல்குச்சியை கழுத்தில் அணிந்திருப்பாராம். 4வது மற்றும் 5வது ஜேம்ஸ் மன்னர்களும் தங்கத்தில் பல்குச்சிகள் செய்து வெள்ளிப் பெட்டிகளில் வைத்து கழுத்தில் தங்கச் சங்கிலியில் கோர்த்து அணிந்து கொள்வார்களாம். தங்க பல்குச்சிகளை கழுத்தில் மாட்டிக் கொள்கிற பழக்கம் ஐரோப்பியரிடம் பரவலாக இருந்திருக்கிறது. அவரவர் வசதிக்கேற்ப, அந்த பல்குச்சிகளின் எண்ணிக்கையும், அவற்றின் கைப்பிடி டிசைன்களும் மாறுமாம்.

1570ல் பிரபல ராணி எலிசபெத் பல்குச்சியை தங்கத்தில் செய்து தன் சங்கிலியில் எப்போதும் அணிந்திருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. பழங்காலத்தில் வசதி படைத்த கிறிஸ்தவர்கள், பைபிளை முழுவதும் தங்கத்திலேயே கவர் செய்து வைத்திருந்தார்களாம். தங்கத்தால் ஆன அட்டைகளுக்கு இடையில் வெள்ளிக் காகிதத்தில் பொறிக்கப்பட்ட எழுத்துகளுடனும் செய்து வைத்திருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

பொதுவாக தென்னிந்தியாவில் பிறந்த குழந்தைகளின் தொப்புள்கொடியை சிறிது வைத்து தங்கத் தாயத்தும், கருகமணியை தங்கத்தில் கோர்த்து திருஷ்டிக்கு கைகளுக்கு செயின், இடுப்புக்கு அரைஞாண் கயிறாகக் கட்ட மந்திரித்த தாயத்து போன்றவற்றை எல்லாம் செய்வது வழக்கம். கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பின் போது தங்கக் காப்பு, வெள்ளிக் காப்பு அணிவிப்பதும் வழக்கம். இவை சாதாரண ஆபரணங்கள் அல்ல… கொக்கி போட்டு மாட்டும் மெல்லிய கம்பி. பிரசவத்தின் போது கழற்ற எளிதாக இருக்கவே இப்படி செய்யப்பட்டிருக்கும். குழந்தை பிறந்த பின் வேறு தங்க நகைகள் செய்யும் போது இதையும் சேர்த்துக் கொள்வார்கள். இவை எல்லாமே சென்டிமென்ட்ஸ் நிறைந்தவை.

குழந்தைக்கு தங்கத்தில் பாலாடை, கோப்பை, ஸ்பூன் செய்வது சாதாரணம். ஆனால், மை இடவும், பொட்டு இடவும் தங்கத்தில் விதமான பொட்டு உருவில் கோர்த்த குச்சிகள் செய்வதும் மிகச் சிலருக்கு மட்டுமே வழக்கம். இவை சாதாரண உலோகங்களிலேயே கிடைக்கும். ஆனால், வசதி படைத்தவர்கள் தங்கத்தில் செய்து, காலங்காலமாக அடுத்தடுத்த சந்ததியினருக்குக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவற்றை கடைகளில் போட மாட்டார்கள். அழித்து வேறு நகைகளும் செய்ய மாட்டார்கள்.

கார்காத்தார் பிள்ளைமார் சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயது வந்ததும், அதாவது, 7, 9 அல்லது 11 வயதாகும் போது `விளக்கேற்றி கல்யாணம்’ என்றொரு விசேஷம் செய்வார்கள். அதில் பெண் குழந்தையை உட்கார வைத்து, நலங்கு வைத்து, குழைச்சி மணி என்றொரு மணி, அதாவது தங்கக் கம்பியில் கோர்த்த கருகமணியை அணிவிப்பார்கள். அது அவர்களது சமூகத்தில் மட்டுமே செய்யப்படுகிற சடங்கு. அந்த மணியை எப்போதும் வாங்கும் ராசியான கடைகளில் 2 நாட்களுக்கு மட்டும் அணியக் கொடுப்பார்கள். உபயோகித்துவிட்டுத் திரும்பக் கொடுத்து விட வேண்டும். வசதி படைத்தவர்கள் சொந்தமாகவே அரை அல்லது ஒரு பவுன் தங்கத்தில் செய்து கொள்வார்கள். அதை காலம் காலமாக பெண் பிள்ளைகளுக்கு விளக்கேற்றி கல்யாணத்தின் போது அணிவித்து, பத்திரப்படுத்தி வைப்பார்கள்.

இது போலவே நகரத்தார் சமூகத்தின் தாலியான கழுத்துறு, இஸ்லாமிய மணமகளுக்குச் செய்யப்படும் கல்ஸர் போன்றவற்றை பாரம்பரியமாகச் செய்கிறவர்களால் மட்டுமே வடிவமைக்க முடியும்.வழக்கங்கள் என்று சொல்லும்போது உலகிலேயே மிகவும் செல்வந்தக் கடவுளாகக் கருதப்படும் திருப்பதி வெங்கடேசப் பெருமாளே தாம் பத்மாவதி தாயாரை திருமணம் செய்த போது அந்தத் திருமணத்துக்காக குபேரனிடம் இருந்து ஒரு கோடியே 14 லட்சம் தங்கக் காசுகளைக் கடனாகப் பெற்றதாக புராணத் தகவல் உண்டு.

