24.6 C
Chennai
Tuesday, Dec 24, 2024
ld3962
ஃபேஷன்

கருப்பு அங்கிக்குள் கரையும் கனவுகள்

‘ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா!’

இந்தப் பாடலை தவறியும் கூட இந்த நாட்டில் யாரும் பாடி விட மாட்டார்கள். ஏனென்றால், இங்கு பெண் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதியில்லை. மாடியிலிருந்து மகன் தவறி விழுந்து ரத்த வெள்ளத்தில் மிதக்கிறான் என்ற போதும், அவசரப் பிரிவில் சேர்க்க பெற்ற தாய் அவசரமாக காரை கிளப்பி ஓட முடியாது. ஏனென்றால், இங்கு பெண்களுக்கு வாகனம் ஓட்டவும் அனுமதி மறுப்பு. நாட்டின் முக்கியமான இரு நகரங்களில் பொதுப்பேருந்தில் கூட பெண்கள் பயணிக்க முடியாது (ஆண்களை சந்திக்க வாய்ப்பு கிடைச்சிடுமாம்!). துணிக்கடைகளில் சேல்ஸ் கேர்ள் ஆக வேலைக்கு போகலாம்… ஆனால், பெண்கள் அணியும் உடைகளை விற்கும் ஆடையகமாக இருக்க வேண்டும். அது சரி… போனால் போகட்டுமென்று பரிதாபப்பட்டு ஓட்டுரிமையை ஆகஸ்ட் 2015ல் கொடுத்திருக்கிறார்கள்!

ஆண்டவன் அழகாக படைத்துவிட்டான் என்பதற்காக கண்ணைத்தவிர முழுவதுமாக முக்காடிட்டு தான் வெளி உலகுக்கு வர வேண்டும். குழந்தைக்கு கார்டியன்? இதிலென்ன சந்தேகம்… கண்டிப்பாக ஆண்தான் (அப்பாவோ கணவனோ அண்ணனோ தம்பியோ). வெளிநாடு செல்ல ஆசைப்படும் பெண்களை கார்டியனான ஆணின் ஒப்புதல் இருந்தால்தான் விமானத்தில் ஏறவே விடுவார்கள். சத்தமே இல்லாமல் நான்கு சுவர்களுக்குள் அறிவுப் பதுமைகளை அடக்கி வைத்திருக்கும் இந்த நாடு சாட்சாத் பூலோகத்தில்தான் உள்ளது.

விண்வெளியில் நீர் இருக்கிறது என்று இஸ்ரேல் அறிவித்தவுடன் நம் ஊர் பாட்டிகளெல்லாம் காலி குடத்தை கையில் வைத்துக்கொண்டு வானத்துக்கு பறக்க காத்திருக்கிறார்கள். அதே வேளையில்… பெண்மையை ஒடுக்கி கைக்குள்ளே அடக்கி பம்பரமாக சுழற்றி விளையாடும் நாட்டைப் பற்றியும் அந்த நாட்டில் வசிக்கும் பெண்களைப் பற்றியும் ஆதங்கப்பட வேண்டியது சக மனுஷியாக அவசியமாகிறது.

சவூதி நீதிமன்ற நீதி தேவதைகள்

சட்டக் கட்டுப்பாடு கால்பங்கும், முக்கால் பங்கு மதக்கட்டுப்பாடும் சேர்ந்து பெண்ணின் திறமை வெளி உலகுக்கு தெரிந்துவிடக்கூடாதென கண் விழியை மட்டும் உலகைக் காண அனுமதித்து உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை கருப்பு அங்கியால் அடிப்படை உரிமையை கட்டிப் போட்டிருக்கும் அந்த நாடு சவூதிஅரேபியா. 10 ஆண்டுகளுக்கு முன்புதான் மன்னர் அப்துல் அஜிஸ் ‘பெண்களும் சட்டம் படிக்கலாம்’ என்று கருணை காட்டினார். அதன் பின்பும் சட்டப் பட்டயத்தை கையில்
வைத்துள்ள பெண்கள் வீட்டுக்கே திரும்ப அனுப்பப்பட்டனர். அவர்களின் படிப்பை பதிவு செய்யவில்லை.

ஜூனியராக மூன்றாண்டு கட்டாயப் பயிற்சிக்கு பிறகே முழு வழக்கறிஞராக அனுமதிக்கும் லைசென்ஸ் வழங்கப்படும். முதலாம் வகுப்பிலேயே இடமில்லை என்னும்போது மூன்றாம் நிலையான கோர்ட்டுக்கு வாதிடச் செல்லும் கனவு காற்றிலே கரைந்து போனது. வாய்ப்பு கொடுக்கும் வெளிநாடுகளுக்கு பலரும், உள்ளூரிலே சட்ட ஆலோசகராக சிலரும் என சவூதி நீதிமன்றத்தில் வாதிடும் கனவை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு ஊமையாகிப் போனார்கள்.

