நகத்தைச் சுற்றி தோல் உரிவது நம்மில் பலர் அனுபவிக்கும் ஓர் பிரச்சனை. இது நம் கை விரல்களின் அழகைக் கெடுப்பதோடு, கடுமையான வலியையும் உண்டாக்கும். நகத்தைச் சுற்றி தோல் உரிவதால், சரியாக சாப்பிடக்கூட முடியாது. சரி, நகங்களைச் சுற்றி ஏன் தோல் உரிகிறது என்று தெரியுமா?
நகத்தைச் சுற்றி தோல் உரிவதற்கு முக்கிய காரணம் சரும வறட்சி, அதிகப்படியான வெயில், குளிர்ச்சியான காலநிலை, அடிக்கடி கைகளை கழுவுவது, கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவது, வைட்டமின் குறைபாடு போன்றவைகள் தான். இது தற்காலிகமானதே. முறையான பராமரிப்புக்களை மேற்கொண்டால், அவை விரைவில் குணமாகி, அவ்விடத்தில் புதிய சருமம் உருவாகும்.
இங்கு நகங்களைச் சுற்றி தோல் உரிந்தால் அதனை சரிசெய்ய சில எளிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி, பலனைப் பெறுங்கள். அதுமட்டுமின்றி, இக்கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா என்றும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கற்றாழை ஜெல்
கற்றாழையில் உள்ள குளிர்ச்சி தன்மை மற்றும் குணப்படுத்தும் குணம் உள்ளதால், அதன் ஜெல்லை தினமும் பலமுறை நகங்களைச் சுற்றி தடவி வந்தால், விரைவில் குணமாவதோடு, நகங்களும் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தினை மசித்து, அதில் சிறிது புளித்த தயிர், பொடித்த சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து, நகங்களைச் சுற்றி தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவி, பின் தேங்காய் எண்ணெயை கைகளில் தடவிக் கொள்ள வேண்டும். இந்த முறையை பின்பற்றினாலும் கைவிரல்கள் மற்றும் நகங்களை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளலாம்.
தேன் மற்றும் எலுமிச்சை சாறு
இது ஓர் அற்புதமான சிகிச்சை. அதற்கு வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, அந்த நீரில் 10 நிமிடம் கைகளை ஊற வைத்து, பின் வைட்டமின் ஈ நிறைந்த எண்ணெயான ஆலிவ் ஆயிலை தடவிக் கொண்டால், கைகளின் அழகு மேம்படும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் துண்டுகளைக் கொண்டு தினமும் பாதிக்கப்பட்ட பகுதியில் மசாஜ் செய்து வந்தால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை மற்றும் குணப்படுத்தும் பொருள், தோல் உரிவதைத் தடுப்பதோடு, அதில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்தவும் செய்யும்.
ஆலிவ் ஆயில்
தினமும் இரவில் படுக்கும் முன் ஆலிவ் ஆயிலை கைவிரல் நகங்களில் தடவி வந்தால், தோல் உரிவது தடுக்கப்படுவதோடு, நகங்களும் நன்கு பொலிவோடு அழகாக காணப்படும்.
சந்தனப் பொடி மற்றும் ரோஸ் வாட்டர்
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடியுடன், 3 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அத்துடன் சிறிது தேன் கலந்து, கைவிரலைச் சுற்றி தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயின் மூலம் சரிசெய்ய முடியாத பிரச்சனைகளே இல்லை. ஏனெனில் அந்த அளவில் தேங்காய் எண்ணெயில் சத்துக்களானது அடங்கியுள்ளது. எனவே அந்த தேங்காய் எண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் கைகளில் தடவி வந்தால், நகங்களைச் சுற்றி தோல் உரிவது தடுக்கப்படும்.
பால்
2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை ஒன்றாக கலந்து, அந்த கலவையை கைவிரல் நகங்கள் மற்றும் அதைச் சுற்றி தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வந்தால், பாலில் உள்ள கொழுப்புச்சத்தானது, கைகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியை விரைவில் குணமடையச் செய்து, மென்மையாக்கிவிடும்.