26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
ld3658
ஃபேஷன்

100 புடவை கட்டுங்கள் புதுமைப் பெண்களே!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டோ இல்லையோ… ஒவ்வொரு சேலைக்கும் பின்னால் ஒரு சுவாரஸ்ய கதை கட்டாயம் இருக்கும். அந்தக் கதைகளோடு, வருடத்தில் 100 புடவைகளை உடுத்தச் செய்கிற ஒரு சவாலை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள் தோழிகள் ஆலி மாத்தனும், அஞ்சு முத்கல் கதமும். 100 சாரி பேக்ட் (‪#‎100sareepact‬) என்கிற பெயரில் சமூக வலைத்தளத்தில் பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது இந்த சேலஞ்ச்!

யார் வேண்டுமானாலும் இந்த ஒப்பந்தத்தில் இணையலாம். வருடத் துக்கு 100 சேலைகள் உடுத்திக் காட்ட வேண்டும். அப்படி சேலை உடுத்தும் போது அது தொடர்பான நினைவையோ, கதையையோ மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்… சேலை கட்டிய புகைப்படத்துடன்!

”ஒவ்வொரு சேலையும் ஒரு ஞாபகத்தை சுமந்துக்கிட்டிருக்கும். அந்த ஞாபகங்களை எல்லாம் பகிர்ந்துக்க நினைச்சோம். ஒருநாள் நானும் ஆலியும் பேசிட்டிருக்கும் போது பீரோ முழுக்க நிரம்பி கிடக்கிற புடவைகளைப் பத்தியும் அபூர்வமா அதையெல்லாம் உடுத்தறதைப் பத்தியும் யோசிச்சோம். அப்படி உபயோகமில்லாம தூங்கிட்டிருக்கிற புடவைகளுக்கு எங்களோட அன்பையும் மரியாதையையும் பகிர்ந்துக்கலாம்னு நினைச்சோம். இந்த வருஷம் 100 சேலைகளையாவது உடுத்திக்கிட்டு, அவை சம்பந்தமான நினைவுகளைப் பகிர்ந்துக்கிறதுனு முடிவு பண்ணினோம்.

அப்படி ஆரம்பிச்சதுதான் 100 சாரி பேக்ட்… எங்களோட இந்த ஐடியாவை பத்தி சொன்னதும் பலரும் எங்களோட கை கோர்த்துக்கிட்டாங்க. எங்களோட இந்த புடவைப் பயணம் இப்படித்தான் ஆரம்பமாச்சு. புடவை கட்டற பெண்களுக்கு இந்த உலகத்தையே கட்டிக் காக்கிற கன்ட்ரோல் இருக்கும்கிறது என் எண்ணம். 6 முழம் புடவையை கன்ட்ரோலா வச்சுக்கத் தெரிஞ்சவங்களுக்கு உலகத்தையே கன்ட்ரோல் பண்ணத் தெரியும்…” என்கிறார் அஞ்சு. பத்திரிகையாளர், புகைப்படக் கலைஞர், தொழிலதிபர் என இவருக்குப் பன்முகங்கள்!

வாசனைப் பொருள் தயாரிப்பில் இருக்கிற ஆலிக்கு சேலைகள் என்றால் கொள்ளை பிரியமாம்.”சின்ன வயசுல எல்லா பொம்பிளைக் குழந்தைங்களும் அவங்கம்மாவோட சேலையை எடுத்துச் சுத்திக்கிட்டு அழகு பார்ப்பாங்க. அந்த வயசுல ஆரம்பிக்கிற சேலை ஆசை, வயசாக, வசதிங்கிற காரணத்துக்காக மாறிடுது. அஞ்சு மீட்டர் புடவையை உடுத்தறதைவிட, ஜீன்ஸோ, ஸ்கர்ட்டோ போட்டுக்கிறது ஈஸியா இருக்கு. அதுக்காக நாம நம்ம கலாசார வேர்கள்லேருந்து விடுபட்டுப் போறது நியாயமில்லை இல்லையா..?

ஒவ்வொரு பெண்ணோட வார்ட்ரோபுக்குள்ளயும் மறைஞ்சு கிடக்கிற புடவைகளை வெளியில கொண்டு வந்து, அவற்றோட இணைஞ்சிருக்கிற சோகம், சந்தோஷம், உறவுகள், நினைவுகள்னு எல்லாத்தையும் பத்திப் பேச வைக்கிற எண்ணத்துலதான் இப்படியொரு வித்தியாசமான ஐடியாவை ஆரம்பிச்சோம். இந்த சேலை ஒப்பந்த இயக்கத்தோட முக்கியமான நோக்கமே, புடவைங்கிறதும் அன்றாடம் உடுத்த வசதியான உடைதாங்கிறதை பெண்களுக்குப் புரிய வைக்கிறதுதான்.