சட்டத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருந்தாலும் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அங்கியை அணிந்து கொண்டு வாதிட அனுமதியில்லை. சொந்த மண்ணில் தங்களுக்கு இழைக்கப்படும் துரோகத்தை தட்டிக் கேட்க குரல் இல்லாமல், தாங்கள் படித்த படிப்பை பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும் என்று சில சட்ட மாணவிகள் நாட்டை விட்டு வெளியேறி அந்நிய நாடுகளின் நீதிமன்றத்தில் பதிவுசெய்து வாதிடுகின்றனர்.

வரலாற்றின் முதல் எழுத்து யாரோ ஒருவரின் முயற்சிதானே? அந்த யாரோ ஒருவராக ஏன் நாமாக இருக்கக் கூடாது? இப்படி யாரெல்லாம் நினைத்து தீவிர முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்களோ, அவர்கள் நிச்சயம் வெற்றிக்கொடியை ஏந்தி பிரகாசிப்பார்கள். உடன் படித்த கல்லூரி தோழிகள் நாடு கடந்து சென்றுவிட்டனர்… தானும் அவ்வாறே செய்யலாம் என்ற சுலபப் பாதை இருந்தும் அதைக் கண்டுகொள்ளாமல், முட்கள் நிரவிக்கிடக்கும் பாதையின் மேல் ஏறி நின்றுகொண்டார் அர்வா. 3 ஆண்டுகளுக்கு அவரது போராட்டம் தொடர்ந்தது. ‘ஐயம் எ ஃபிமேல் லாயர்’ என்ற முகநூல் பக்கம் உருவானது.

அதில் சட்டம் படித்துவிட்டு நீதிமன்றத்தில் வாதிட மறுக்கப்பட்டு கொந்தளிப்பில் இருந்த பெண் சிங்கங்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து பொருமல்களை கொட்டி தீர்த்தனர். நீதிமன்றம் ஏற வாய்ப்பை நோக்கும் பெண்களின் அனல் பறக்கும் முகநூல் விவாதத்தை உலக நாடுகள் வேடிக்கையே பார்த்தன. மனித உரிமை அமைப்பு, ட்விட்டர் என தூரலில் துளிர்விடும் காளான்களாக ஆங்காங்கே விவாதங்கள் முளைக்க, இதற்கு தீர்வு காணாமல் விட்டோம் என்றால், போகிற போக்கில் காலில் நசுக்கிவிட்டுப் போகவேண்டிய காளான்கள் ஆலமரமாக மாறி அறுத்தெடுக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்ததால் சவூதி அரச சபை ஒரு முடிவுக்கு வந்தது.

‘பெண்கள் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக செல்ல எங்களுக்குச் சம்மதம்’ என்று மூவாயிரம் நபர்கள் கையெழுத்திட்ட கடிதம் மன்னர் அப்துல்லாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. சட்டம் படித்து முடித்த பெண்கள் பதிவு செய்யலாம். அதிகபட்சமாக 5 ஆண்டுகள் அல்லது கட்டாயம் 3 ஆண்டுகள் ஜூனியராக தொழில் நுணுக்கங்களை கற்றுக்கொண்ட பிறகு, அவர்கள் நீதிமன்றத்துக்கு சென்று வாதிடும் முழு வழக்கறிஞர் ஆவார்கள் என்ற ஆணையை மன்னர் அப்துல்லா பிறப்பித்தார். அரசன் ஆணையிட்டாலும் ஆணை அமலுக்கு வருவது அதிகாரிகளின் கையில்தானே இருக்கிறது?

சட்ட அமைச்சகம் மற்றும் நாட்டின் மந்திரிகள், தந்திரிகள், மதக்கட்டுப்பாட்டை காப்பாற்ற விரும்புபவர்கள் உள்பட யாருமே இதற்கு ஒத்துவராததால் ஆணை அப்படியே கிடப்பில் போடப்பட்டது. மன்னன் உத்தரவே செவி சாய்க்காதபோது அடுத்தகட்ட முன்னேற்றம் என்பது இழுவையாக நீண்டு கொண்டிருந்தது. ‘மன்னர் அப்துல்லா இந்த விவகாரத்தில் தலையிடவேண்டும். சட்ட அமைச்சகத்துக்கு அவரின் ஆணையை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்’ என்ற கருத்து அடங்கிய கட்டுரை சவூதி பத்திரிகையில் வெளியானது.

