லிப் மேக்கப்
ஒருவரது முகத்தில் கண்களுக்கு இணையானவை உதடுகள். உள்ளத்து உணர்வுகளை கண்கள் எப்படிப் பிரதிபலிக்கின்றனவோ, அதே போலத்தான் உதடுகளும். நாம் சோகமாக இருந்தால் உதடுகள் கீழ் நோக்கியும் சந்தோஷப்பட்டால் மேல் நோக்கியும் இருக்குமாம். முகத்துக்கான மேக்கப்பில், உதடுகளுக்கான கவனிப்பு ரொம்பவே ஸ்பெஷல்! கொஞ்சம் அசந்தாலும் முகத்தின் அமைப்பை மட்டுமின்றி, ஒட்டுமொத்த தோற்றத்தையே மாற்றிக் காட்டக் கூடியது லிப் மேக்கப்.
உதடுகளுக்கான மேக்கப்பில் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி விளக்குகிறார் மேக்ஓவர் பிரான்ஸரின் உரிமையாளரும் அழகுக்கலை நிபுணருமான விஜி கே.என்.ஆர்.
உங்களுக்கான சரியான லிப்ஸ்டிக்கை எப்படித் தேர்வு செய்வது?
லிப்ஸ்டிக் பயன்படுத்துகிற பழக்கமுள்ளவர்கள் எல்லோரும் தங்கள் கைப்பைகளில் ஒன்றுக்கும் மேலான லிப்ஸ்டிக் வைத்திருப்பதைப் பார்க்கலாம். அவற்றில் சில ஷேடுகளை மட்டுமே அடிக்கடி உபயோகிப்பார்கள். மற்றவை உபயோகமற்று அப்படியே இருக்கும். அதற்கொரு காரணம் உண்டு. கடைகளில் அடுக்கி வைத்திருக்கிற லிப்ஸ்டிக்கை பார்த்ததும் அதன் ஷேடில் மயங்கி வாங்கியிருப்பார்கள். வீட்டுக்கு வந்து உபயோகித்துப் பார்த்தால் அது தனக்குப் பொருந்தாத ஷேடு எனத் தெரிந்து உபயோகிக்க மாட்டார்கள். லிப்ஸ்டிக்கின் நிறம் என்பது உங்கள் சரும நிறத்தை மட்டுமே பார்த்து வாங்கப்பட வேண்டியதல்ல.
சருமத்தின் அண்டர் டோனை தெரிந்து கொள்ளுங்கள்…
ஒவ்வொருவரின் சருமமும் மஞ்சள் அல்லது பிங்க் நிறத்தில் அண்டர்டோன் என ஒன்றைக் கொண்டிருக்கும். மஞ்சள் என்பது Warm கலராகவும், பிங்க் என்பது Cool கலராகவும் கருதப்படும். உங்களுடைய அண்டர்டோன் எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொள்வது, உங்களுக்கான சரியான லிப்ஸ்டிக் ஷேடை தேர்வு செய்யப் பெரிதும் உதவும். அது சரி… அண்டர்டோனை எப்படி அடையாளம் காண்பது? அது மிகவும் எளிது. உங்கள் சருமத்தின் ஊடே தென்படுகிற நரம்புகள் நீல நிறத்தில் காணப்பட்டால் உங்களுடையது பிங்க் அண்டர்டோன். அதே நரம்புகள் பச்சை நிறத்தில் காணப்பட்டால் மஞ்சள் அண்டர்டோன். நீலமும், பச்சையும் கலந்த நிறத்தில் காணப்பட்டால் உங்களுடையது நியூட்ரல் அண்டர்டோன்.
எந்த அண்டர்டோனுக்கு எந்த ஷேடு?
மஞ்சள் அண்டர்டோனுக்கு Warmer கலர்களே பொருந்தும். பிங்க் அண்டர்டோனுக்கு Cooler கலர்கள் சரியாக இருக்கும். வெளுத்த, சாம்பல் நிற ஷேடுகளை தவிர்ப்பதே நல்லது. அம்மாதிரியான ஷேடுகள் உங்கள் சருமத்தை ஆரோக்கியமின்றிக் காட்டும்.
ஸ்கின்டோனையும் கவனியுங்கள்…
ஒவ்வொருவரின் சரும நிறம் எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்தும் இது தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சிவந்த சருமமா, மாநிறமா, மிதமான நிறமா என்பதற்கேற்ப அவர்களுக்கான ஷேடுகள் வேறுபடும்.
