முகம் பொலிவோடு பிரகாசமாக இருக்க கிளின்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்சுரைசிங் போன்றவற்றை தினமும் செய்து வர வேண்டும். அதில் கிளின்சிங் மூலம் அழுக்குகளும், இறந்த செல்களும் வெளியேற்றப்படும். டோனிங் மூலம் சருமத்துளைகள் இறுக்கப்பட்டு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப்பசை வெளியேறுவது தடுக்கப்படும். மாய்ஸ்சுரைசிங் மூலம் சருமத்தின் pH அளவு தக்க வைக்கப்படும்.
தற்போது கடைகளில் கெமிக்கல் கலந்த டோனர் உள்ளதால், அவற்றைப் பயன்படுத்தும் போது, சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முழுமையாக நீக்கப்பட்டு, சருமத்தின் வறட்சி அதிகரித்து, பொலிவற்றதாக காட்சியளிக்கும்.
ஆனால் இயற்கை டோனர்களைப் பயன்படுத்தினால், அதனால் எண்ணெய் பசை நீங்குவதோடு, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும். உங்களுக்கு இயற்கை டோனர்கள் எவையென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். இங்கு நம் வீட்டு சமையலறையில் உள்ள அந்த டோனர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
புதினா இலைகள்
புதினா இலைகள் சிறந்த டோனராக செயல்படும். மேலும் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை முழுமையாக வெளியேற்றவும் உதவும். அதற்கு புதினா இலைகளை கொதிக்க வைத்த நீரில் போட்டு, குளிர வைத்து, பின் அந்த நீரால் முகத்தைத் துடைத்து எடுத்த பின், மீண்டும் அந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
கற்றாழை
கற்றாழையில் உள்ள ஜெல் சிறந்த மாய்ஸ்சுரைசராக செயல்படுவதோடு, டோனராகவும் செயல்படும். அதற்கு அந்த ஜெல்லை தினமும் முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப்பசை நீங்கும்.
தக்காளி யூஸ்
தக்காளி சருமத்தின் பொலிவைத் தக்க வைத்து, முகத்தை பிரகாசமாக வெளிக்காட்டும். அதற்கு தக்காளி சாற்றில் தேன் கலந்து, அந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர வைத்து, பின் கழுவ வேண்டும்.
ஐஸ் கட்டி
ஐஸ் கட்டி சிறந்த டோனராகவும் செயல்படும். அதற்கு ஐஸ் கட்டியை துணியினுள் வைத்து, முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். இப்படி செய்வதால் முகம் உடனடியாக பிரகாசமாகும்.
வினிகர்
வினிகரும் டோனர் போன்று செயல்படும். வினிகரில் உள்ள அசிட்டிக், சருமத்தின் pH அளவை சீரான அளவில் தக்க வைக்கும். அதற்கு வினிகர் தண்ணீரை சரிசம அளவில் கலந்து, அக்கலவையில் காட்டனை நனைத்து, முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்கள் காணலாம்.