சவூதி அரேபியாவில் சட்டம் படித்து தேர்ச்சிப்பெற்ற முதல் பத்து பேரில் ஒருவராக தேர்வான ஹனௌப் அல் என்பவரே அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். நியாயமான சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமையை சட்டமே மறுக்கிறது என்கிற கசப்பான உண்மையை விழுங்க முடியாமல் வக்கீல் ஆசையையும் கைவிடாமல் அமெரிக்காவுக்கு குடியேறி, புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சட்ட அறிவை மேலும் மெருகேற்றிக் கொண்டு, அங்கே ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாதிடுகிறார் அவர். பிறந்த மண்ணில் வாய்ப்பு கிடைக்காததால் வருத்தமுடன் அந்நிய நாட்டுக்கு வெளியேறிவிட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஹனௌப் கட்டுரை வெளியான 2 நாட்களுக்கு பிறகு ‘லா ஆப் ஜஸ்டிஸ்’ அர்வாவின் அப்ளிகேஷனை ஏற்றுக்கொண்டது .

அர்வா அல் ஹுஜைலிக்கு சவூதி

அரேபிய நாட்டில் முதன்முதலாக சட்டத்தை பதிவு செய்யும் பெண் பட்டதாரி என்ற பெருமை வந்து சேர்ந்தது. ஜூனியராக சேர்ந்து 3 ஆண்டு பயிற்சி முடித்து வழக்கறிஞராக நீதிமன்றத்துக்கு அர்வா வாதிட சென்றாரா என்பது மர்மமாக இருக்கிறது. ஆனாலும், படித்த படிப்பை பதிவு செய்ய அவர் மேற்கொண்ட முயற்சி வெளி உலகத்தின் வெளிச்சப் பக்கத்தில் பதிந்துள்ளது.

சவூதி நீதிமன்ற வரலாற்றில் நீதிமன்றத்தில் கட்சிக்காரருக்காக வாதிட்ட முதல் பெண் வழக்கறிஞர் மன்னர் அப்துல்லா கல்லூரியில் 2008ல் சட்டம் படித்தவர் பேயன் அல் ஸ்ஷரான். இன்று உலக அரங்கில் கொண்டாடப்படும் பெண்ணாக மாறியிருக்கிறார். கருப்பு அங்கி அணிந்து நீதிமன்றத்தில் நுழைய ஆசையோடு சென்றவரை திருப்பியனுப்பியதைப் பற்றி வருத்தம் கொள்ளாமல், அடுத்தகட்ட முயற்சியில் இறங்கினார். சட்ட ஆலோசகராக சிவில், கிரிமினல், குடும்ப நலம் என எல்லா பக்கங்களிலும் பங்களிப்பை அளித்தார். நீதிமன்றங்களின் நடப்பை கவனித்து வர நீதிமன்றத்துக்கும் செல்வார்…

கட்சிக்காரரின் கேள்விக்கான பதிலை பேயன் தயாரித்து எடுத்து வந்து நீதிமன்றத்தில் உட்கார்ந்திருப்பார்… சபையேறி அதை வாசித்து வாதிடுவது ஆணாக இருக்கும். தான் செய்த வேலைக்கு இன்னொருவர் பெயரும் ஊதியமும் வாங்கிச் செல்வதை வேதனையாக கவனிக்க வேண்டிய சூழலில்தான் பேயன் இருந்திருக்கிறார். குடும்ப நல நீதிமன்றங்களில் வாதிடுபவர்களும் வாதியும் தீர்ப்பிடுபவரும் என முத்தரப்பும் ஆண்களாக இருக்கும்போது படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்கள் ஆண்களிடம் பேசக் கூச்சப்படுவார்கள்.

அதனால் அந்தப் பெண்களுக்கு வழக்கறிஞராக வாதாட சட்டம் படித்த பெண்ணை அனுப்பலாம் என சட்ட அமைச்சகம் ஆலோசனை கூறியது. துணிக்கடையில் வேலை… ஆனால், ஒன்லி லேடீஸ் செக்ஷன்! பெண்கள் சட்டப் பட்டத்தை பதிவு செய்யலாம் என்று மன்னர் ஆணையிட்ட சில மாதங்களுக்கு பிறகு பெண்கள் முழு வழக்கறிஞராக வாதிடவும் அனுமதி என்ற ஆணையும் வந்தது. அக்டோபர் 2013ல் சவூதி பொது நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்ட முதல் பெண் பேயன். இவரோடு சேர்த்து இன்னும் 3 பெண்களுக்கும் வழக்கறிஞராக பதிவு செய்ய அனுமதி கிடைத்தது. சவூதியில் சட்டம் படித்த பெண்களும் படிக்க ஆசைப்படுபவர்களும் தங்களுக்கு விடுதலை கிடைத்ததைப் போன்று ஏக குஷியில் மிதந்தார்கள்.

