முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு பெண்கள் த்ரெட்டிங் செய்வார்கள். சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க வேக்சிங் இருந்தாலும், பெரும்பாலான பெண்கள் த்ரெட்டிங்கை தான் மேற்கொள்கிறார்கள். இதற்கு காரணம் வேக்சிங்கை விட த்ரெட்டிங் செய்வதால் வலி சற்று குறைவாக இருப்பது தான்.
த்ரெட்டிங் புருவங்களில் மட்டுமின்றி, உதட்டிற்கு மேல் மற்றும் நெற்றியிலும் சிலர் செய்வார்கள். சிலருக்கு த்ரெட்டிங் செய்த பின் அவ்விடத்தில் பிம்பிள் வரும். அப்படி பிம்பிள் வருவதற்கு முக்கிய காரணம், சுத்தமில்லாமை மற்றும் முகத்தில் அளவுக்கு அதிகமாக எண்ணெய் இருப்பது தான். த்ரெட்டிங் செய்த பின் பிம்பிள் வருவதை ஒருசில வழிகளின் மூலம் தடுக்கலாம். அது என்னவென்று பார்ப்போமா!!!
செயல் #1
த்ரெட்டிங் செய்யும் முன், முகத்தை நீரினால் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். குறிப்பாக சுடுநீரைப் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் சுடுநீர் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கிவிடும்.
செயல் #2
முகத்தை நீரில் கழுவியப் பின், சுத்தமான காட்டன் துணியால் முகத்தைத் துடைக்காமல், ஒற்றி எடுக்க வேண்டும். ஏனெனில் துடைத்தால், சருமம் பாதிக்கப்படக்கூடும்.
செயல் #3
பின் இயற்கையான டோனரைக் கொண்டு முகத்தைத் துடைக்க வேண்டும். அதிலும் சீமைச் சாமந்தி டீ அல்லது கற்றாழை ஜெல் கொண்டு துடைத்து, உலர விடுங்கள்.
செயல் #4
அதன் பின் பியூட்டிசியனை த்ரெட்டிங் செய்ய அனுமதியுங்கள்.
செயல் #5
த்ரெட்டிங் செய்து முடித்த பின், மீண்டும் டோனரை தடவி, ஒரு ஐஸ் கட்டியால் அவ்விடத்தை ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனால் சருமத்துளைகள் அமையாகி, பிம்பிள் வருவது தடுக்கப்படும்.
செயல் #6
ஒருவேளை உங்களுக்கு முகம் கழுவ வேண்டுமென்பது போல் தோன்றினால், ரோஸ் வாட்டரைப் பயன்படுத்துங்கள். இதனால் த்ரெட்டிங் மூலம் ஏற்பட்ட காயங்கள் மற்றும் பிம்பிள் வருவது தடுக்கப்படும்.
குறிப்பு
த்ரெட்டிங் செய்து முடித்த பின் 6 மணிநேரத்திற்கு அவ்விடத்தைத் தொடக்கூடாது. அதேப்போல் கண்ட க்ரீம்களையும் பயன்படுத்தக்கூடாது. அதுமட்டுமின்றி, குறைந்தது 12 மணிநேரத்திற்கு ஸ்கரப் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.