ஒருவரின் முகம் பொலிவிழந்து காணப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று சரியான பராமரிப்புக்களை சருமத்திற்கு கொடுக்காமல் இருப்பது, மற்றொன்று போதிய அளவில் தண்ணீரைக் குடிக்காமல் இருப்பது.
இதில் தற்போது ஏராளமானோர் அழகாக இருக்க வேண்டுமென்று சருமத்திற்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுத்து கவனித்து வருகிறார்கள். ஆனால் தினமும் போதிய அளவில் நீரைக் குடிப்பதில்லை. இதனால் உடலில் நச்சுக்கள் அதிகம் தேங்கி, அதுவே நம் அழகை பெரிதும் பாதிக்கிறது.
உடலில் உள்ள நச்சுக்களை நீக்க தண்ணீர் மட்டும் தான் குடிக்க வேண்டும் என்பதில்லை. ஜூஸ்களையும் குடிக்கலாம். சொல்லப்போனால் ஜூஸ்களைக் குடிப்பதால், நச்சுக்கள் நீங்குவதோடு, உடல் மற்றும் சரும செல்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, பல சரும பிரச்சனைகளைத் தவிர்த்து, இளமையோடு காட்சியளிக்கலாம்.
சரி, இப்போது நம்மை இளமையுடனும், பொலிவோடும் வைத்துக் கொள்ள உதவும் ஜூஸ்கள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து, அவற்றில் பிடித்த ஜூஸை தினமும் குடித்து உங்களை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.
கேரட் ஜூஸ்
கேரட் ஜூஸில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. மேலும் ப்ரீ ராடிக்கல்களை உடலில் இருந்து வெளியேற்றும். தனால் சருமம் சுத்தமாகவும், பொலிவோடும் இருக்கும். அதுமட்டுமின்றி, கேரட் ஜூஸ் சருமத்தை இளமையுடனும் வைத்துக் கொள்ளும்.
மாதுளை ஜூஸ்
மாதுளை ஜூஸ் புதிய செல்களை உருவாக்கவும், பாதிக்கப்பட்ட செல்களை புதுப்பிக்கவும் உதவும். எனவே இந்த ஜூஸை குடிப்பதன் மூலம் சரும பிரச்சனைகள் நீங்குவதோடு, சரும செல்கள் ஆரோக்கியமாக இருந்து, முதுமை தடுக்கப்படும்.
திராட்சை ஜூஸ்
திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது மற்றும் திராட்சை ஜூஸை தினமும் குடிப்பதன் மூலம் சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் காணப்படும். முக்கியமாக திராட்சை ஜூஸை குடித்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும் மற்றும் உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
செர்ரி ஜூஸ்
செர்ரிப்பழத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை ஜூஸ் போட்டு குடிப்பதால், சருமத்தில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறுவதோடு, சருமத்தின் அழகும் அதிகரிக்கும். மேலும் இந்த ஜூஸ் உடலினுள் உள்ள தொற்றுக்களை நீக்கி, பொலிவிழந்து காணப்படும் சருமத்தை பொலிவோடு காட்டும். முக்கியமாக செர்ரி ஜூஸ் கல்லீரலையும் சுத்தம் செய்யும்.
தக்காளி ஜூஸ்
தக்காளியில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஏராளமாக நிறைந்துள்ளது. இது அனைத்து ப்ரீ ராடிக்கல்களையும் வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு மாற்றும். மேலும் தக்காளி திறந்த சரும துளைகளை சுருங்கச் செய்து, முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும்.
வெள்ளரிக்காய் ஜூஸ்
வெள்ளரிக்காய் ஜூஸ் உடலில் உள்ள டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றும். இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடல் சுத்தமாகி, சருமத்தின் அழகு தானாக அதிகரிக்கும்.
ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு ஜூஸில் சூரியக்கதிர்களால் பாதிக்கப்பட்ட சரும செல்களை சரிசெய்யும் வைட்டமின் சி உள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜெனை உற்பத்தி செய்யும். குறிப்பாக இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், சரும சுருக்கங்கள் மற்றும் இதர முதுமைக்கான அறிகுறிகள் தடுக்கப்பட்டு, சருமம் இளமையுடன் காட்சியளிக்கும்.