பியூட்டி: டாக்டர் ராஷ்மி ஷெட்டி
பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அத்தனை ‘வுட்’களின் ஹீரோ, ஹீரோயின்களின் அழகுக்கும் இளமைக்கும் காரணகர்த்தா! சானியா மிர்ஸா, ஷில்பா ஷெட்டி, நாகார்ஜுனா, அமலாவில் தொடங்கி, தமன்னா, ஸ்ருதி ஹாசன், சூர்யா வரை தங்களது அழகுக்கும் கவர்ச்சிக்கும் ராஷ்மி ஷெட்டிக்கு உருகி உருகி நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தனது ‘ஏஜ் எரேஸ்’ (age erase) என்கிற புத்தக வெளியீட்டு விழாவுக்கு நட்சத்திர நண்பிகள் புடை சூழ வந்திருந்த ராஷ்மியுடன் ஓர் உரையாடல்…
‘‘மக்களை அழகாக்கிப் பார்க்கிறதுல தான் எப்போதும் என் ஆர்வம் இருந்திருக்கு. அழகாக்கிறதுன்ன தும், தோற்றத்தை மட்டும் அழகா, கவர்ச்சியா மாத்தறதுனு தப்பா நினைச்சுடாதீங்க. சிலருக்கு அழகுங்கிற விஷயத்துக்குப் பின்னால உணர்வுப் போராட்டமே இருக்கும். உதாரணத்துக்கு ஒருத்தரோட முகத்துல உள்ள ஒரு சின்ன குறை கூட அவங்களோட தன்னம்பிக்கையையே சிதைச்சிடலாம். அதை சரி பண்றது மூலமா அவங்க வாழ்க்கையில பெரிய மாற்றத்தைப் பார்க்கலாம்.
அழகா இருக்கோம்கிற அந்த நினைப்பு ஒருத்தருக்குள்ள உருவாக்கிற பாசிட்டிவான விளைவுக்கும் சந்தோஷத்துக்கும் நானும் ஒரு வகையில காரணமா இருக்கேங்கிறது எவ்ளோ பெரிய விஷயம்ல…’’ – அழகு மருத்துவத் துறை தன்னை ஈர்த்த காரணத்துடன் பேச ஆரம்பிக்கிறார் ராஷ்மி. ‘‘ஒரு டாக்டரா எனக்குக் கிடைச்ச பேரும் புகழும் விளம்பரமும் கொஞ்ச நஞ்சமில்லை. எத்தனையோ மக்கள், தங்களோட ஸ்கின் மற்றும் ஹேர் சம்பந்தமான பிரச்னைகளுக்குத் தீர்வு கேட்டு என்னைப் பல வழிகள்லயும் தொடர்பு கொள்ள முயற்சி பண்ணுவாங்க. அப்பதான் ஒரு எக்ஸ்பர்ட்கிட்டருந்து மக்கள் எதிர்பார்க்கிற விஷயங்களுக்கான சரியான தகவல்கள் கிடைக்க வேண்டிய அவசியம் தெரிஞ்சது.
என்னை நேரடியா சந்திக்க முடியாதவங்களுக்காகத்தான் இந்தப் புத்தகம்…’’ – தனது முதல் புத்தகமான ‘ஏஜ் எரே’ஸின் பின்னணி சொல்கிறார். முதுமையை யாராலும் தள்ளிப் போட முடியாது. ஆனால், திடீரென அதிர்ச்சி தருகிற மாதிரி முதுமைக்குள் போகாமல், அழகாக அதை வரவேற்கலாம் என்கிறார் ராஷ்மி. அதற்கு என்ன செய்ய வேண்டும்? ‘‘என் புக் ‘ஏஜ் எரே’ஸை படிக்கணும்…’’ – பெரிதாக சிரிக்கிறவர், சீரியஸான டிப்ஸும்
தருகிறார்.
‘‘அது ஒட்டுமொத்த உடல்நலம் சம்பந்தப்பட்டது. எக்சர்சைஸும் சரியான டயட்டும் ரொம்ப முக்கியம். அதுதான் உங்களை ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் வைக்கும். பிக்மென்ட்டேஷனோ, பருவோ இருந்தா அதை சரி பண்ணிக்கணும். சருமத்தோட ஈரப்பதம் குறையாமப் பார்த்துக்கணும். சன் ஸ்கிரீன் யூஸ் பண்ணணும்…’’ – சிம்பிள் டிப்ஸ் தருபவர், சிவப்பழகு க்ரீம்கள் உபயோகிப்பதை வரவேற்கிறார். ‘‘சிவப்பாகணும் கிறதுக்காக ஃபேர்னஸ் க்ரீம் யூஸ் பண்ண வேண்டியதில்லை. மங்கு மாதிரியான பிரச்னைகள் உள்ளவங்க, ஃபேர்னஸ் க்ரீம் யூஸ் பண்றது மூலமா ஸ்கின் கலரை ஒரே மாதிரி வச்சுக்கலாம். சிவப்பா இருக்கணும்கிற சிந்தனை இன்னிக்கு உலகம் முழுக்க இருக்கு.
அப்படியிருக்கிறப்ப ஃபேர்னஸ் க்ரீம் யூஸ் பண்றதுல என்ன தப்பு? ஒருத்தர் யூஸ் பண்ற மேக்கப் க்ரீம்லேருந்து, பிரஷ், ஸ்பாஞ்ச்னு எல்லாமே தரமான கம்பெனி தயாரிப்பா இருக்கணும். உபயோகிச்ச பிறகு முறையா சுத்தப்படுத்தப்படணும். என்னதான் வேலை இருந்தாலும், எவ்ளோ லேட் ஆனாலும் நைட் தூங்கப் போறதுக்கு முன்னாடி மேக்கப்பை எடுக்க மறக்கக் கூடாது. தொடர்ந்து 15 நாளைக்கு தினமும் ஆன்ட்டி டாண்ட்ரஃப் ஷாம்பு யூஸ் பண்ணி தலையை அலசினா, பொடுகைத் தவிர்க்கலாம். தலையில எண்ணெய் வச்சா, ரெண்டு முறை அலச வேண்டியது அவசியம்…’’ என்பவரிடம் கடைசியாக ஒரு கேள்வி…
‘ஏஜ் எரேஸ்… நிஜமாவே முதுமையை விலக்கிட முடியுமா?’
‘‘அதுக்கு அப்படி அர்த்தமில்லை. ஒருத்தரைப் பார்த்த கணத்துல அவங்க தோற்றம் நமக்கு ஏற்படுத்தற எண்ணத்தை அழிக்க முடியும்கிறதுதான் அர்த்தம். ‘ச்சே… என்ன அழகு’னு மட்டும்தான் நினைக்க வைக்கணும். அவங்க வயசு உறுத்தக் கூடாது…’’ என்பவரின் அழகை ரசிக்க முடிந்ததே தவிர வயதை கடைசி வரை கணிக்க முடியவில்லை!