முகத்தில் பிம்பிள் அல்லது பருக்கள் அதிகம் வருவதற்கு சருமத்தில் எண்ணெய் பசை அதிகம் இருப்பது தான் காரணம். சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகப்படியான எண்ணெயை சுரப்பதால், சருமத்துளைகள் அடைக்கப்பட்டு அதனால் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
ஒருவருக்கு முகத்தில் பருக்கள் அதிகம் இருப்பின், அவரது அழகு முற்றிலும் பாழாகிவிடும். மேலும் பருக்கள் அதிகம் இருந்தால், சிலர் அதனைப் போக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் மன அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடும்.
எனவே தமிழ் போல்ட் ஸ்கை முகத்தில் உள்ள பருக்களைப் போக்க சில ஆயுர்வேத வழிகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தினமும் பின்பற்றினால், 15 நாட்களில் நிச்சயம் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
மஞ்சள் மற்றும் வேப்பிலை
தினமும் குளிக்கும் முன் வேப்பிலையை அரைத்து, அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால், முகத்தில் உள்ள பருக்களை சீக்கிரம் போக்கலாம்.
குங்குமப்பூ மற்றும் தேங்காய் பால்
குங்குமப்பூவை தேங்காய் பாலில் போட்டு அரைத்து அதன் முகத்தில் பிரஷ் பயன்படுத்தி தடவி சற்று மென்மையாக தேய்க்க வேண்டும். இப்படி தினமும் செய்வதன் மூலம் முகத்தில் உள்ள பிம்பிளைப் போக்கலாம்.
கேரட் ஜூஸ் மற்றும் மாம்பழ ஜூஸ்
கேரட் ஜூஸ் மற்றும் மாம்பழ ஜூஸை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால், சருமத்திற்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முகம் பொலிவோடும், பருக்களின்றியும் இருக்கும்.
ஜாதிக்காய்
ஜாதிக்காயை சிறிது நீர் சேர்த்து கல்லில் தேய்த்து வரும் பேஸ்ட்டை பருக்கள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்குவதோடு, அவை வருவதையும் தடுக்கலாம்.
சூரியனுடன் விளையாடவும்
அதிகாலையில் சூரியக்கதிர்கள் சருமத்தின் மீது படும்படி வாக்கிங் செல்லுங்கள். இதனால் சூரியக்கதிர்கள் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி, பாக்டீரியாக்களை அழித்து, முகப்பரு வருவதைத் தடுக்கும்.
தண்ணீர் அதிகம் குடிக்கவும்
பருக்கள் முதலில் உடலினுள் தான் ஆரம்பமாகிறது. அதிலும் டாக்ஸின்கள் உடலில் அதிகம் இருந்தால், உடலினுள் பருக்கள் உருவாக ஆரம்பித்து, நாளடைவில் முகத்தில் தெரியும். எனவே தினமும் அதிகப்படியான அளவு நீரைக் குடித்து, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி பழங்கள் மற்றும் காய்கறிகளையும் தவறாமல் அதிகம் உட்கொள்ளுங்கள்.
எண்ணெய் பசை முடி
உங்கள் முடியில் எண்ணெய் பசை அதிகம் இருப்பின், அதன் காரணமாகவும் பருக்கள் வரக்கூடும். எனவே வாரத்திற்கு 2 முறை தலைக்கு ஷாம்பு போட்டு குளியுங்கள். மேலும் உடல் எடையையும் சீராக பராமரித்து, நல்ல தூக்கத்தை மேற்கொள்ளுங்கள்.