கூந்தலின் தன்மை என்பது பெரும்பாலும் பரம்பரைத் தன்மையை பொறுத்ததே. சுருள் சுருளாக அடர்த்திக் கூந்தலோ, அடங்காத முரட்டுக் கூந்தலோ எதுவானாலும் அதன் பின்னணியில் பாரம்பரியத்துக்கு பெரும்பங்கு உண்டு. சாதாரண கூந்தல், வறண்ட கூந்தல் மற்றும் எண்ணெய் பசையான கூந்தல் என 3 வகைப்படும்.
உங்கள் கூந்தல் எந்த வகை என்பதை நீங்களாகவே கண்டுபிடிக்கலாம். தலைக்கு குளித்தது ஈரம்போகத்துடைத்த கூந்தலை 2 நாட்களுக்கு அப்படியே விட்டுவிடவும். அதாவது அந்த கூந்தலின் எண்ணெய் வைக்காமல், மறுபடி தலைக்குக் குளிக்காமல் இருக்கவும். 3வது நாள் உங்கள் கூந்தலை பாருங்கள். விரல்களை கூந்தலின் இடையே நுழைத்துக்கோதி விடுங்கள்.
பிசுபிசுப்புத் தன்மையோ, வறட்சியோ தெரியாமல், கூந்தல் சுத்தமாக இருப்பது போல தோன்றினால் உங்களுடையது சாதாரண கூந்தல். விரல்களை நுழைத்துப் பார்க்கும் போது, கூந்தல் கரடுமுரடாகக் காணப்பட்டாலும், நகங்களில் வெள்ளைத் துகள் தென்பாட்டாலோ, பொடுகு மாதிரி உதிர்ந்தாலோ உங்களுக்கு இருப்பது வறண்ட கூந்தல். கூந்தலில் எந்தப் பொலிவும் இல்லாமல், பளபளப்பே இல்லாமல் காணப்படும்.
எண்ணெயே தடவாமல், எண்ணெய் பசை தென்படும். விரல்களில் வெள்ளையான பிசுபிசுப்பான பசைத் தன்மை தெரியும். அப்படியென்றால் உங்களுடைய கூந்தல் எண்ணெய் பசையானது. கூந்தல் எப்போதும் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பருவநிலை மாற்றங்களுக்கேற்பவும் கூந்தலின் தன்மை மாறும். குளிர்காலத்தில் வறண்டிருக்கும். வெயில் காலத்தில் எண்ணெய் பசையுடன் இருக்கும்.