டாக்டர் காளீஸ்வரன், சித்த மருத்துவர், படம்: ரா.ரகுநாதன்
‘அழகுக்காக வளர்க்கப்படும் பல்வேறு தாவரங்களில் நமது ஆரோக்கியமும் நிறைந்துள்ளது என்பதை நாம் உணர்வது இல்லை. அவற்றில் ஒன்றுதான் மஞ்சள் கொன்றை எனப்படும் சரக்கொன்றைப் பூக்கள். சர்க்கரை நோயை சரிசெய்யக்கூடிய ஆற்றல் சரக்கொன்றைப் பூக்களுக்கு உண்டு. குடல் வலியை சரியாக்கும். சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படும். ரத்தசோகை, வெள்ளைப்படுதல், தேமல், சொரி மற்றும் சருமம் தொடர் பான அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்து இது.
கைப்பிடி அளவு சரக்கொன்றைப் பூக்களைக் கழுவி, புளி, சிறிது ரோஜா இதழ்கள், தேங்காய் சேர்த்து, எண்ணெயில் வதக்கி துவையல் போல் அரைத்து உணவுடன் கலந்து சாப்பிடலாம்.
சரக்கொன்றைப் பூக்களை, பசும்பாலில் சேர்த்து, காய்ச்சி தினமும் குடித்து வர, உடல் உறுப்புகள் வலிமை பெறும். பலவீனம் நீங்கி உடல் உறுதியாகும். குடல் சுத்தமடையும்.
சரக்கொன்றைப் பூக்களில் தண்ணீர் சேர்த்து, காய்ச்சி வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
சீரகம், மஞ்சள் தூள், கொத்தமல்லிக்கீரை, சரக்கொன்றைப் பூக்கள் ஆகியவற்றை அரைத்து, பசு மோரில் கலந்து 21 நாட்கள் காலை வேளையில் குடித்துவர, நாட்பட்ட வெள்ளைப்படுதல் குணமாகும்.
சரக்கொன்றைப் பூக்களை அரைத்து, அந்த விழுதில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், மஞ்சள் காமாலைக்கு நல்ல மருந்தாகும்.
சரக்கொன்றைப் பூக்களை, குளிக்கும் தண்ணீரில் இரவே போட்டுவிட்டு, காலையில் அந்த நீரில் குளித்துவர, சருமத்தில் உள்ள கருமை, திட்டுக்கள் நீங்கி அழகு பெறும்.
சரக்கொன்றைப் பூக்களை அலசி, எலுமிச்சைச் சாறு விட்டு அரைத்து, அந்த விழுதினை உடலில் தேய்த்துக் குளித்துவந்தால் தேமல், சொரி குணமாகும்.