ஒரு காலத்தில் உலகத்தின் செழிப்பான நாடாக இருந்து பிரிட்டிஷ் நம் நாட்டிலிருந்து செல்வங்களைச் சூறையாடிய பிறகு ஏழை நாடாகி, பிறகு இப்போது வளரும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது இந்தியா. வளர்ச்சி நாடுகளின் பட்டியலில் இருந்தாலும்
இந்தியாவில் தங்கம் அவசியப்பொருளாகக் கருதப்படாமல், ஆடம்பர உபயோகத்துக்கும் அதிகம் பயன்படுத்தப்படுவதை அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

தமது செல்வ வளத்தைப் பறைசாற்றும் வகையில், திருமணங்களில் மணமக்களுக்கு தங்கத்தால் ஆன உடைகளை கோடிக்கணக்கான ரூபாய் செலவில் வடிவமைக்கிறார்கள் பலரும். தங்கத்தால் ஆன திருமண அழைப்பிதழ், திருமணத்துக்கு வருகை தரும் முக்கியஸ்தர்களுக்கு தரப்படுகிற தங்கத்தால் ஆன அன்பளிப்புகள், திருமண விருந்துகளில் பரிமாறப்படுகிற இனிப்புகளின் மேல் மெல்லிய சுத்த தங்கத் தகடுகள், மணமக்களுக்குப் போடப்படும் தங்க அட்சதைகள், ஆசீர்வதிக்க பயன்படுத்தும் தங்கப் பூக்கள் என ஆடம்பரத்தின் வெளிப்பாடுகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். உலகின் ஆடம்பரத் திருமணங்களுக்கு நிகராக நம் இந்திய வம்சாவளியினரின் வெளிநாட்டுத் திருமணங்களும் நடக்கின்றன.

தங்க சுவாரஸ்யங்கள்

எகிப்தை ஆட்சி செய்த டுடென்க்ஆமன் என்கிற மன்னரின் உடல், 110 கிலோ எடையுள்ள தங்க சவப் பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்டதாம்.

கி.மு.1560ல்தான் பொற்கொல்லர்களின் தங்க வேலைப்பாடுகள் பிரபலமாகத் தொடங்கின. அரசர்களும் அரசிகளும் பொற்கொல்லர்களை வேலைக்கு அமர்த்தி, தங்களின் ஆட்சியின் பெருமை பேசக்கூடிய தங்க நகைகளையும், இறப்பின் போது அணியக்கூடிய பிரத்யேக நகைகளையும் வடிவமைத்துக் கொண்டனர்.

ரோமானியர் ராஜ்ஜியத்தில்தான் தங்க நகைகள் ஆடம்பரத்தின் அடையாளங்களாக அணியப்படும் பழக்கம் ஆரம்பித்தது. திருமண நிச்சயதார்த்தத்தின் போது தங்க மோதிரங்களைப் பரிமாறிக் கொள்வதும் அப்போது தொடங்கியதுதான்.

12ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ தேவாலயங்களை தங்க வேலைப்பாடுகளால் அழகுப்படுத்துகிற வேலையில் பிரதானமாக ஈடுபட்டிருந்தனர் பொற்கொல்லர்கள்.

1850ல் பர்மிங்காமில் மெஷின் மூலம் தங்கச் சங்கிலிகள் தயாரிக்கிற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கைகளால் தயாரிக்கப்பட்டதை விட, மெஷின் சங்கிலிகள் விலை குறைவாகவும் விற்பனைக்கு வந்தன.

1885ல் மூன்றாம் அலெக்சாண்டர் தன் மனைவி மரியா ஃபெடோரோவ்னாவுக்கு தி ஹென் எக்’ என்கிற பெயரில் தங்கத்தினால் ஆன ஈஸ்டர் முட்டையை பரிசளித்துப் புதுமை படைத்தார்.

தங்கமான டேட்டா

வருடாந்திர தங்க நகைகளுக்கான தேவையில் 64 சதவிகிதம் இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வருபவையே… 75 சதவிகித இந்தியப் பெண்கள், தங்க நகைகளில் புதிய டிசைன்களை தேடிக் கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள்.ld3901

Related posts

சிறுவர்களின் ஆடையில் புதிய வரவுகள்

nathan

சேலையை விரும்புது இளைய தலைமுறை!

nathan

பெண்களே உங்கள் உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு..?

nathan

பெண்களுக்கு கைகொடுக்கிறது நவீன பேஷன் உலகம். ….

sangika

பெண்கள் எந்த மாதிரியான கொலுசு அணியலாம்?

nathan

நீங்கள் அணியும் மெட்டியில் இத்தனைப் பயன்களா….?

nathan

மனதை மயக்கும் மாணிக்க ரூபி கல்பதித்த நகைகள்

nathan

பிராவின் அளவு ஒவ்வொரு பிராண்டுக்கும் மாறுமா?

nathan

புடவைக்கான சிறந்த ஹேர் ஸ்டைல் எது?

nathan