சிவந்த சருமம் கொண்டவர்களுக்கு…
பிங்க், கோரல், ப்ளம், Fuschia எனப்படுகிற அடர் ஊதா நிறம், ரோஸ், ஆரஞ்சு மற்றும் பெர்ரி ஆகிய ஷேடுகள் இவர்களுக்கு ஏற்றவை. சரியான ஷேடை தேர்வு செய்வதைப் போலவே தரமான பிராண்டும் முக்கியம். தவறான பிராண்ட் மற்றும் ஷேடு, சிவந்த சருமம் கொண்டவரது உதடுகளை வெளிறிப் போன மாதிரியும் துடைத்துவிட்டது மாதிரியும் காட்சியளிக்கச் செய்துவிடும்.
மாநிறம் கொண்டவர்களுக்கு…
நீல நிறமிகள் கொண்ட ஷேடுகளை உபயோகிப்பதன் மூலம் இவர்களது தோற்றத்தையும் பளிச்செனக் காட்டலாம். ரெட், மெஜந்தா, Mauve, பிங்க், ரோஸ், காபி மற்றும் பிரவுன் ஷேடுகள் இவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.
மிதமான நிறம் கொண்டவர்களுக்கு…
இவர்களுக்கு Berry மற்றும் Mauve ஷேடுகள் அழகாக இருக்கும். பளிச்சென்ற பிங்க் மற்றும் பிரவுன் ஷேடுகளை இவர்கள் தவிர்க்க வேண்டும். சிவந்த நிறமே சிறப்பானது என்கிற நாட்கள் மாறிவிட்டன. மாநிறம் மற்றும் அதையும்விட மட்டான நிறம் கொண்ட எத்தனையோ அழகிகளை இந்தியா பார்த்துவிட்டது.
கருப்பான சருமம் கொண்டவர்களுக்கு மேக்கப் பொருந்தாது என்பதும் தவறான கருத்து. இன்னும் சொல்லப் போனால் மாநிறமே மகத்தான நிறம். சரியான மேக்கப் சாதனங்களைத் தேர்வு செய்வதன் மூலம் அவர்களது அழகை பலமடங்கு அதிகரித்துக் காட்ட முடியும். உதடுகளுக்கான பிற மேக்கப் சாதனங்களைத் தேர்வு செய்யும் முறை, அட்வான்ஸ்டு மேக்கப் ஆகிய தகவல்கள் அடுத்த இதழிலும்…
ஸ்டெப் பை ஸ்டெப் ஆக லிப்ஸ்டிக் போடும் முறை…
1. முதலில் உங்கள் உதடுகளைத் தயார்படுத்த வேண்டும். மெல்லிய, மிருதுவான பிரஷ் கொண்டு உங்கள் உதடுகளை எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டும். சர்க்கரைப் பாகில் பிரஷ்ஷை தொட்டு உதடுகளைத் தேய்த்தால் இறந்த செல்கள் நீங்கும்.
வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்த துணியால் உதடுகளைத் தொட்டுத் துடைத்து, வட்டமாக மசாஜ் செய்யவும்.
2. உதடுகளின் மேல் தரமான லிப் பாம் தடவவும். எவ்வளவு நேரம் அது நீடிக்கிறதோ, அவ்வளவு நேரம் உதடுகள் மிருதுவாக இருக்கும். உதடுகளுக்கு மேக்கப் போடுவதற்கு முன்பாக இதைச் செய்ய வேண்டும்.
3.மிக மென்மையாக லிப் பாமை துடைத்து எடுக்கவும். இதைச் செய்யாமல் விட்டால் லிப்ஸ்டிக் சரியாக ஒட்டாமல் போகும்.
4. உதடுகளின் மேல் ஃபவுண்டேஷன் தடவவும். உதடுகளை நன்கு விரித்து சிரித்தபடி வைத்துக் கொண்டு ஃபவுண்டேஷன் தடவினால், இடைவெளி இல்லாமல் அது படியும்.
5. ஃபவுண்டேஷனை ஒற்றி எடுக்கவும்.
6.உங்கள் உதடுகளின் இயல்பான நிறத்துக்கு நெருக்கமான ஷேடில் உள்ள லிப் பென்சிலால் உதடுகளை லைன் செய்யவும்.
7. கிரிஸ் கிராஸ் திசையில் லிப்ஸ்டிக்கை தடவவும். உதடுகளின் நடுப்பகுதி, வெளிப்புற ஓரங்கள் மற்றும் அடிப்பகுதிகளை கவனமாக நிரப்பவும்.
8. திட்டுத்திட்டாக உள்ள இடங்களை சீராக்கும்படி லிப்ஸ்டிக்கை சரி செய்யவும்.
9. லிப்ஸ்டிக்கை ஒற்றி எடுத்து கடைசியாக இன்னொரு லேயர் தடவவும்.
10. சிறிய பிரஷ்ஷின் உதவியால் கன்சீலரை தொட்டு, உதடுகளைச் சுற்றித் திருத்தப்பட வேண்டிய இடங்களை சரி செய்யவும்.