வழக்கென்று நீதிமன்றத்துக்கு நியாயம் கேட்டு பாதிக்கப்பட்டவளாக, வாதியாக, எதிர் தரப்பாக – எப்படிப் பார்த்தாலும் சிங்க குகைக்குள் சென்று வரும் சில்வண்டு போன்ற நிலையை யூகிக்க முடிகிறது. ஏனென்றால் நீதிமன்றம் என்ற போர்வையில் நடைபெறும் மன்றங்களில் வாதிடுபவர், வாதி, தீர்ப்பிடுபவர் என முத்தரப்பும் அவர்களாக இருக்கும்போது இயந்திரத்தில் அகப்பட்டு வெளியேறும் கரும்பின் கதிதான் கன்னிகளுக்கும். பேயன் தனியாக சட்ட அலுவலகத்தை ஆரம்பித்திருக்கிறார். அவரோடு துணை நிற்க 3 பதிவு செய்த பெண் வழக்கறிஞர்களும் இருப்பர். ‘சவூதியில் பிரச்னைக்காக நீதிமன்றம் வரும் பெண்கள் மனம் திறந்து பேச இயலாமல் இருந்தனர்… இனி நாங்கள் இருக்கிறோம்’ என்கிறது இந்த சுடு தென்றல்.

சர்வதேச பிசினஸ் ஃபெமினின் பத்திரிகை உலகை மாற்றிய 5 பெண்களைப் பற்றி குறிப்பை கொடுத்திருக்கிறது. அதில் மூன்றாவது இடத்தில் பேயனின் கண்கள் மட்டும் மின்னும் புகைப்படத்தோடு அவரது சிறு குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. நீதித்துறையின் மாற்றம் இன்னமும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது.’கட்சிக்காரர்கள், நீதிபதிகள்… ஏன் பார்வையாளர்கள் கூட – பெண்கள் வழக்கறிஞராக வருவதை ஆதரிக்க மாட்டார்கள் எனும்போது பெண்களுக்கு வாதிட லைசென்ஸ் கொடுப்பது அர்த்தமற்றது’ என்பது அல் தமிமி அன்கோ என்ற சட்ட நிறுவனத்தின் தலைவரின் கருத்து.

‘அர்வா பயிற்சியாளரானதிலிருந்து இன்று வரையான சூழலை கவனிக்கையில் பெண் வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றத்தில் பாதுகாப்பு தேவை. அவர்கள் தனியாக வாகனத்தை ஓட்டிச் செல்ல அனுமதி தேவை’ என்கிறார் மனித உரிமை ஆர்வலர் எரிக் கோல்ட் ஸ்டேன்.

மஜ்லிஸ் அல் சவ்ரா

இந்தப் பெயரோடு சவூதியில் 1926ல் இருந்து ஆலோசனை அசெம்பளி ஒன்று நடைபெற்று வருகிறது. ராஜாக்கள் ஆண்ட காலத்தில் மன்னரின் தலைமையில் நடைபெறும் அரசவை எப்படியோ அப்படியே இது. சட்டசபை மக்கள் சபை… இதுவோ மன்னனின் சபை. இந்த அவையில் 150 உறுப்பினர்கள் இடம்பெற்றாலும், 2013 வரை ஆண்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். இது நாட்டின் வளர்ச்சித்திட்டங்களை பற்றி ஆலோசிக்கும் அவை.குறிப்பாக புதிய சட்ட வரைவுகளை தீட்டும் இடம். மன்னன் அப்துல்லா 2013ல் இந்த அவையில் பெண் உறுப்பினர்களையும் அனுமதிக்கலாம் என்று வெளியிட்ட அறிக்கைப்படி 30 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நாட்டின் சட்டக் கோட்பாடும் மதக் கோட்பாடும் எள்ளளவும் சீர்கெட்டுவிடாமல் முழுவதும் முக்காடிட்டுதான் அவைக்கு வரவேண்டும். ஆண்களை கண்டுவிடாதபடி அவர்கள் வந்துபோகவும் தனிப்பாதை ஏற்படுத்தினர். சட்டத்தை வரையறுத்துக் கொடுக்கக்கூடிய அதிகாரம் பேரவைக்கு உண்டு. அதை நடை முறைக்கு கொண்டுவருவதை மன்னர்தான் தீர்மானிப்பார். மனித உரிமை, சுகாதாரம் உள்பட 3 துறைகளின் தலைமைப் பொறுப்புகளில் பெண்களை நியமித்து அழகு பார்த்தார்கள் என்பதும் இங்கு அதிசயம்தான். மஜ்லிஸ் பெண் உறுப்பினர் குழுவானது புதிய சட்ட வரைவுக்கு பரிந்துரை செய்து அதற்கான நகலை தாக்கல் செய்தது.

