மனிதர்களுக்கு தோல் பளபளப்பு உபயத்தை அளிப்பது செல்கள்தான். வறட்சியான செல்கள்தான் தோலின் சொரசொரப்புக்கும், பளபளபின்மைக்கும் காரணமாக இருக்கின்றது.
வெண்மையாக்கும் சிகிச்சைக்கு (Whitening treatment) அடுத்தபடியாக, இளம் பெண்களின் மனங்கவர்ந்த சிகிச்சை என்னும் அந்தஸ்தைப் பெற்றிருப்பது ஸ்கின் – பாலிஷ் சிகிச்சை தான். இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்தச் சிசிச்சை அறிமுகமாயிருந்தாலும், இப்போதுதான் இளம் பெண்களிடையே உச்சக் கட்ட கவனத்தைப் பெற்றிருக்கிறது.
இந்தச் சிகிச்சை புகழ்பெற்ற மருத்துவமனைகளிலும் சில குறிப்பிட்ட அழகு நிலையங்களிலும் செய்யப்படுகிறது. வயது அதிகமாக அதிகமாக சருமத்தில் சுருக்கம், பொலிவிழப்பு ஏற்படுகிறது. ஸ்கின் – பாலிஷ் செய்வதன் மூலம் சருமத்திற்குப் பொலிவும், புத்துணர்வும் கிடைக்கும். பருவினால் ஏற்படும் தழும்புகள் மறையவும் இந்தச் சிகிச்சை செய்யப்படுகிறது. மேலும் தீ விபத்தினால் சருமம் பாதிக்கப்பட்டவர்கள், விபத்துகளில் சிக்கி மேல் தோல் பாதிப்படைந்திருப்பவர்கள் சிகிச்சை செய்வதற்கும் இந்த முறை பயன்படுகிறது.
பொதுவாக இறந்த செல்களை நீக்கிப் புதிய செல்களின் வழியாக புத்துணர்ச்சியான சருமம் உண்டாவதற்கு வழி வகுப்பதுதான் இந்த சிகிச்சையின் அடிப்படை. இதற்காக மருத்துவமனைகளில் “டெர்மடிரேஷன்” செய்கிறார்கள். அங்கு 70 சதம் க்ளைகாலிக் அமிலம் (கரும்பிலிருந்து எடுக்கப்படுகிறது) உபயோகப்படுத்துகிறார்கள். சிகிச்சையை மூன்று நிமிடங்களில் முடித்து அனுப்பி விடுகிறார்கள். ஆனால் சில அழகு நிலையத்தில் 10 முதல் 40 சதவீதம் வரை மட்டுமே “க்ளைகாலிக்” அமிலம் உபயோகபடுத்துகிறார்கள். சிகிச்சையின் பின்னும், அவரவர் சருமத்திற்கேற்பப் பிரத்யேகக் கவனம் எடுக்க வேண்டும்.
ஸ்கின் பாலிஸ் முறை அறிமுகமாவதற்கு முன் பொடி செய்யப்பட்ட சர்க்கரையைச் சருமத்தில் தேய்த்து, இறந்த செல்களை நீக்குவோம். அல்லது சோப், க்ரீம் இவற்றில் ஏதாவது ஒன்றை உபயோகப்படுத்தி அதன் மேல் உப்புத் தூளைத் தேய்ப்போம். ஏனென்றால் உப்பை நேரிடையாக சருமத்தில் தடவக் கூடாது. இந்த முறைகளால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை.
ஸ்கின் பாலிஷ் முறை சமீபத்தில் நவீனமாக்கப்பட்டிருப்பதால் சிகிச்சை எடுத்துக் கொள்வதும் சுலபம். பலனும் அதிகம். இந்தச் சிகிச்சையை வளர் இளம் பருவத்தில் இருக்கும் பெண்கள் செய்யக் கூடாது. பருவ வயதான பெண்கள் மட்டுமே செய்துகொள்ள வேண்டும். அவர்களும் தகுதியான அழகுக் கலைஞரின் ஆலோசனைப்படி மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ செய்யலாம்.
இந்தச் சிகிச்சையை ப்ரஷிங் முறையிலும் சிலிகான் கற்கள் கொண்ட உபகரணங்களை வைத்தும் செய்யப்படுகிறது. சருமத்தின் தன்மைக்கு ஏற்ப உபகரணங்களை பயன்படுத்துவார்கள். க்ளைகாலிக் அமிலத்தைக் கொண்டு மூன்று நிமிடம் மட்டுமே சிகிச்சை அளிப்பார்கள். நேரம் அதிகமானால் சருமத்தில் எரிச்சல் தோன்றும். இந்தச் சிகிச்சைக்குப் பின் ஒரு வாரம் வரை சருமத்தில் சூரிய வெளிச்சம் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடனடியாக தண்ணீரில் நீந்தக் கூடாது. ஃபேசியலும் செய்துக் கொள்ள கூடாது. கடினமான சோப், பவுடர்களை உபயோகிக்கக் கூடாது. பரு இருப்பவர்கள் இந்தச் சிகிச்சையைத் தவிர்ப்பது நல்லது. மணப்பெண்கள் தகுந்த ஆலோசனையின்பேரில் இருமுறை சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.
இறந்த செல்கள் அதிகமாக சருமத்தில் உருவாவதற்குக் காரணம் அதிகப்படியான தூசியே. படுக்கை, தலையணை, உறைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதிலுள்ள பாக்டீரியாவினாலேயே தொற்று உருவாகி பொடுகு, பரு இவை உருவாகின்றன.
தரமான பொருட்களைச் சருமத்திற்கு உபயோகிப்பதன் மூலம் அவ்வப்போது உருவாகும் இறந்த செல்களைப் போக்கலாம். பப்பாளியில் என்சைம் இருப்பதால் அந்தப் பழத்தின் கூழைச் சருமத்தில் தடவினால், பளபளப்பும், நிறமும் அதிகரிக்கும். ஆனால் அலர்ஜி உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.
அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல மேனியிலும் தெரிவதற்கு உதவும் ஸ்கின் பாலிஷ் இந்தத் தலைமுறைக்குக் கிடைத்த வரப்பிரசாதம்தான்.