பெண்கள் தங்களின் வீடுகளில் அதிக நேரம் செலவழிக்கும் ஓர் அறை தான் சமையலறை. அத்தகைய சமையலறையை பெண்களின் புதையல் என்று சொல்லலாம். ஏனெனில் சமையலறையில் உள்ள எண்ணற்றப் பொருட்கள் சருமம் மற்றும் கூந்தலைப் பராமரிக்க உதவுகின்றன. ஆனால் பல பெண்களுக்கு அதைக் குறித்து சரியாக தெரிவதில்லை.
அதைத் தெரிந்து கொண்டாலேயே, மாதந்தோறும் அழகு சாதனப் பொருட்களுக்கு செலவழிக்கும் பணத்தை மிச்சப்படுத்தலாம். இங்கு தமிழ் போல்ட்ஸ்கை சமையலறையில் உள்ள எந்த பொருட்கள் எப்பிரச்சனைக்கு நல்ல தீர்வை வழங்கும் என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றைக் கொண்டு உங்கள் அழகு பிரச்சனைகளுக்கு தீர்வு காணுங்கள்.
பால்
பால் மிகவும் சிறப்பான கிளின்சர். தினமும் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும் நீரினால் முகத்தைக் கழுவும் முன், கட்டனை பாலில் நனைத்து அதனைக் கொண்டு முகத்தைத் துடைத்து எடுங்கள். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறுவதோடு, சருமமும் மென்மையாக வறட்சியின்றி இருக்கும்.
தக்காளி
தக்காளி இல்லாத சமையலறை இருக்காது. அத்தகைய தக்காளி சருமத்திற்கு மிகவும் நல்லது. அதில் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. எனவே அந்த தக்காளியின் சாற்றினை தினமும் இரவில் முகத்தில் தடவி உலர வைத்து கழுவ, முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கிவிடும்.
ஆரஞ்சு
வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சு பழம் சருமத்தில் கொலாஜன் உருவாக்கத்தை மேம்படுத்தும் மற்றும் சருமத்தில் மற்ற புரோட்டீன்களின் உற்பத்திக்கும் உதவும். எனவே அதற்கு ஆரஞ்சு பழத்தின் சாற்றினை முகத்தில் முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் முகம் பொலிவோடு, சுருக்கமின்றி இருக்கும்.
காபித் தூள்
பலருக்கும் காபி மிகவும் விருப்பமான பானம். ஆனால் அந்த காபிப் பொடியில் ஆன்டி-ஏஜிங் பொருள் உள்ளதால், அதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், விரைவில் சரும சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கலாம். அதற்கு 3 டீஸ்பூன் காபிப் பொடியில், 1 டீஸ்பூன் பால் மற்றும் சிறிது கசகசா சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து கழுவினால், முகம் புத்துணர்ச்சியுடனும் பொலிவோடும் இருக்கும்.
தயிர்
தயிர் ஒரு நேச்சுரல் ப்ளீச்சிங் பொருள். இதனை சருமத்தில் பயன்படுத்தினால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். தயிரை ஃபேஸ் பேக், ஸ்கரப் அல்லது ஹேர் மாஸ்க் என எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதிலும் பட்டுப்போன்று மென்மையான கூந்தல் வேண்டுமானால், தயிரில் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து நன்கு கலந்து, அதனை கூந்தலில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
மஞ்சள் தூள்
மஞ்சள் தூளை தினமும் குளிக்கும் போது முகம், கை, கால்களுக்கு தடவி குளித்து வந்தால், சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். ஏனெனில் மஞ்சளில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகம் உள்ளது.
கடலை மாவு
கடலை மாவில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து பின் மென்மையாக ஸ்கரப் செய்து முகத்தைக் கழுவி வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கி, முகம் பளிச்சென்று இருக்கும்.