முடிகளின் அடர்த்தி எத்தனை என்பதையெல்லாம் நம்மால் தீர்மானிக்க முடியாது. நமது வம்சம்தான் தீர்மானிக்கும். வம்ச வகை என்பது நமது ஜீன்களில் உள்ளது.
தலைமுடியை தீர்மானிக்கும் வம்சம் மனிதனின் தலையில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தில் இருந்து 2 லட்சம் தலைமுடிகள் இருக்கின்றன. அவை ஒரு மாதத்துக்குள் ஒன்றேகால் சென்டி மீட்டர் நீளம் வரை வளர்கின்றன. எல்லா தலைமுடியும் ‘பாலிக்கில்ஸ்’ என்ற தனிப்பட்ட நுட்பமான பைகளில் இருந்துதான் வளர்கின்றன. இவை அனைத்துமே செல்கள்தான்.
இந்த ‘பாலிக்கில்ஸ்’ பை மேல் தோலில் இருந்து கீழ் தோலுக்கு துளைத்து இருக்கும். ஒரு மனிதனுக்கு இந்த பைகள் எத்தனை இருக்க வேண்டும், அதில் இருக்கும் முடிகளின் அடர்த்தி எத்தனை என்பதையெல்லாம் நம்மால் தீர்மானிக்க முடியாது. நமது வம்சம்தான் தீர்மானிக் கும். வம்ச வகை என்பது நமது ஜீன்களில் உள்ளது.
ரோமப் பைகள் என்பது ஒரு குழந்தை கருவாக உருவான இரண்டாவது மாதத்தில் இருந்து ஐந்தாவது மாதத்துக் குள் தீர்மானமாகி அமைந்து விடுகின்றன. தலைமுடியுடன் நிறமும் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகிறது. கருமை, பிரவுன், வெள்ளை என்று பல நிறங்கள் தலை முடிக்கு உண்டு. முடியின் உண்மையான நிறம் வெள்ளைதான். ‘மெலனின்’ சுரப்பி தான் முடியை கருப்பாக்குகிறது. வயது ஆக, ஆக ‘மெலனின்’ சுரப்பது குறைகிறது. அதனால் தலைமுடியின் உண்மை நிறமான வெள்ளை வெளியே தெரிகிறது.
தலைமுடி சுருட்டையாக இருப்பது, நீளமாக இருப்பது, மென்மையாக இருப்பது, கரடு முரடாக இருப்பது என்ற எல்லாமே பரம்பரை நமக்கு கொடுத்த வரம்தான். பாலிக்கில்ஸ் என்ற ரோமப்பைகள் வட்ட வடிவில் இருந்தால் தலைமுடி நீளமாக வளரும். முட்டை வடிவில் இருந்தால், முடி நீளமாகவும் வளைந்து நெளிந்தும் இருக்கும். முடிகள் எல்லா ரோமப்பைகளில் இருந்தும் வளர்வதில்லை. அதற்கும் ஒரு கணக்கிருக்கிறது. அதன்படி முதலில் சுறுசுறுப்பாக பைகளில் இருந்து முடி வெளியே வருகிறது. இரண்டு முதல் நான்கு வருடம் வரை ஜோராக வளர்கிறது. அதன்பின் சில வாரங்கள் சோர்ந்து போகிறது. முடியும் உதிர்கிறது. உதிர்ந்த பின் ரோமப்பைகள் நான்கு மாதங்கள் வரை எந்த இயக்கமும் இல்லாமல் சும்மாவே இருக்கும்.
அதன்பின்னர் மீண்டும் முளைக்கும் ஒவ்வொரு தலைமுடியும் தனிப்பட்ட வாழ்நாள் கொண்டவை. அதனால் தினமும் முடி உதிர்கிறது. ஒரு நாளைக்கு 40 முதல் 100 ரோமங்கள் வரை உதிரத்தான் செய்யும். அதே வேளையில் சில ரோமங்கள் அதற்கு இணையாக புதிதாக முளைப்பதால் ரோம அடர்த்தி எப்போதும் நமக்கு ஒரே மாதிரியாக தெரிகிறது.
முடி வளரும் வேகமும் ஆளுக்கு ஆள் மாறுகிறது. அவ்வளவு ஏன்? ஒரு மனிதனின் உடலிலேயே கூட ஒவ்வொரு இடத்திலும் ரோமங்களின் வளர்ச்சி ஒவ்வொரு விதமாக மாறுபடுகிறது. முடி இழப்பு என்பது பெரும்பாலும் ஆண்களின் பிரச்சினைதான். பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னும், மெனோபாசுக்கு பிறகும் முடி உதிரும். கர்ப்பமாக இருக்கும் போது முடி மிக அடர்த்தியாக வளரும். குழந்தை பிறந்தபின் வாரத்துக்கு ஆயிரம் என்ற கணக்கில் முடி கொட்டும்.
வழுக்கை என்பது பரம்பரை சமாச்சாரம்தான். ஆண் தன்மையை அதிகப்படுத்தும் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு அதிகம் இருந்தாலும் முடி உதிரும். அதனால் வழுக்கைத் தலையர்கள் காதலில் கில்லாடியாக இருப்பார்கள் என்பது ஓரளவிற்கு உண்மையே!