நீங்கள் பொடுகுத் தொல்லை மற்றும் தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளைச் சந்திக்கிறீர்களா? அதற்கு இதுவரை தீர்வு கிடைக்காமல் அலைபவரா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் இங்கு மருத்துவ குணம் அதிகம் நிறைந்த ஓர் பொருளான இஞ்சியைக் கொண்டு எப்படி தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதென்பது கொடுக்கப்பட்டுள்ளது.
இஞ்சி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமின்றி, தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. முன்பெல்லாம் தலைமுடியின் வளர்ச்சிக்கு இஞ்சியைப் பயன்படுத்தி வந்தார்கள். மேலும் ஆயுர்வேதம் கூட தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க இஞ்சியைப் பரிந்துரைக்கிறது.
சரி, இப்போது இஞ்சி எப்படி நம் தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது என்பது குறித்து விரிவாகக் காண்போம்.
சத்துக்கள்
இஞ்சியின் வேரில் முடியின் வலிமை, ஆரோக்கியம் மற்றும் மென்மையை அதிகரிக்கும் சத்துக்களான மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது.
முடி உதிர்தல்
இஞ்சி முடியின் ஆரோக்கியம் மற்றும் வலிமையை அதிகரிப்பதோடு, முடி உதிரும் பிரச்சனை இருந்தாலும், அதனை சரிசெய்து, மயிர்கால்களை வலிமையாக்கும்.
பொடுகுத் தொல்லை
பொடுகுத் தொல்லையால் பெரும்பாலான மக்கள் கஷ்டப்படுகின்றனர். அவர்கள் 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாற்றினை 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் ஸ்கால்ப்பில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அலச வேண்டும். இப்படி செய்து வந்தால் பொடுகுத் தொல்லை அகலும்.
முடியின் வளர்ச்சி
உங்களுக்கு நீளமான முடி வேண்டுமானால், இஞ்சியைப் பயன்படுத்துங்கள். இஞ்சியில் உள்ள பொருட்கள் ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக வைத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
இரத்த ஓட்டம் மேம்படும்
இஞ்சியைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால், தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
ஃபேட்டி ஆசிட்
இஞ்சியில் ஃபேட்டி ஆசிட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. இது முடி உதிர்வதைக் குறைத்து, தலைமுடி மெலிவதைத் தடுக்கும்.
இஞ்சி சாறு மற்றும் ரோஸ் வாட்டர்
இஞ்சி சாற்றினை ரோஸ் வாட்டருடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து அலசினால், பொடுகுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு
இஞ்சி சாற்றினை எலுமிச்சை சாற்றுடன் கலந்து, அதனை தலையில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து உடனே அலசி விட வேண்டும். இல்லாவிட்டால், அவை ஸ்கால்ப்பை பெரிதும் பாதித்துவிடும்.