சருமம், முடியின் அடர்த்தி, வயது இவற்றையே அழகின் அளவுகோல்களாகப் பலரும் நினைக்கின்றனர். ஏதேதோ க்ரீம்களைப் பூசுவதாலோ என்னென்னவோ ஷாம்பூகளைப் பயன்படுத்துவதாலோ… இளமையைக் கொண்டுவந்துவிட முடியாது. இவை வெளிப்புறத் தோற்றத்தை அழகாக்கிக்கொள்வதற்கான ஒரு தற்காலிகத் தீர்வுதான்.
”நம் உடலில் அழகைக் குறைக்கும் காரணிகள் நிறையவே இருக்கின்றன’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த தோல் நோய் சிகிச்சை நிபுணர் பிரியா.
பரம்பரைத்தன்மை
சருமத்தின் அழகை நிர்ணயிக்கும் முதல் காரணி, பரம்பரைவாகு. சிலருக்கு வயதானாலும், தோலில் சுருக்கம் ஏற்படாது. தலைமுடி நரைக்காது. ஆனால், சிலருக்கு இளம் வயதிலேயே சுருக்கங்கள் ஏற்பட்டுவிடும்.
– ஒருவருக்கு தோலில் சுருக்கம் பரம்பரைத்தன்மை காரணமாக ஏற்பட்டிருந்தால், அதற்கு எந்த க்ரீமைப் பயன்படுத்தினாலும் சுருக்கத்தைப்போக்க முடியாது.
சூரியக் கதிர் வீச்சு
புற ஊதாக் கதிரின் தாக்கத்தால் தோலில் வறட்சி ஏற்படும். இந்தப் புற ஊதாக் கதிர் பாதிப்பு, சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருக்கும்போதும் அதிக ஒளியுள்ள செயற்கை வெளிச்சத்தில் இருக்கும்போதும் வெகு நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்யும்போதும் தொலைக்காட்சியை வெகு அருகில் உட்கார்ந்து பார்க்கும்போதும் ஏற்படலாம்.
– வெளியில் செல்லும்போது எஸ்.பி.எஃப்.15 உள்ள சன்ஸ்கிரீன் லோஷன் தடவி, அரை மணி நேரத்துக்குப் பிறகு செல்வது புற ஊதாக் கதிர்வீச்சில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். பருத்தி உடைகளை அணிவதன் மூலம், புற ஊதாக் கதிர் தாக்கத்திலிருந்து சருமத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
ஊட்டச் சத்து
குடிப்பழக்கம், சிகரெட் பழக்கம் மற்றும் காபி, டீ குடிக்கும் பழக்கம்கூட சருமத்தைப் பாதிக்கும். இந்தப் பழக்கம், உடலில் உள்ள நீர்ச் சத்தைக் குறைத்து, வறட்சியடையச் செய்கிறது. இதனால் சருமம் வறண்டு முதிர்ந்த தோற்றத்தைத் தரும்.
– சருமம் ஆரோக்கியமாக இருக்க நீர்ச் சத்து மிகவும் அவசியம். தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மோர் அல்லது இளநீர் குடிக்கலாம். ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த சத்தான உணவுப்பொருட்கள், தோலின் இளமைத்தன்மையைப் பாதுகாக்கும். வறட்சி மறைந்து சுருக்கங்கள் வராமல் காக்கும்.
சரும சிகிச்சை சாதனங்கள்
நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சரும சிகிச்சை சாதனங்களில் மஞ்சள், சந்தனம் மற்றும் சிட்ரஸ் பழங்களில் செயற்கை ரசாயனம் கலந்திருக்கலாம். அதில் தயாரிக்கப்பட்ட சோப், க்ரீம் மற்றும் பவுடர் போன்றவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தினால், தோல் வறண்டுபோகும். இந்தப் பொருட்கள் கலந்த அழகு சாதனப் பொருட்களைத் தவிர்ப்பதே நல்லது.
ரசாயனம் அதிகம் இல்லாத சோப்பு, ஷாம்பூக்களைப் பயன்படுத்த வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்வியல்
தூக்கப் பிரச்னைகள் தொடர்ந்து இருந்தால், மன அழுத்தம் ஏற்படும். அதிகக் கோபம், டென்ஷன், இயலாமை, தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். இதனால், ஹார்மோன் பிரச்னை வரலாம். சீக்கிரம் முதுமைத் தோற்றத்தைத் தந்து, தலைமுடியும் நரைக்க ஆரம்பித்துவிடும். தினமும் குறைந்தது ஏழு மணி நேரம் தூக்கம் கட்டாயம் தேவை. தூக்கம் சரியாக இருந்தால், உடலில் ஹார்மோன் சுரப்பும் சரியாக இருக்கும். முக்கியமாக, தோல் வளமாக இருக்கத் தேவையான ‘கொலாஜன்’ எனப்படும் ஹார்மோனின் சுரப்பு நன்றாக இருக்கும். இதனால் தோலில் சுருக்கம் வராது.