பெண்களை கொடுமைப்படுத்தும் ஆண்களுக்கு 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதம், சிறைத் தண்டனை போன்ற ஷரத்துகள் சட்ட வரைவில் உள்ளடங்கி இருந்தன. பெண்களை மோசமாக நடத்தும் நபருக்குத் தண்டனை கொடுத்தால்தான் பயம் வரும் என்பது பெண் உறுப்பினர்களின் கருத்தாக இருந்தது. மன்னன் அப்துல்லாவுக்கு 23க்கும் அதிக மனைவிகளாம்… இதற்குப் பிறகு இந்தச் சட்டம் அமலுக்கு வர வாய்ப்பே இல்லை என்பது நமக்கு தெரிந்ததுதானே!

சட்டக் கடலில் நீந்த வாய்ப்பு கிட்டிவிட்டது. இனி வரும் காலங்களில் சவூதி பெண்கள் அவர்களின் எல்லையற்ற திறமையை வெளிப்படுத்தி கரை சேரும்போது முத்தெடுத்து வருவார்கள் என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒன்று நிகழ்ந்தால் அது எட்டாவது அதிசயமாகவே போற்றப்படும். பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதியில்லாத நாட்டில் தினமும் நீதிமன்றத்துக்கு போக வேண்டுமென்றால் வீட்டில் உள்ள ஆண் துணையை நாட வேண்டும். அவர்களுக்கும் வேலை வெட்டி இருக்குமே… குடும்பத்தில் ஆண் உறவுகள் எப்போதாவது அவசரத்துக்கு வருவார்கள். எப்போதும் வருவார்களா? சொந்த வாகனத்துக்கு ஓட்டுனரை நியமித்துக் கொள்ளலாம்.

நடுத்தர வர்க்கத்தினர்?

பெண் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிடுவதை நீதிபதி விரும்ப மாட்டார் என்பது ஒருபக்கமிருக்க, அந்நிய ஆண்களுடன் பழகுவதே தவறு என்ற போக்குள்ள இடத்தில் எதிர் தரப்பு வழக்கறிஞர், எதிர் தரப்பு கட்சிக்காரர், நீதிபதி, பார்வையாளர்கள் என குழுமியிருக்கும் ஆண்கள் கூட்டத்தில் நீச்சல் தெரியாத ஒருவர் நீந்தி வெளியே வர இயலுமா? அப்படியே கடலுக்குள் மூழ்கடித்து, நீந்தத் தெரியாமல் நீரில் மூழ்கி மாயமாகிவிட்டார்கள் என்று கதைத்து விட இவர்களுக்கு கற்றுக்கொடுக்கவா வேண்டும்? காலம் தீர்ப்பிடும் காத்திருப்போம். வெற்றியோ, தோல்வியோ… அது முக்கியமில்லை. ஆனால், முகத்தையே காட்டக்கூடாது என்று சட்டமுள்ள நாட்டில் முகநூல் மூலம் சாதித்த மங்கைகள் கண்ணெதிரே நடமாடும் நீதி தேவதைகள்தாம்!ld3962

Related posts

பலவகை ஸ்டைல்களில் சேலை உடுத்துங்கள்

nathan

கியூபன் ட்விஸ்ட் ஹேர்: Cuban Twist Hair

nathan

மருதாணி அதிகம் சிவப்பாக பிடிக்க சூப்பர் டிப்ஸ்….

nathan

அசர வைக்கும் அணிகலன்கள்

nathan

உலகின் விலையுயர்ந்த அழகிய காலணிகள்

nathan

கடிகார தேவையையும் பூர்த்தி செய்யும் இந்த கடிகாரம் அழகின் உச்சம்…..

sangika

புதுசு புதுசா அணிய புதுமையா சொல்றோம்!

nathan

தங்களுடைய உடலின் தன்மைக்கேற்பவும், காலநிலையை பொறுத்து வாசனை திரவியங்களை தேர்ந்தெடுக்க இத படிங்க!

sangika

மெஹந்தி என்ற பெயரில் வடமொழி சொல்லில் அழைக்கப்படும் மருதாணி

nathan