அதிக அளவில் வியர்ப்பதை ஹைப்பர்ஹைட்ராசிஸ் (Hyperhidrosis) என்று கூறுகிறோம்.
பொதுவாக வெயிலில் வெளியே செல்லும்போதும் உடல் வெப்ப நிலை அதிகரிக்கும் போதும் குளிர்ச்சிப் படுத்திக் கொள்வதற்காகவே இயற்கையாக நம் உடல் வியர்க்கத் தொடங்கும்.
உடலின் தேவைக்கு அதிகமாக வியர்ப்பதையே ‘மிகையான வியர்வை’ என்று சொல்லப்படுகிறது.
மிகையான வியர்வை பிரச்சனை உள்ளவர்களுக்கு எந்நேரமும் அதிக அளவில் வியர்வை வெளியேறும். பெண்களைவிட ஆண்களில் இளம்பருவ வயதினருக்கே மிகை வியர்வை உண்டாகிறது.
ஒவ்வொருவருக்கும் வியர்த்தல் பகுதி வேறுபடும். அதில் சிலருக்கு அடிப்பாதங்களில் அதிக அளவில் வியர்வை சுரக்கும். இது மரபு வழிக் காரணத்தாலும் இருக்கலாம்.
வேறு நோய்களுக்காக மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்கும் ஃபுட் சப்ளிமென்ட் எடுத்துக் கொள்பவர்களுக்கும் மிகை வியர்வை உண்டாகிறது.
இவர்களின் அடிப்பாதங்கள் எப்போதுமே ஈரப்பதத்துடன் இருப்பதால் சூக்கள் அணிபவர்களின் சாக்ஸ்கள் ஈரமாகிவிடும். பாதங்கள் ஊறி வெளிறிக் காணப்படும். பாதங்களில் மேல் சருமம் உரிந்து வெடிப்புகள் உண்டாவதால் அதில் தொற்றுகள் உண்டாகி அரிப்பு ஏற்படும். அதன் காரணமாக துர்நாற்றம் வீசத் தொடங்கும். தங்கள் பாதங்களில் எப்போதும் துர்நாற்றம் வீசும்.
என்ன செய்யலாம்?
“பாதங்களை சுகாதாரமான முறையில் பராமரித்தல் அவசியம். தினமும் பாதங்கள் மற்றும் விரல் இடுக்குகளில் ஆன்ட்டி பேக்டீரியல் சோப் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும்.
பிறகு சுத்தமான டவலினால் துடைத்து நன்கு உலரவிட்டு பின் பாதங்களுக்கென்றே விற்கப்படும் பவுடர் அல்லது ஆன்ட்டி ஃபங்கல் (Antifungal) பவுடர் போட வேண்டும்.
தரமான ஈரத்தை உறிஞ்சக்கூடிய சாக்ஸ்களை அணிய வேண்டும். அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரி செல்பவர்கள் நாள் முழுவதும் ஒரே சாக்ஸ்களை அணியாமல், எப்போதும் ஒரு ஜோடி சாக்ஸ்களை உடன் வைத்திருக்க வேண்டும். அவற்றை உணவு இடைவேளைகளின் போது மாற்றிக் கொள்வது நல்லது. முடிந்தால் ட்ரையர் உபயோகித்து கால்களை உலரச் செய்யலாம்.