உங்களுக்கு வறுத்தரைச்ச நாட்டுக்கோழி குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வறுத்தரைச்ச நாட்டுக்கோழி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நாட்டுக்கோழி – 1 கிலோ
* வெங்காயம் – 3 (நறுக்கியது)
* தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
* சோம்பு – 2 டீஸ்பூன்
* பிரியாணி இலை – 1
* ஏலக்காய் – 4
* கிராம்பு – 4
* பட்டை – 1 துண்டு
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி – 4 (நறுக்கியது)
* மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் – 2 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
* உருளைக்கிழங்கு – 2 (துண்டுகளாக்கப்பட்டது)
* உப்பு – சுவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு…
* எண்ணெய் – 1 டீஸ்பூன்
* வரமிளகாய் – 6
* மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் – 1 கப்
செய்முறை:
* முதலில் நாட்டுக்கோழியை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் கழுவிய நாட்டுக்கோழியை குக்கரில் போட்டு, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வரமிளகாய், மல்லி சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தேங்காயை சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், மசாலா பொருட்களை சேர்த்து தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மசாலா பொடிகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு வேக வைத்த சிக்கனை சேர்த்து கிளறி, அரைத்த மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான வறுத்தரைச்ச நாட்டுக்கோழி குழம்பு தயார்.