மாதுளம்பழத் தோலைப் பொடி செய்து, அதனுடன் சம அளவு பயத்தம் பருப்பைக் கலந்து, குளித்தாலோ, உடலில் பூசிக்கொண்டாலோ, வியர்வை துர்நாற்றம் நீங்கும்; உடலுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
மாதுளம்பழத் தோலைப் பொடித்து, தண்ணீர்விட்டுக் குழைத்து, சருமம், தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், முகப்பரு உள்ளிட்ட சருமப் பிரச்னைகள், முடி உதிர்தல் நீங்கும்.
எலுமிச்சைத் தோல் ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படுகிறது. சிலருக்குக் கை, கால் முட்டிகளில் கறுப்பாக இருக்கும். எலுமிச்சைத் தோலை கருமையான இடங்களில் தேய்த்துவர, கருமை நீங்கி, நல்ல பலன் கிடைக்கும். மேலும், இது சருமத்துக்குப் பளபளப்பையும் தர வல்லது.
பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், எலுமிச்சைப்பழத் தோலை நன்கு கசக்கி, தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் ஊறவைத்துக் குளித்தால், பொடுகு குறைந்து, சில வாரங்களில் நல்ல பலன் தெரியும்.
எலுமிச்சைப்பழத் தோலை நகங்கள் மீது தேய்க்க பளபளப்புக் கிடைக்கும்.
மாம்பழத்தோலைக் கூழாக்கி, அதனுடன் பால் கலந்து சருமத்தில் தடவி வந்தால், கருவளையம் மெள்ள நீங்கும்.
இதனுடன் சிறிது தேன் கலந்து, கழுத்தில் கருமையாக இருக்கும் பகுதிகளில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
ஆரஞ்சுப்பழத் தோலை பாத வெடிப்புகளில் பூசி வந்தால், ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
ஆரஞ்சுப்பழத் தோல் பொடியுடன் சிறிதளவு பால், தயிர் சேர்த்து, ஃபேஸ்பேக் போல பயன்படுத்த, பொலிவிழந்த முகம் களைகட்டும்.
ஆரஞ்சுப்பழத் தோலில் இருந்து சாறு எடுத்து, முகத்துக்குப் பூசிவர கரும் புள்ளிகள் நீங்கி, முகம் பளபளப்பாக மாறும்.