நம்மளைச் சுத்தி எத்தனையோ பெண்கள் தினமும் வாக்கிங் போகறதுலேருந்து, சமைக்கிறது, வீட்டு வேலைகள் செய்யறது, ராத்திரி தூங்கறது வரைக்கும் எல்லா வேலைகளையும் புடவையிலயே செய்யறதைப் பார்க்கறோம். அவங்களைப் போல எல்லாரையும் தினமும் புடவை கட்டிக்கணும்னு நாங்க சொல்லலை. உங்க பீரோவுக்குள்ளயும் அலமாரிக்குள்ளயும் புதைஞ்சு கிடக்கிற புடவைகளை வெளியில எடுங்க. வாரம் ரெண்டு நாள் புடவை கட்டிக்கோங்கனுதான் சொல்றோம்…” என்கிறார் ஆலி.

100 சேலை ஒப்பந்தத்தில் இணைகிறவர்கள் புத்தம் புதிய புடவையையோ, டிசைனர் சேலையையோ கட்டித்தான் போட்டோவை போஸ்ட் செய்ய வேண்டும் என அவசியமில்லை. சொல்லப் போனா ஒவ்வொரு பழைய சேலையும் பின்னாடி அவங்க பாட்டி, அம்மா, அக்கா, மனசுக்குப் பிடிச்சவங்கனு யாரோ ஒருத்தரோட நினைவையும் அன்பையும் சுமந்துக்கிட்டிருக்கும். அதைப் பகிர்ந்துக்கிறதுதான் எவ்ளோ சந்தோஷம்..?” என்கிறார்கள் தோழிகள்.

ஆரம்பித்த சில நாட்களிலேயே ஃபேஸ்புக்கில் இவர்களது பக்கத்தை நிரப்பும் புடவைப் படங்களும் அனுபவங்களும் கதைகளுமே இந்த இயக்கத்துக்குக் கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி. இந்தியாவில் இருந்து மட்டுமின்றி, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஸ்வீடன், சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்துகூட பெண்கள் தங்கள் புடவை புராணம் பகிர்வதுதான் ஆச்சரியம்!

அடுத்த கட்டமாக அஞ்சுவும் ஆலியும் இந்த கதைகளில் சிறப்பானவற்றைத் தேர்ந்தெடுத்து புத்தக வடிவில் தொகுத்து வெளியிடும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்கள். 2016 மார்ச்சில் 100 சாரி பேக்ட் தனது முதல் ஆண்டை நிறைவு செய்யவிருக்கிறது. அதற்கு முன் டிசம்பர் 21ம் தேதி ஆலிக்கும் அஞ்சுவுக்கும் ரொம்பவே ஸ்பெஷலாம்!

அன்னிக்குத்தான் நாங்க ரெண்டு பேரும் எங்களோட 100வது புடவையை உடுத்தப்போற நாள். அதோடு, அந்த நாளை உலக சேலை தினமா அறிவிக்கப் போறோம். எங்களோட சேர்ந்து எல்லாரும் இதைக் கொண்டாடட்டும்…” என்கிறார்கள். கொண்டாட்டத்துக்கு புதுச் சேலை வாங்குவது பெண்களுக்குப் பிடித்த விஷயம். அந்தக் கொண்டாட்டமே சேலைக்காகத் தான் என்றால் கேட்கவா வேண்டும்?ld3658

Related posts

நவீன யுவதியர்களுக்கு புதிய டெனிம் பேண்ட்கள்

nathan

ஜீன்சுக்கு ஏற்ற டாப்ஸ்

nathan

ஃபேஷன் டிசைனிங் துறையில் எதிர்காலம் இருக்கிறதா?

nathan

ஜீன்ஸிற்கு ஏற்ற டாப்ஸ் எது தெரியுமா?

nathan

கியூபன் ட்விஸ்ட் ஹேர்: Cuban Twist Hair

nathan

நவீன மங்கையர் விரும்பும் டியூனிக் குர்தாக்கள்

nathan

பட்டு சேலை அறிய வேண்டிய விஷயங்கள்

nathan

‛புடவை எப்பவும் பெஸ்ட் சாய்ஸ்!’ – ராதிகாவின் ஸ்டைல் சீக்ரெட்

nathan

எப்போதும் மவுசு குறையாத காட்டன் சர்ட்டுகள்

nathan